ஐந்து எம்.பி-க்களுக்கு குறி! – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’

“ஆக… வரும் சட்டமன்றத் தேர்தலில் பணம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சொல்லியிருக்கிறாரே!” – என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். குழிப்பணியாரங்களைத் தட்டில் நிரப்பிவிட்டு, “ஸ்டாலினைத்தானே சொல்கிறீர்கள்…” என்றோம். பதிலுக்கு, “ஆக… ஆகா… சரியாகச் சொல்லிவிட்டீர்களே!” என்று கலாய்த்துவிட்டு, பணியாரங்களைச் சுவைத்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“கொங்கு மண்டல தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் அக்டோபர் 21-ம் தேதி அறிவாலயத்தில் நடந்தது.

கூட்டத்தில், ‘ஒவ்வொரு தொகுதிக்கும் பத்தாயிரம் உறுப்பினர்களைச் சேர்க்கச் சொன்னது என்ன ஆனது?’ என்று தலைமையிலிருந்து கேட்டிருக்கிறார்கள். சில நிர்வாகிகள் எழுந்து, ‘ஓர் உறுப்பினர் அட்டை அடிப்பதற்கு ஆகும் செலவு 25 ரூபாய். கூடவே, முப்பெரும் விழாவுக்குப் பொற்கிழி வேறு கொடுக்கச் சொல்லிவிட்டீர்கள். செலவைத் தாங்க முடியலை தலைவரே…’ என்று ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார்கள். இதுகூடப் பரவாயில்லை, கோவையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பேசியதுதான் ஹைலைட்!”

“என்ன பேசினாராம்?”

கனிமொழி

கனிமொழி

“ஸ்டாலினிடம் அவர் நேரடியாக, ‘நம் கட்சியினருக்கு ஆட்சியைப் பிடிப்போமா என்றே சந்தேகம் எழுந்துவிட்டது தலைவரே. கட்சியின் கட்டமைப்பைத்தான் இப்போது வலுப்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக இந்த நேரத்தில் மாவட்டங்களைப் பிரித்து மனஸ்தாபங்களை உருவாக்கிவிட்டீர்கள். கூட்டம் நடத்தி எங்களிடம் கருத்து கேட்கிறீர்கள். அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் புகார் பெட்டிவைத்து புகார்களைப் பெற்றீர்கள். அதைச் சரியாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தாலே, கட்சியினர் உற்சாகமாகியிருப் பார்கள்” என்று வெண்கலச்சட்டியைச் சபையில் போட்டு உடைக்க… ஸ்தம்பித்துவிட்டாராம் ஸ்டாலின்.”

“ஓஹோ…”

“அவர் பேசியதைக் கேட்டு உத்வேகம் பெற்ற மேலும் சில நிர்வாகிகள், ‘வரும் தேர்தலில் ஓட்டுக்கு 2,000 ரூபாய்கூடத் தருவதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது. அக்டோபர் 18-ம் தேதி சூலூர் தொகுதிக்கு உட்பட்ட நீலாம்பூரில் அ.தி.மு.க கொடியேற்றும் விழாவில் பேசிய அமைச்சர் வேலுமணி, ‘எத்தனை ஸ்டாலின் வந்தாலும் நம்மை அசைக்க முடியாது’ என்று பேசியிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வை செயலிழக்கச் செய்யும் அனைத்து அஸ்திரங்களையும் தயார் செய்துவிட்டது வேலுமணி தரப்பு. ஆனால், நாம் அலட்சியமாக இருக்கிறோம்’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், ‘இந்தத் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் மக்கள் மனநிலை மாறாது. அதனால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. நீங்கள் சொல்லும் பிரச்னைகளையெல்லாம் சரிசெய்துவிடுவோம்’ என்று சமாதானம் செய்திருக்கிறார். ஆனாலும், ஒன்றியம், வட்டம் எல்லாம் துடுக்குத்தனமாகப் பேசியதில் ஸ்டாலின் அப்செட் என்கிறார்கள். இனி இது போன்ற கூட்டங்களில் கீழ்நிலைப் பொறுப்பிலிருப்பவர்களைப் பேசவைக்க வேண்டாம்; மேல்மட்ட நிர்வாகிகள் பேசினால் போதும் என்ற முடிவிலிருக்கிறதாம் கட்சித் தலைமை!”

ஸ்டாலின்

ஸ்டாலின்

“சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக்கு எதிராக ஒரு டீம் வந்திருந்ததே… அவர்கள் ஏதும் பேசவில்லையா?”

“எதுவும் பேசவில்லை… ‘சுற்றிலும் மாவட்டச் செயலாளர்களை வைத்துக்கொண்டு, குறைகளைச் சொல்லுங்கள் என்றால் எப்படிச் சொல்வது?’ என்கிறார்கள் அவர்கள். தனக்குப் போட்டியாக சீனியர்கள் யாருக்கும் சீட் கிடைத்துவிடக் கூடாது என்று சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் நினைக்கிறாராம். கோவை மேற்கு மாவட்ட விவசாய அணியிலுள்ள ராமமூர்த்தி, கார்த்திக்கின் தீவிர ஆதரவாளர். சமீபத்தில் இவர் ஐபேக் டீமிடம் மகளிரணி மாநில முன்னாள் துணைச்செயலாளரான மீனாலோகு குறித்து கடுமையாகப் புகார் தெரிவித்தாராம். ஏற்கெனவே, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்தான் இந்த மீனாலோகு. இந்தமுறை மீண்டும் அவருக்கு சீட் கிடைத்து, அவர் ஜெயித்துவிட்டால், அமைச்சர் பொறுப்புக்கு போட்டியாக வந்துவிடுவார் என்பதற்காக ராமமூர்த்தி மூலமாக கார்த்திக் பிரஷர் கொடுக் கிறாராம். இதையெல்லாம் முணுமுணுத்துவிட்டு அதிருப்தியுடன் கிளம்பியிருக்கிறது கொங்கு தி.மு.க வட்டாரம்.”

“ம்ம்க்கும்… தேர்தலே வரவில்லை… அதற்குள் அமைச்சர் பதவிக்குப் போட்டி!”

“அக்டோபர் 5-ம் தேதி முதல் 2ஜி வழக்கின் மேல்முறையீடு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினமும் நடக்கிறது. ‘அரசியல்ரீதியாக எங்களைப் பழிவாங்கவே மூன்றாண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கிறார்கள்’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் கனிமொழி. வழக்கின் போக்கு குறித்து டெல்லியிலிருந்து வந்த தகவல்கள்தான் கனிமொழியின் ஆவேசத்துக்குக் காரணமாம். ‘டிசம்பர் மாதத்துக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகிவிடும், அது உங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம்’ என்று டெல்லியிலிருந்து தகவல் வந்ததாம். துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி ஆகியோருக்கு எதிராகவும் அஸ்திரங்கள் ஏவப் பட்டுள்ளன. ஏற்கெனவே, அமலாக்கத்துறையின் விசாரணையால் ஜெகத்ரட்சகன் ஆடிப்போயிருக்கும் நிலையில், ஆ.ராசாவை ஆட்டம் காணவைக்கும் காட்சிகளும் இனிமேல் அரங்கேறுமாம். இப்படியே போனால், இந்த ஐந்து பேரின் எம்.பி பதவிகளுக்குமேகூடச் சிக்கல் வரலாம். கன்னியாகுமரியுடன் சேர்த்து ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலைக் கொண்டுவந்துவிடுவார்களோ என அரண்டு போயிருக்கிறது தி.மு.க தரப்பு.”

மிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி! - தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’

“ஓஹோ… முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தி.க தலைவர் கி.வீரமணி மனம்விட்டுப் பேசினாராமே?”

“ஆமாம். எடப்பாடியின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கச் சென்ற கி.வீரமணி, ‘உங்கள் எளிமையான நடவடிக்கைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. நாங்கள் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையுமே திராவிடக் கட்சிகளாகத்தான் பார்க்கிறோம். தமிழகத்தில் இந்த இரண்டு திராவிடக் கட்சிகளைத் தவிர மூன்றாவதாக வேறு யாரையும் உள்ளே விட்டு விடாதீர்கள்’ என்று முதல்வரிடம் சொன்னாராம். ‘பா.ஜ.க-வைக் கழற்றிவிடுங்கள்’ என்பதைத்தான் இப்படி மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார் வீரமணி. முதல்வரும் சிரித்துக்கொண்டே, ‘கண்டிப்பாக… எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது’ என்றாராம்” என்ற கழுகாருக்குச் சூடாக காளான் சூப்பை நீட்டினோம்.

சூப்பை ரசித்துப் பருகிய கழுகார், “அதெல்லாம் எடப்பாடி கையிலா இருக்கிறது? இன்னொரு தகவல்… இதுவும் முதல்வர் வீட்டு துக்க சமாசாரம்தான்” என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார்.

“எடப்பாடியைச் சந்தித்து துக்கம் விசாரித்திருக்கிறார் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த். இது சசிகலா உறவுகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ம.நடராசன் மறைவுக்கு எடப்பாடி துக்கம் விசாரிக்க வரவில்லை. போனில் கூடப் பேசவில்லை. தன்மானத்தைவிட்டு ஜெய் ஆனந்த் அவரைச் சந்தித்தது சரியா?’ என்று உறவுகளுக்குள் பட்டிமன்றமே நடக்கிறது.”

“கடந்த வாரம் விவேக் ஜெயராமன்கூட ஏதோ மனம் உருகியிருக்கிறாரே..?”

“ஆமாம். வெற்றிவேலின் மறைவு இளவரசியின் குடும்பத்தினரைக் கடும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது மரண செய்தியறிந்து ஒரு நாள் முழுவதும் சிறையில் உணவு எடுத்துக்கொள்ளாமல், கனத்த அமைதியில் இருந்திருக்கிறார் சசிகலா. அந்த வருத்தம்தான் விவேக் ஜெயராமனின் ட்விட்டர் பதிவிலும் எதிரொலித்தது… ‘எத்தனையோ பேர் விலகியபோதும் நாங்கள் வருந்தியதே இல்லை. இன்றைக்கு விலகினாலும், நாளைக்கு நம்மோடு தான் இருப்பார்கள் என நம்பினோம். ஆனால், இறுதிவரை கூடவே இருந்த அண்ணனை இப்படி இழப்போம் என நினைக்கவில்லை’ என்று ட்வீட் போட்டிருக்கிறார். இதை அஞ்சலியாக எடுத்துக் கொள்வதா, கட்சியினரை ஒருங்கிணைக்கும் அழைப்பாக எடுத்துக்கொள்வதா என்று மருகுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!”

“ம்ம்… சசிகலா விடுதலை எந்த நிலையில் இருக்கிறது?”

“அவரது விடுதலையைத் தள்ளிப் போடுவதற்கான வேலையை எடப்பாடி டீம் சத்தமில்லாமல் செய்துவருகிறதாம். ‘வருமான வரித்துறையினர் வழக்கைவைத்து அவருக்கு நெருக்கடி கொடுக்க முடியுமா?’ என்று டெல்லி தரப்பில் பேசியிருக் கிறார்கள். ‘ஜனவரிக்கு மேல் விடுதலையைத் தள்ளிப்போடுவதில் சிக்கல்கள் இருக்கின்றன’ என டெல்லி தரப்பு கைவிரித்துவிட்டதாம். சசிகலா தரப்பில் அபராதத் தொகையைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாகியிருக்கின்றன” என்று கழுகார் பேசிக்கொண்டிருக்கும்போதே, தொலைக்காட்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘விஜய் மக்கள் இயக்கம் தேவைப்பட்டால் அரசியல் கட்சியாக மாறும்’ என்று பேட்டியளித்தது ஒளிபரப்பானது.

விஜய்

விஜய்

முன்முறுவல் பூத்த கழுகார், “இந்த டயலாக்கை நடிகர் விஜய்தானே கூற வேண்டும்… மகனை அரசியல் களத்துக்குள் நட்சத்திரமாக ஜொலிக்கவிட்டு, அந்த மினுமினுப்பில் தானும் பிரகாசிக்க எஸ்.ஏ.சி திட்டமிட்டிருந்தார். ஆனால், வருமான வரித்துறை ரெய்டு மூலம் அதை ஆஃப் செய்துவிட்டது டெல்லி. துணிச்சலாக எழுந்துவரும் எண்ணம் விஜய்க்கே இல்லை. அந்த விரக்தியில் இருப்பவரை, ‘பா.ஜ.க-வில் இணையப்போகிறார்’ என யாரோ சமூக வலைதளங்களில் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். பாவம், ஆற்றாமையைக் கொட்டிவிட்டார் எஸ்.ஏ.சி” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரபலமான ஒரு கட்டுமான நிறுவனம் 700 குடியிருப்புகளைக் கட்டவிருக்கிறது. அந்தக் குடியிருப்புகளுக்கான வரி விதிப்பில் குளறுபடி நடந்திருக்கிறதாம். அதன் மூலம் நகராட்சிக்கு மட்டும் சில கோடிகள் நஷ்டமாம். இதற்குச் சம்மதிக்காத இரண்டு அதிகாரிகளைப் பணியிட மாறுதல் செய்திருக்கிறார்கள். அந்தக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கு ஆட்சி மேலிடத்தின் இரண்டாவது வாரிசுதான் அனுமதி வாங்கிக்கொடுத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் ஒருவரும் இதற்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார். விரைவில் வருமான வரித்துறையின் ரெய்டு காட்சிகள் அரங்கேறலாம் என்கிறது ஆயக்கர் பவன்” என்றபடி விண்ணில் சிறகுகளைப் படபடத்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* கூட்டணிப் பங்கீட்டின்போது, தன்னுடைய மகன் ரவி பச்சமுத்துவுக்கு குன்னம் சட்டமன்றத் தொகுதியை வாங்கிவிட வேண்டும் என்று கடும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர். இதற்காக தி.மு.க-விடம் இரண்டு முறை பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது என்கிறார்கள்.

* ஏலகிரி, ஓசூர் சிப்காட் மற்றும் திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி சாலையில் நட்சத்திர விடுதிகளைக் கட்டிவருகிறார் அமைச்சர் ஒருவர். இதற்காக சீனாவிலிருந்து உயர்ரக கிரானைட் கற்களையும், நாற்காலி உள்ளிட்ட ஃபர்னிச்சர்களையும் இறக்குமதி செய்திருக்கிறாராம். மலையைக் குறிக்கும் பெயரில் கட்டப்படும் இந்த விடுதிகளைக் கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறது வருமான வரித்துறை.

%d bloggers like this: