கட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி! – இலையை நசுக்கும் தாமரை-விகடன்

சமீபத்தில் சென்னை வந்திருந்த பா.ஜ.க பொதுச்செயலாளர் சி.டி.ரவி, “தமிழகத்தில் பா.ஜ.க-வை வலிமையான கட்சியாக மாற்றி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதே எங்கள் இலக்கு” என்றார். இது வழக்கமாக எல்லா கட்சிகளும் விடும் ‘உதார்’தானே என்று சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், இந்தியாவில் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அந்தக் கட்சி கடந்துவந்த ‘ஹைஜாக்’ வரலாறு அப்படி.

இப்போதும்கூட தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆட்கள் இருக்கிறார்களோ, இல்லையோ… பெரும்பாலான கிராமங்களில் பா.ஜ.க கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. மோடியை வாழ்த்தி போஸ்டர்கள் முளைக்கின்றன. ‘அண்ணன்’ அமிஷ் ஷாவும் ‘அக்கா’ நிர்மலாவும்கூட தாமரையாக மலர்ந்து சுவர்களில் சிரிக்கிறார்கள். திராவிடக் கட்சிகளின் வாக்குவங்கி வலுவாக இருக்கும் கிராமப்புறங்களில் பா.ஜ.க

காலூன்றியிருப்பதாக ஒரு பிம்பம் முன்னிறுத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமை விரும்புகிறதோ, இல்லையோ அவர்களுடன் கட்டாயக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு, அதிரடியாகச் சீட்டுப் பேரங்களையும் பா.ஜ.க தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை கூட்டணிக்கு அ.தி.மு.க மறுத்தால், ரெய்டு பயத்தைக் காட்டி அந்தக் கட்சியை உடைக்கவும் திட்டங்களைத் தயார் செய்திருக்கிறது பா.ஜ.க!

கட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி! - இலையை நசுக்கும் தாமரை

காங்கிரஸ் இல்லாத பாரதம்… திராவிடம் இல்லாத தமிழகம்!

பிரதமர் மோடி அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை, ‘காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைப்போம்’ என்பதே. இதற்கேற்பத்தான் அரசியல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. அஸ்ஸாம் ஆரம்பித்து கர்நாடகா வரை இன்று 12 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. இதுபோக, நான்கு மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆள்கிறது. மெஜாரிட்டியே கிடைக்காமல் போனாலும், மாநிலக் கட்சிகளை உடைத்தும், அரவணைத்தும் தனது ஆட்சி அதிகாரக் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அருணாச்சலப் பிரதேசத்தை அலேக்காகத் தூக்கியது இதற்குச் சரியான உதாரணம் (பார்க்க பெட்டிச் செய்தி). கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களிலெல்லாம் கிட்டத்தட்ட இதே பாணியில்தான் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க.

தமிழகத்தில் பா.ஜ.க முன்னெடுக்கப்போகும் வியூகம், ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ மற்றும் ‘திராவிடம் இல்லாத தமிழகம்’தான். 1967-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றை வீழ்த்திவிட்டால், காங்கிரஸைத் தமிழகத்தில் ஒடுக்கிவிடலாம் என்பது டெல்லி கணக்கு. இது முதற்கட்டம்தான். வீழ்த்தப்படும் பலவீனமான திராவிடக் கட்சியின் இடத்தில் தன் இருப்பைக் கட்டமைத்துக்கொண்டு, மற்ற திராவிடக் கட்சிகளையும் பலமிழக்கச் செய்வது இரண்டாவது கட்டம். இதற்கான வேலையைத்தான் தமிழகத்தில் பா.ஜ.க ஆரம்பித்திருக்கிறது.

கட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி! - இலையை நசுக்கும் தாமரை

மாற்றத்தை உருவாக்கிய மாநிலக் கட்சிகள்!

மத்தியில் காங்கிரஸை வீழ்த்தி, 1977-ல் ஜனதா தளம் அரசு அமைந்த பிறகு டெல்லியில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒருகட்டத்தில் இது இன்னும் வலுவடைந்து, 1996 முதல் 2014-ம் ஆண்டு வரை, மாநிலக் கட்சிகளின் உதவியில்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. தேவ கெளடா, ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள் பிரதமராக வரும் அளவுக்கு மாநிலக் கட்சிகள் பரிணமித்தன. 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்த பிறகு, பா.ஜ.க-வின் வியூகங்கள் மாற்றமடைந்தன. மாநிலக் கட்சிகளால் பல வருடங்களாக ஓரங்கட்டப்பட்டு, அதிகாரச் சுவை கிடைக்காமல் தவித்த சிறிய சமூகங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தது பா.ஜ.க.

உத்தரப்பிரதேச அரசியலில், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இவை இரண்டாலும் ஓரங்கட்டப்பட்ட சமூகத்தினர் பா.ஜ.க பின்னால் அணிதிரண்டனர். இன்று பூரண மெஜாரிட்டியுடன் உ.பி-யில் யோகி ஆதித்யநாத்தின் பா.ஜ.க அரசு அமைந்திருப்பதற்கு வெறும் ராம் மந்திர் அரசியல் மட்டும் காரணமல்ல, இது போன்ற சமூக அரசியலும் பிரதான காரணம்.

பீகாரிலும் இதே வியூகத்தை முன்னெடுத்திருக்கிறது பா.ஜ.க. ஒருகாலத்தில் பாட்னாவில் இருந்துகொண்டே டெல்லி அரசியலைத் தீர்மானித்த லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை ஓரங்கட்டிவிட்டு, மாநில அரசியலில் இரண்டாம் இடத்துக்கு வந்திருக்கிறது பா.ஜ.க. அங்கு இருக்கும் இடமே தெரியாமல், பரிதாப நிலையிலிருக்கிறது காங்கிரஸ். அக்டோபர் 28-ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது பா.ஜ.க. நிதிஷ் குமாருக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படியாக இரண்டாம்கட்டத் தலைவர்கள் யாரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இல்லையென்பதால், 69 வயதாகிவிட்ட அவர் காலத்துக்குப் பிறகு பீகார் அரசியல் தனது கைக்கு வந்துவிடும் என்பது பா.ஜ.க கணக்கு!

ஏன் தமிழ்நாட்டில் முடியவில்லை?

கொள்கைப் பிடிப்புள்ள அல்லது மாநிலத்தின் தேவைக்கேற்ப சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் உருவாக்கிக்கொண்ட மாநிலக் கட்சிகள்… திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், தி.மு.க., அ.தி.மு.க., சிவசேனா, காஷ்மீரில் பி.டி.பி., அஸ்ஸாமில் அஸ்ஸாம் கன பரிஷத், கேரளாவில் கம்யூனிஸ்டுகள். மாநில உரிமைகளைப் பேசும் இந்தக் கட்சிகளிடம், தேசியம் பேசி அவர்களை வீழ்த்துவது பா.ஜ.க-வுக்குக் கடினமான வேலை. ‘தேச ஒற்றுமை’, ‘தேசத்துக்கு ஆபத்து’, ‘பயங்கரவாதிகள் ஊடுருவல்’ எனப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டால் மட்டுமே லாபம் கிடைக்கும்.

‘பங்களாதேஷிலிருந்து வந்த முஸ்லிம்களால் தேசத்துக்கு ஆபத்து’ என்று கூறி, என்.ஆர்.சி பிரச்னையைக் கையிலெடுத்து அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடித்தனர். ஜம்மு – காஷ்மீரில் ‘370-வது சட்டப்பிரிவு தேச நலனுக்கு எதிரானது’ என்று சொல்லி அங்கும் அதிகாரத்தைக் கைப்பற்றியது பா.ஜ.க. இதுபோல, மாநிலப் பிரச்னையை தேசப் பிரச்னையாக மாற்றினால் மட்டுமே பா.ஜ.க-வால், கொள்கைப் பிடிப்புள்ள மாநிலக் கட்சிகளிடம் அரசியல் செய்ய முடியும். தமிழகத்தில் அது எடுபடவில்லை. இதனால்தான், பெரியாரைத் தாக்குவதும், திராவிடக் கொள்கைகளை தேசவிரோதம் என முத்திரைகுத்துவதுமாக அரசியலை தேசியத்துக்கு மாற்றும் முயற்சிகள் அரங்கேறுகின்றன.

அ.தி.மு.க-வுக்கு எதிரான அம்புகள்!

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க., இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால், ஐந்து சீட்கள் மட்டுமே அ.தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. போட்டியிட்ட அந்த ஐந்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது பா.ஜ.க. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், “தமிழகத்தில் அடுத்த ஆண்டு பா.ஜ.க கூட்டணி அரசு அமையும்; தமிழக அமைச்சரவையில் பா.ஜ.க இடம்பெறும்” என்று சொன்னது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

`அ.தி.மு.க-வை மையப்படுத்தியே பா.ஜ.க தலைவர் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சும்மா ஒன்றும் முருகன் இந்த வார்த்தைகளை விடவில்லை. அவர்கள் கையில் அ.தி.மு.க-வின் மொத்தச் சிண்டும் வகையாகச் சிக்கியிருக்கிறது.

முதல்வர், துணை முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள், ஊழல் புகார்கள், இரட்டைத் தலைமை என்று அ.தி.மு.க-வுக்கு எதிரான அம்புகளை எப்போதும் தயாராகவே வைத்திருக்கிறது பா.ஜ.க. அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் பிடி எப்போது வேண்டுமானாலும் இறுகலாம். முதல்வரும் துணை முதல்வரும் ஊழல் புகார் மற்றும் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி ரத்துசெய்யப்பட்ட பாரத் நெட் டெண்டர் தொடர்பான வலுவான ஆதாரங்களும் மத்திய அரசு வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மீது வழக்கு பாய்ச்சவும் ஒரு திட்டம் இருக்கிறது என்கிறார்கள்.

ஊழல் விவகாரங்களால் தமிழக அரசு மீது அதிருப்தியிலிருக்கும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சமீபத்தில் டெல்லிக்கு அழைத்துப் பேசியிருக்கிறது பா.ஜ.க தலைமை. ஆளும்கட்சி எதிர்ப்பு மனநிலையிலுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் சத்தமில்லாமல் ரகசிய ரிப்போர்ட்கள் பெறப்படுகின்றன. சிலரின் வாரிசுகளின் சட்டவிரோத வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களை விரல்நுனியில் வைத்திருக்கிறது மத்திய உளவுத்துறை. அவர்களின் ஒவ்வோர் அசைவும் கண்காணிக்கப்படுகிறது.

இன்னொரு பக்கம், ‘அ.தி.மு.க-வை தாங்கிப்பிடிப்பார்’ என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, சிறையிலிருக்கிறார். அவர் வெளியே வந்தாலும், அவரது அரசியல் எதிர்காலமும்கூட பா.ஜ.க பார்த்து எழுதினால்தான் உண்டு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கும் நிலுவையிலிருக்கிறது. அ.தி.மு.க வாக்குவங்கி வலுவாக இருப்பதாகக் கருதப்படும் கிராமப்புறங்களில் இரட்டை இலைச் சின்னமே மக்கள் மனதில் பிரதானமாக இருக்கிறது. அந்தச் சின்னத்தை முடக்கிவிட்டால், அ.தி.மு.க-வை ஈஸியாக காலி செய்துவிடலாம் என்று கணக்கு போடுகிறது பா.ஜ.க.

இந்த அம்புகளை எய்துவிடுவதாக மிரட்டியே 80 தொகுதிகளுக்கு பேரத்தை ஆரம்பித்து, இறுதியாக 50 தொகுதிகளைப் பெற பா.ஜ.க திட்டமிடுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் 6,000 வாக்குகளுக்கு மேல் பெற்ற 62 தொகுதிகளை வகைப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றில்,

33 தொகுதிகளில் 10,000 வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கிறது. பா.ஜ.க-வின் சமீபகால வளர்ச்சி நடவடிக்கைகள், மக்களைச் சென்றடைந்துள்ள மத்திய அரசின் திட்டங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு, 50 தொகுதிகளுக்குக் குறையாமல் அ.தி.மு.க கூட்டணியில் பெற்றே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறது கமலாலயம். அதேபோல கூட்டணியையும் தாங்களே முடிவு செய்வோம் என்கிறது பா.ஜ.க தலைமை. பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் மற்றும் இதர கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அவர்களின் இலக்கு.

கட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி! - இலையை நசுக்கும் தாமரை

தடுமாறும் அ.தி.மு.க!

ஆனால், கூட்டணி விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறுகிறது அ.தி.மு.க. உள்கட்சிப் பஞ்சாயத்துகளைச் சமாளிப்பதற்கே சரியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, பா.ஜ.க மிரட்டல் கதறியழ முடியாத சிரமங்களை உருவாக்குகிறது என்கிறார்கள்.

நம்மிடம் பேசிய மூத்த அ.தி.மு.க தலைவர் ஒருவர், “கொங்கு மண்டலத்தில் நாங்கள் வலுவாக இருக்கிறோம். வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகளைக் கவர பா.ம.க-வை எங்கள் அணிக்குள் தக்கவைக்க முயற்சி எடுக்கிறோம். நீட் விவகாரம், வேளாண் சட்டம். சி.ஏ.ஏ உள்ளிட்ட விவகாரங் களால் ஏகப்பட்ட அதிருப்தி அலைகளுடன் எங்கள் கூட்டணியில் தேவையில்லாத சுமையாக இருக்கிறது பா.ஜ.க. எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க-வை கழற்றிவிடவே நினைக்கிறார். தன்னை ஒரு தலைவனாகக் கட்டமைத்துக்கொள்ள இது உதவும் என்றும் அவர் கருதுகிறார். ஆனால், அவரால் இது எந்த அளவுக்குச் சாத்தியமாகும் என்று தெரியவில்லை” என்றார்.

அதேசமயம், எடப்பாடி தரப்பில் இன்னொரு கருத்தையும் முன்வைக்கிறார்கள்… “எத்தனை நாளுக்கு நாங்கள் குனிந்துகொண்டே இருப்பது… ‘ஆட்சியைக் கலைத்துவிடுவோம், ரெய்டு நடக்கும்’ என்று பூச்சாண்டி காட்டித்தான் எங்களை வழிக்குக் கொண்டுவந்தார்கள். ஆறு மாதங்களில் ஆட்சியே முடியப்போகிறது. இனி அவர்கள் என்ன செய்தாலும் கவலை இல்லை. ரெய்டு நடத்தினால், அது எங்களுக்குச் சாதகம்தான். கூட்டணிவைக்காததைக் காரணம் காட்டி இப்படிச் செய்கிறார்கள் என்று மக்களிடம் பிரசாரத்தை முன்னெடுப்போம். எங்களுக்கு அனுதாப ஓட்டுகளும் பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பலையும் கூடும்” என்கிறார்கள்.

மொத்தத்தில், அ.தி.மு.க பந்தயக் குதிரை என்றால், அதன் ஜாக்கியாக இருக்கப்போவது பா.ஜ.க என்கிறது கமலாலயம். இலையை வளைக்கும் தாமரையாக தங்கள் கனவுத் திட்டத்துக்கு அ.தி.மு.க மூலமாகக் களம் அமைக்கிறார்கள் பா.ஜ.க தலைவர்கள். அது களமா, பலி பீடமா என்பது தேர்தலில் தெரிந்துவிடும்.

அருணாச்சலப் பிரதேச ஹைஜாக்!

2016, மே மாதம் தனது முதல் அரசாங்கத்தை அஸ்ஸாமில் அமைத்த பா.ஜ.க, ‘வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைத்தது. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ஒருங்கிணைப்பில் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்புதான், வடகிழக்கு மாநிலத்தில் பா.ஜ.க அசுர வளர்ச்சியடைவதற்குக் காரணமாக அமைந்தது. அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீமா காண்டு 2016, ஜூலை மாதம் பதவியேற்றார். சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சியின் 43 எம்.எல்.ஏ-க்களுடன், மாநிலக் கட்சியான அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சிக்குத் தாவிய பீமா காண்டு, காங்கிரஸைத் தவிடு பொடியாக்கினார்.

பீமா காண்டு

பீமா காண்டு

‘அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி, பா.ஜ.க-வின் கள்ளக் குழந்தை. காங்கிரஸ் கட்சிக்குத்தான் மக்கள் வாக்களித்தனர். பட்டப் பகலிலேயே அதிகாரத்தைக் கொள்ளையடிக்கிறது பா.ஜ.க’ என்று காங்கிரஸ் வைத்த ஒப்பாரியை அங்கு கேட்பார் யாருமில்லை. இந்த சர்ச்சைகளுக்கு இடையே, பீமா காண்டுவைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக டக்கம் பரியோ என்பவரை முதல்வராக்க அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி முடிவெடுத்தது. ஆனால், டெல்லியின் ஆதரவு பரிபூரணமாக இருந்ததால், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார் பீமா காண்டு. 2016 டிசம்பர் இறுதியில் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் இணைந்துகொண்டார். இன்று, அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சியும் காங்கிரஸும் அங்கு இருக்கும் இடமே தெரியவில்லை. பா.ஜ.க-வின் ஹைஜாக் யுக்திக்கு உதாரணம் இது!

பா.ஜ.க-வின் ‘ரஜினி வியூகம்’ பலிக்குமா?

கட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி! - இலையை நசுக்கும் தாமரை

டெல்லி பா.ஜ.க ஆரம்பத்தில் ரஜினியைத்தான் நம்பியிருந்தது. தற்போது அந்த நம்பிக்கை சற்றே குறைந்தாலும், அவரையும் ஒரு ஆப்ஷனாக வைத்திருக்கிறது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் காலமிருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார். ஒருவேளை ரஜினி அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தால் அவருடன் கைகோப்பது, வரவில்லை யென்றால் அ.தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர்வது. இதுதான் பா.ஜ.க போட்டிருக்கும் ரூட். இதன் வழியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தவுடன் அ.தி.மு.க-வை காலி செய்துவிட்டு, அந்தக் கட்சியின் கட்டமைப்பை ஹைஜாக் செய்வது. 2031-ல் பா.ஜ.க ஆட்சி. இதுதான் தமிழகத்தில் பா.ஜ.க-வின் ‘பயங்கர’ திட்டமாக இருக்கிறது.

%d bloggers like this: