துலாம்
பழைய வாழ்வை என்றும் மறவாதவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.
கணவன்-மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. முடிவுகள் எடுப்பதில் உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவேண்டாம். வீடு கட்ட அரசு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.
தாயாருக்குச் சின்ன சின்ன அறுவை சிகிச்சை, வந்து போகும். வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களைச் சரி பார்த்து வாங்குவது நல்லது. பணவரவு உண்டு என்றாலும் செலவுகளும் துரத்தும். வாகனம் சார்ந்து சிறு அபராதம் கட்ட வாய்ப்பு உண்டு. பூர்விகச் சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளியூர்ப் பயணங் களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோக ஸ்தானத்தைப் பார்ப்பதால், பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சிலருக்குப் புது வேலை கிடைக்கும். குருபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சல் அதிகமாகும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் கரையும். மூத்த சகோதர வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். அரசு மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.
6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. வீண்பழி விலகும். எங்கும் எதிலும் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்குத் திருமணம் முடியும்.
5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் தன மற்றும் சப்தமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் அலைச்சல் இருக்கும். புதுச் சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களால் உதவியுண்டு.
23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உணவில் கவனம் தெவை. எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகமாகும். வேற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.
கும்பத்தில் குருபவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அதிசாரமாகியும், வக்ரமாகியும் அமர்வதால் இக்காலகட்டத்தில் கவலை நீங்கும். பணம் வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குத் திருமணம் கைகூடும்.
வியாபாரத்தில், மாறி வரும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் ஈட்ட பாருங்கள். தொழில் ரகசியங்கள் கசிந்துவிடாமல் காப்பது அவசியம். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், உணவு, துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். சிலர், நம்பிக்கையான பங்குதாரரை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். அதனால் மன உளைச்சல் ஏற்படலாம். எனினும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம் வரும். நீங்கள் எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி அவ்வப்போது ஏமாற்றங்களையும், இடமாற்றங் களையும் தந்தாலும், கடின உழைப்பால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.
பரிகாரம்
காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரயும் அவர் கோயிலில் அருளும் ஸ்ரீதட்சிணா மூத்தியையும், புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தடைகள் நீங்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறும்.