குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்

விருச்சிகம்

விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும் கொண்டவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். வேலைகளில் அலைச்சல் இருக்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். வீண் கௌரவத்திற்காகச் சேமிப்பைக் கரைக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் அளிக்கவேண்டாம்.

குருப்பெயர்ச்சி  ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

மற்றவர்களை நம்பிக் குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கணவன் – மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. மற்றவர்களை நம்பாமல் முக்கிய விஷயங்களை நீங்களே கவனிப்பது நல்லது. தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும்.

குருபகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் உண்டு. கூடா பழக்கம் விலகும். கனவுத் தொல்லை குறையும். குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வேலை கிடைக்கும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சாதித்துக் காட்டுவீர்கள். தடைப் பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். எதிலும் வெற்றி கிடைக்கும். புது வேலை வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். வீடு, மனை வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் பாக்கியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர்யோகம் உண்டாகும். சொத்து வாங்குவீர்கள். ராஜ தந்திரத்தால் வெற்றியடைவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு, நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சிறு விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வாகனத்தில் செல்லும்போது மிதமான வேகத்தில் செல்லவும்.

வியாபாரத்தில் சூட்சுமங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். வேலையாள்களிடம் கண்டிப்பு வேண்டாம். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோ கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சிறு சிறு அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். பதவி உயர்வு கிடைக்கும். எனினும் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டி வரும். இடமாற்றம் சாதகமாகும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி சிறு சிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும், அவ்வப்போது வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

சஷ்டி திருநாளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியையும், ஸ்ரீவள்ளி – ஸ்ரீதெய்வானை அம்மையரையும் சென்று வணங்கி வழிபடுங்கள். கிரக தோஷங்கள் யாவும் விலகும்; சந்தோஷம் நிலைக்கும்.

%d bloggers like this: