குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு

தனுசு

நியாயத்துக்காகப் போராடும் குணம் கொண்டவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

குருப்பெயர்ச்சி  ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவர். உடல் நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

கூடாத பழக்கங்களைக் கொண்டவர்களைவிட்டு விலகுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தையாருடன் மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்கியம் சீராகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால், கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். குரு 8 -ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஆயுள் பலம் கூடும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் பாக்கியாதிபதி சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயமுண்டு.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் அஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்கள், வீண் செலவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் பூர்வ புண்ணிய விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வீடு மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பெயர், புகழ் கௌரவம் கூடும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. வேற்று மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி உண்டு.

கும்பத்தில் குருபவான்: குரு பகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை அதிசாரமாகியும், வக்ரமாகியும் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவதால் ஆடம்பரச் செலவுகளைக் குறையுங்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். தாயாருடன் கருத்துமோதல்கள் வரும். வி.ஐ.பிகள் மூலம் சாதிப்பீர்கள்.

வியாபாரத்தில் இழப்புகளைச் சரி செய்வீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். முரண்டு பிடித்த வேலையாள்கள் இனி ஒத்துழைப்பார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். சொந்த இடத்திற்குச் சிலர் கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். சிலர் மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில், உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரி களின் மனநிலைக்கு ஏற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சக ஊழியர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி நீங்கள் தொட்டதையெல்லாம் துலங்க வைக்கும்; அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தித் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியையும், ஸ்ரீதெய்வானையையும், கிருத்திகை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். துன்பங்கள் நீங்கும்; நிம்மதி பெருகும்.

%d bloggers like this: