சசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால்.. இன்னும் இரண்டு நாட்களில் சசிகலா எப்போது ரிலீஸ் ஆவார் என்ற தகவல் வெளியாகப் போகிறது. அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் இதை உறுதி செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்குகாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

சிறை தண்டனையை தவிர 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. இதுவரை சசிகலா அந்த அபராதத் தொகையை செலுத்தாத நிலையில் மூன்று ஆண்டுகளை கடந்து பெங்களூர் சிறையில் வாடி வருகிறார்.

இந்த நிலையில்தான், சில தினங்களுக்கு முன்பு தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சசிகலா ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

5 நாட்களில் சசிகலா ரிலீஸ்

இதனிடையே ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த ராஜா செந்தூர்பாண்டியன், இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். ஏனென்றால் கர்நாடக சிறைத்துறை, நன்னடத்தை விதிமுறைகளின்படி ஒவ்வொரு கைதிக்கும் மாதம் மூன்று நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை கிடைக்கும். 43 மாதகாலம் சசிகலா சிறையில் இருந்துள்ளார். எனவே ஒரு மாதத்துக்கு தலா மூன்று நாட்கள் என்று கணக்குப் போட்டால் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைப்பு செய்யப்படும். எனவேதான் அவர் ஒரு வாரத்தில் ரிலீஸ் செய்யப் படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

இரு நாட்களில் தெரியும்

இதனிடையே ராஜா சுந்தரபாண்டியன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், சசிகலாவின் அபராதத் தொகை பற்றிய கர்நாடக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். தற்போது, தசரா பண்டிகை கொண்டாட்டத்தால் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனது நாளை நீதிமன்றத்தில் இருந்து ஏதாவது தகவல் வெளியாகும். சசிகலா கட்ட வேண்டிய அபராத தொகை குறித்து உத்தரவு வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி உத்தரவு வெளியானதும் உடனடியாக நீதிமன்றத்தில் பணத்தை செலுத்துவோம். எனவே அதிகபட்சம் இரண்டு நாட்களில் சசிகலா விடுதலை தொடர்பான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அரசியல் களம்
சசிகலா ரிலீஸ் தேதி இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது. சசிகலா ரிலீஸான பிறகு அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கும், அல்லது குழப்பங்கள் ஏற்படும் என்பதைப்பற்றி அரசியல் விமர்சகர்கள் பல்வேறு யூகங்களை முன்வைத்து வருகிறார்கள். எனவே சசிகலா சிறையில் இருந்து வெளியானதும் அரசியல் களம் பல மடங்கு சூடு பிடிக்கும் என்பது மட்டும் உண்மை.

%d bloggers like this: