கூகுளின் பிரதான லோகோவின் அதே நிறக்கலவையை (சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்) கொண்டு புது லோகோக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் தான் கூகுள் அதன் முக்கிய சேவைகளான ஜிமெயில், ட்ரைவ், மீட் உட்பட பல சேவைகளின் லோகோக்களை மாற்றியமைத்தது. இப்போது இந்த சேவைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் புது லோகோவுடன்தான் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொண்டிருப்பர்.
பலரையும் இந்த புதிய லோகோக்கள் ஈர்க்கவில்லை. ‘பழசே நல்லதானயா இருந்தது?’ என்றுதான் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்துவருகின்றனர். இருந்தும் இப்போது அதன் பிரபல பணப் பரிவர்த்தனை சேவையான Gpay-ன் லோகோவையும் மாற்றப்போகிறதாம் கூகுள்.
சரி, ஏன் திடீரென லோகோக்களை எல்லாம் மாற்றிக்கொண்டிருக்கிறது கூகுள்?
Google Apps new logos
முக்கிய காரணம், அனைத்து சேவைகளின் லோகோக்களும் ஒரே மாதிரியாக நிறங்களைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூகுள் நினைப்பதுதான். இதனால் பார்த்ததும் ஒரு சேவை கூகுளுடையதுதான் என அடையாளம் கண்டுகொள்ள முடியும் என நம்புகிறது. அதனால்தான் கூகுளின் பிரதான லோகோவின் அதே நிறக்கலவையை (சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்) கொண்டு புது லோகோக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வரிசையில்தான் இப்போது கூகுள் பே லோகோவும் மாறப்போகிறது. முதல்கட்டமாக சில பயனாளர்களுக்கு மட்டும் Gpay லோகோ ஏற்கெனவே மாறிவிட்டது. சில பயனாளர்களை இதை சமூக வலைதளங்களில் பதிவிடவும் செய்திருக்கின்றனர்.
பழைய லோகோ நேரடியாகவே GPay என்ற எழுத்துகளுடன் நேரடியாகவே கூகுள் பேவை குறித்தன. ஆனால் புதிய லோகோவை பார்த்ததும் அது GPay தான் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருக்கிறது. இது அடிக்கடி கூகுள் பே ஆப்பை பயன்படுத்துபவர்களுக்கு அசௌகரியமாகத்தான் இருக்கப்போகிறது. நெட்டிசன்கள் சிலர் GPay என்ற எழுத்துகளைக் கொண்டுதான் புதிய லோகோவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். உங்களுக்கு அப்படி எதுவும் தெரிந்தால் கமென்ட்களில் பதிவிடுங்கள்.
இந்த லோகோவுக்கென தனி அப்டேட் எல்லாம் வர வாய்ப்பில்லை. சர்வர் அளவிலேயே இது நேரடியாக மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம். அதனால் திடீரென ‘என்னடா இங்க இருந்த GPay-ய காணோம்’ என யாரும் பதறவேண்டாம். லோகோ எப்போது வேண்டுமானாலும் மாறலாம்!