அமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு?… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் என்ற முருகன், அமமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், கும்பகோணம் முன்னாள் நகர பாமக செயலாளர் பாலகுரு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா, முருகனின் சகோதரி மகன் சக்திவேல் ஆகிய 5 பேரை போலீசார் கடந்த 6ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இவர்களின் கைது பின்னணியில் அமைச்சரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த ரூ800 கோடியை மீட்க அதிமுக நடத்திய மெகா ஆபரேஷன் அம்பலமானது.

இருப்பினும், தொடர்ந்து அமைச்சர் வாங்கிய சொத்துகள் விவரம் மற்றும் யார் யாரிடம் பணம் கொடுத்து வைத்துள்ளார் என்ற வேட்டையை ஆளும்கட்சியினர் போலீஸ் துணையுடன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஷயம் தெரிந்த வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு, தஞ்சை ஆகிய தொகுதிகளில் அதிமுக பலமிழந்து உள்ளதாக வந்த உளவுத்துறை தகவலால் அந்த தொகுதிகளுக்கு தலா ரூ200 கோடி என 4 தொகுதிக்கு ரூ800 கோடி அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் இறந்ததால் அந்த பணத்தை கேட்டு துரைக்கண்ணுவின் மனைவி மற்றும் இளைய மகன் ஐயப்பனை (தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர்) ஆளும்கட்சியினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில், இருவரும் வாய் திறக்காததால் ஐயப்பனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் பினாமிகளாக கருதப்படும் பெரியவன் என்ற முருகன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் துரைக்கண்ணு யார், யாரிடம் பணம் கொடுத்து வைத்து இருந்தார். எங்கெல்லாம் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார் என்பது தெரியவந்தது.
முருகனிடம் மட்டும் துரைக்கண்ணு ரூ200 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரூ120 கோடியை பறிமுதல் செய்துவிட்டதாகவும், அந்த பணம் தற்போது மூத்த எம்பி ஒருவரிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், திருவிடைமருதூர் சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவரிடம் துரைக்கண்ணு கொடுத்து வைத்திருந்த ரூ125 கோடி, பட்டீஸ்வரத்தை சேர்ந்த கான்ட்ராக்டரிடம் இருந்த ரூ2 கோடி மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ9 கோடி மதிப்புள்ள நிலத்திற்கான ஆவணங்களும் மூத்த எம்.பியிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்து மூத்த எம்பி ஆலோசனை நடத்தி உள்ளார்.
மாவட்ட செயலாளர் இல்லாத நிலையில், கட்சிப்பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டாலும், ரூ800 கோடி பணத்தில் ஒரு பகுதியை உங்கள் யாரிடமாவது துரைக்கண்ணு கொடுத்துள்ளாரா என விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த 800 கோடி விவகாரம் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துரைக்கண்ணுவிடம் கொடுத்தது போல், எல்லா அமைச்சர்களிடமும் வாக்காளர்களுக்கு கொடுக்க இதுபோல் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வைத்திருக்கலாம்.
இந்த விவகாரத்தை அந்த மாவட்டத்தில் உள்ள பாஜ மாநில நிர்வாகி ஒருவர் உன்னிப்பாக கவனித்து அக்கட்சியின் தலைமைக்கு அவ்வப்போது தகவல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த பாஜ மாநில நிர்வாகி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூரில் சீட் கேட்டார். ஆனால், கூட்டணியில் உள்ள ஒரு கட்சி அந்த பகுதியின் செல்வாக்கை காரணம் காட்டி சீட் வாங்கி தோற்றது. தற்போது, சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்களை கேட்டு அதிமுகவுக்கு பாஜ நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, நிர்வாகிகள் கேட்கிற தொகுதிகளை கேட்டு பாஜ அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியை மாநில நிர்வாகிக்கும், இன்னொரு தொகுதியை கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் பிரபல வாரிசுக்கும் பாஜ கேட்டு வருகிறது. சீட் விஷயத்தில் அதிமுக பல்டி அடித்தால் இந்த ரூ800 கோடி விவகாரத்தை கையில் எடுக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 5 வருடத்தில் துரைக்கண்ணு ரூ5,000 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரம் பற்றியும் மத்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. சீட் பேரத்தில் இந்த விவகாரத்தை துருப்பு சீட்டாக பயன்படுத்தி மத்திய புலனாய்வு அமைப்பு இந்த விவகாரத்தை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
துரைக்கண்ணுவின் படத்திறப்பு நிகழ்ச்சியை பாபநாசத்தில் நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். படத்தை திறக்க கட்சியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை அழைத்து வரவும் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி தலைமையிடம் தெரிவித்து ேததி கேட்டுள்ளனர். ஆனால் இதுவரை தேதி கொடுக்கவில்லையாம். ₹800 கோடி வந்து சேரும் வரை, தேதி கொடுக்க மாட்டேன் என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
குடும்ப சண்டையால் அம்பலமான உண்மைகள்…
துரைக்கண்ணு குறிஞ்சிப்பாடியில் 150 ஏக்கர் நிலத்தை ஒரு அமைச்சர் மூலம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவர் இறந்த மறுநாள் சடங்குகள் செய்யும் இடத்தில் மகன் ஐயப்பனுக்கும், துரைக்கண்ணுவின் மருமகனுக்கும் இந்த நிலம் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த மருமகன், ஆளும்கட்சிக்கு சொத்து மற்றும் பணம் விவரங்கள் குறித்து ரகசிய தகவல் கொடுத்து வருவதாகவும், இதை வைத்தே அதிமுக மெகா ஆபரேஷனை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

%d bloggers like this: