‘ரெய்டு!’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி

ஓர் ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்க திட்டமிட்டேன். பல மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங் களையும் நடத்தினேன். ஆனால், அ.தி.மு.க ஆட்சியாளர்கள் என்னை முடக்கி விட்டார்கள்.

 

“செங்கோட்டையில் ஆளுநர் பற்றவைத்த நெருப்பு, ஜார்ஜ் கோட்டையை நடுநடுங்கச் செய்திருக்கிறது. முதன்முறையாக ஆளுநர் தரப்பிலிருந்து ஆதாரங்களுடன் ரெட் ஃபைல் ஒன்று டெல்லியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் தொடங்கி முக்கிய அமைச்சர்கள் வரை ரெய்டு பயத்தால் அரண்டுபோயிருக்கிறார்கள்.” கோட்டைப் பக்கம் கொடிகட்டிப் பறக்கும் ஹாட் நியூஸ் இதுதான். இதன் பின்னணி என்ன?

“ஒரு சராசரி ஆளுநராக இருக்க நான் விரும்ப வில்லை. தமிழகத்தில் பொறுப்பேற்றபோது, கல்வித்துறையிலும் சமுதாயரீதியிலும் பல நல்ல மாற்றங்களைச் செய்ய விரும்பினேன். ஓர் ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்க திட்டமிட்டேன். பல மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங் களையும் நடத்தினேன். ஆனால், அ.தி.மு.க ஆட்சியாளர்கள் என்னை முடக்கி விட்டார்கள். சட்டரீதியாகச் செய்ய வேண்டியவற்றில்கூட ராஜ்பவனின் கருத்துகளை எடப்பாடி அரசு கேட்பதில்லை. அதிலும் சமீபத்தில் சில நாள்களாக ஆளுநரை அவர்கள் சற்றும் மதிப்பதே இல்லை. இந்த அவமானம் எனக்கு மட்டும் உரியதல்ல; மத்திய அரசைத்தான் அவர்கள் அசிங்கப்படுத்தியிருக்கி றார்கள். என்னை வேறு மாநிலத்துக்கு மாற்றிவிடுங்கள். இனி தமிழகம் செல்ல நான் விரும்பவில்லை”-இதுவரை இல்லாத மனக்கொதிப்புடன் பிரதமர் மோடியிடம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பற்றவைத்திருக்கும் தீபாவளிச் சரவெடி இது! நவம்பர் 4-ம் தேதி, டெல்லியில் பிரதமரைச் சந்தித்த ஆளுநர், இப்படிக் கொந்தளித்தது மட்டுமல்லாமல் ‘ரெட் ஃபைல்’ ஒன்றையும் பிரதமரிடம் அளித்திருப்பதுதான் ஆளுங்கட்சியில் கிலியை அதிகப்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மோடியிடம் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பேசியிருக்கிறார் ஆளுநர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, வேல் யாத்திரை, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர் ஆகிய விவகாரங்கள்தான் இதில் ஹைலைட். ராஜ்பவனுக்கு நெருக்கமான சிலர் இது குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்…

“பிரதமரிடம் ஆளுநர், ‘எடப்பாடியைப் புரிஞ்சுக்கவே முடியலை. தேனொழுகப் பேசுறார்… ஆனா, நடந்துக்குற விதம் வேற மாதிரி இருக்கு. ஓர் அமைச்சரின் துறையை மாற்றும்போது, ராஜ்பவனிடம் முன்கூட்டியே கலந்து பேசுவதுதான் மரபு. வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைந்தவுடனேயே, அவர் வகித்துவந்த துறையை யாருக்கு ஒதுக்கலாம்னு ராஜ்பவன்கிட்ட கலந்து பேசியிருக்கணும். ஆனா, ‘உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கூடுதலாக வேளாண்மைத்துறையை ஒதுக்குங்க’னு உத்தரவு மாதிரி எனக்கு ‘நோட்’ போட்டு அனுப்புறாங்க.

அக்டோபர் 20-ம் தேதி என்னைச் சந்தித்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம், ‘ஏழரை சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்துல, சில சட்டச் சிக்கல்களுக்கு விளக்கம் கேட்டிருக்கேன். அது கிடைச்சதும் என்னோட முடிவைச் சொல்றேன்’னு விளக்கமா சொல்லி அனுப்பினேன். அப்படியே இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும் தீர்மானிச்சிருந்தேன். இதை முன்கூட்டியே தெரிஞ்சுக்கிட்டு, அவசர அவசரமாக அரசாணை வெளியிட்டுட்டாங்க.

என்னை அமைச்சர்கள் சந்திச்சபோதே, அரசாணை போடப்போறோம்னு சொல்லியிருக்கலாம். இல்லை, அரசாணையை வெளியிடுறதுக்கு முன்னாலயாவது சொல்லியிருக்கலாம். ஆனா, டி.வி நியூஸ் பார்த்து விஷயத்தைத் தெரிஞ்சுக்குற அளவுக்கு போயிடுச்சு. இதெல்லாம் என்னை அசிங்கப்படுத்துறது மாதிரி இருக்கு. ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விவகாரம் எவ்வளவு சென்சிட்டிவ்வான விஷயம்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, அவசரமா அரசாணை வெளியிட்டு, குற்றவாளிகளை ரிலீஸ் பண்றதுக்கு ஏற்பாடு நடக்குது.

எல்லாத்துக்கும் மேல, `வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது’னு சொல்லிட்டாங்க. இந்த விவகாரத்தைச் சர்ச்சையாக்கியதே ஆளுங்கட்சிதான். பா.ஜ.க ஏதோ கலவரம் செய்யப்போவதாக ஒரு கருத்தை இவர்களே உருவாக்கிவிட்டனர். இதுக்கு மேலயும் அமைதியா இருந்தோம்னா அது அரசியல்ரீதியாக நமக்கு நல்லதில்லை’ என்று பிரதமரிடம் விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். இவற்றையெல்லாம் சீரியஸாகக் கேட்டுக்கொண்ட பிரதமர், உடனடியாக அமித் ஷாவைச் சந்தித்து பேசும்படி அறிவுறுத்தியதும், அன்று மாலையே அமித் ஷாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் புரோஹித்” என்றார்கள்.

 

கிலியைக் கிளப்பிய ‘ரெட் ஃபைல்’

எடப்பாடி அரசின் ஊழல் முறைகேடுகள் குறித்து அவ்வப்போது தனி ‘நோட்’ போட்டு ஃபைல்களை மத்திய உள்துறைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது மத்திய உளவுத்துறை. ஆனால், ராஜ்பவனிலிருந்து எந்த ஃபைலும் சென்றதில்லை. முதன்முறையாக பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் தனித்தனியாக ‘ரெட் ஃபைல்’ ஒன்றை ஆளுநர் அளித்திருக்கிறாராம்.

இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலர், “சமீபத்தில் கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடந்தது. மூன்று நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், அமைச்சர் ஒருவருக்குத்தான் குறி வைத்திருக்கிறார்கள். அந்த அமைச்சரின் பணம்தான் ரெய்டு நடத்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. நட்சத்திர விடுதியான ஹெரிடேஜ் நிறுவனத்தில் நடந்த சோதனைக்குப் பின்னணியில் கதர்ச் சட்டை தலைவரின் வாரிசு குறிவைக்கப்பட்டிருக்கிறார்.

சென்னையில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் அமைச்சர் ஒருவரும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரும் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் செயல்படும் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பின்னணியில் அ.தி.மு.க-வின் பவர்ஃபுல் நபர் இருக்கிறார். இதையெல்லாம் மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்தது. இனி அப்படி இருக்கப்போவதில்லை.

பிரதமரைச் சந்தித்த ஆளுநர், ‘கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான கமிஷனை முன்கூட்டியே வாங்கிவிடுகிறார்கள்’ என்று சொன்னதுடன், எந்தெந்த ஒப்பந்தங்கள் யாருக்கெல்லாம் அளிக்கப்பட்டன, நிதி ஒதுக்கீடு எவ்வளவு, எப்படியெல்லாம் முறைகேடுகள் நடந்தன என்பதையெல்லாம் ஆதாரங்களுடன் ‘ரெட் ஃபைலில்’ குறிப்பிட்டிருக்கிறார்” என்றவர்கள், எடப்பாடிக்கு வைக்கப்பட்ட செக் குறித்தும் பகிர்ந்துகொண்டார்கள்.

சிக்கலில் மாங்கனி மகன்!

“மாங்கனி மகன் என்று எடப்பாடியைக் கட்சியினர் கொண்டாடுகிறார்கள். அந்த மாங்கனி நகரத்தில் கட்டப்படும் மருத்துவமனைக்கு வருமானம் எங்கேயிருந்து வந்தது என்று கணக்கு கேட்கப்போகிறோம். கொங்கு மண்டலத்தில் குறுகியகாலத்தில் கோலோச்சிய இரண்டு நிறுவனங்களின் ஜாதகத்தை வருமான வரித்துறை எடுத்திருக்கிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசாணை வெளியிட்டு, மத்திய பா.ஜ.க அரசை ஏதோ இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதுபோல சித்திரித்து விட்டார்கள்; ஆளுநர் முடிவெடுக்கப்போகிறார் என்று தெரிந்ததும், அரசாணை வெளியிட்டு, தன்னை சமூகநீதிக் காவலன் போன்ற பிம்பத்தை உருவாக்கவும் எடப்பாடி முயல்கிறார். வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினால், ‘இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருந்ததால்தான் என்னைத் தாக்குகிறார்கள்’ என்று மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காகத்தான் எடப்பாடி இந்த அரசாணையைக் கொண்டுவந்திருக்கிறாரே தவிர, அவருக்கு மாணவர்களின் நலனில் எல்லாம் அக்கறையில்லை. இந்த நாடகமெல்லாம் எங்களிடம் எடுபடாது. பா.ஜ.க-வை அவர்கள் எதிர்க்கத் தயாராகிவிட்டார்கள். அப்படி எதிர்த்தால், எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே முதுகில் குத்தியவர் எடப்பாடி. அப்போதே இவரைப் பற்றி எங்களுக்குத் தெரியும்” என்றார்கள் உஷ்ணமாக!

ஏற்கெனவே, ‘தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சிக்குப் பிறகுதான் சட்டமன்றத் தேர்தல் வரும்’ என்று அடிக்கடி செய்திகள் றெக்கை கட்டும் நிலையில், ஆளுநர் அளித்திருக்கும் ‘ரெட் ஃபைல்’ அ.தி.மு.க-வினரிடம் உதறலை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துக்கொள்ளும் மனநிலைக்கு இன்னும் முழுவதுமாக அ.தி.மு.க வரவில்லை என்றாலும், சரண்டர் ஆகவும் விரும்பவில்லையாம். இதன் வெளிப்பாடுதான் ‘வேல் யாத்திரை’க்கு அனுமதி தராதது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இறுதியாக, தன்னிடம் புலம்பிய ஆளுநரிடம், “பீகார் தேர்தல் முடிவுகளுக்காக அமைதியாக இருக்கிறேன். அதன் பிறகு ஒரே அடிதான். பிறகு அவர்கள் எழுந்து நிற்கவே முடியாது. நான் சொன்னதாக இந்தத் தகவலையும் அவர்களுக்கு பாஸ் செய்யுங்கள்” என்று ஆவேசமாகச் சொன்னாராம் அமித் ஷா. இந்தத் தகவலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாஸ் செய்யப்பட… குளிர்க் காய்ச்சல் வந்ததுபோலப் பதற்றத்தின் உச்சத்திலிருக்கிறதாம் எடப்பாடி தரப்பு!

அ.தி.மு.க என்னும் குதிரையின் கடிவாளம் தனது கையைவிட்டு நழுவுவதை உணர ஆரம்பித்திருக்கிறது டெல்லி. குதிரையும் சாகக் கூடாது; கடிவாளமும் அறுந்துவிடக் கூடாது என்று சாட்டையை எடுக்கிறார்கள். குதிரை குப்புறத் தள்ளிவிட்டு ஓடுமா… பம்மிப் பதுங்குமா என்பது வரும் நாள்களில் தெரிந்துவிடும்!

%d bloggers like this: