வீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து!

கழுகார் என்ட்ரி கொடுக்கவும், நமது நிருபர் பரபரப்பாக ஓடிவரவும் சரியாக இருந்தது. ‘நடிகர் விஜய் தனது கட்சியைப் பதிவு செய்திருக்கிறார். பிரேக்கிங் நியூஸ்…’ என்றார் நிருபர். பதற்றமே இல்லாமல் புன்முறுவல் பூத்த கழுகார், “தலைப்பைச் சொல்லிவிட்டீர் அல்லவா… பின்னணியை நான் சொல்கிறேன்” என்றபடி நாம் நீட்டிய மிளகாய் பஜ்ஜிகளை சுவைத்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார்.

“நடிகர் விஜய்யின் பெயரில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் புதிய கட்சியொன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும், பொருளாளராக விஜய்யின் தாய் ஷோபாவையும்

குறிப்பிட்டு கட்சியைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் ஷோபாவுக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லையாம். ‘என்னங்க, ஒரு வார்த்தை மகனைக் கேட்டுக்கலாமே…” என்று கண்கலங்கியவரிடம், எஸ்.ஏ.சி கடுமையான வார்த்தைகளைச் சொல்லி, நிர்பந்தித்தே கையெழுத்து வாங்கினாராம். நவம்பர் 5-ம் தேதி மாலையில், கட்சிப் பதிவு செய்யப்பட்ட தகவல் வெளியானதும், விஜய் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே எஸ்.ஏ.சி., ‘நான் பதிவு செய்திருக்கும் அரசியல் கட்சிக்கும், நடிகர் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவே இந்த முயற்சியைத் தன்னிச்சையாக எடுத்திருக்கிறேன். இந்த அரசியல் கட்சியில் இணைவதும், இணையாமல்போவதும் நடிகர் விஜய்யின் தனிப்பட்ட முடிவு’ என்று நறுக்குத் தெறித்தாற்போலக் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே, ‘என் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். என் தந்தை தொடங்கியிருக்கும் கட்சியில் ரசிகர்கள் இணைய வேண்டாம்” என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார் விஜய்!”

“ம்ம்ம்…”

“சமீபத்தில் தன் தந்தையின் ஓப்பன் ஸ்டேட்மென்ட்களால் விஜய்க்கும் எஸ்.ஏ.சி-க்கும் இடையே கடும் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, ‘பா.ஜ.க-வில் சேர வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கென்று ஓர் அமைப்பு உள்ளது. தேவைப்படும்போது அதை அரசியல் இயக்கமாக மாற்றுவோம்’ என்று பேசியிருந்தார் எஸ்.ஏ.சி. ‘உங்களுக்கு இது தேவையா?’ என்கிறரீதியில் தந்தையிடம் ஏகத்துக்கும் எகிறிவிட்டாராம் விஜய். இந்தக் குடும்பப் பஞ்சாயத்தில் கோபமடைந்த எஸ்.ஏ.சி., கட்சியைத் தன்னிச்சையாகப் பதிவு செய்துவிட்டார். அடுத்தடுத்த நாள்களில் இந்தப் பிரச்னை பெரும் பூகம்பமாக வெடிக்கலாம்.”

‘‘தி.மு.க-வில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டப் பிரிப்பு அந்த மாவட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறதே..?”

‘‘தமிழக அரசால் திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் தனியாகப் பிரிக்கப் பட்டதையடுத்து, தி.மு.க-விலும் அமைப்புரீதியாக ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகள் அடங்கிய நெல்லை கிழக்கு மாவட்டம் ஆவுடையப்பனுக்கும், ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் தொகுதிகள் அடங்கிய தென்காசி தெற்கு மாவட்டம் சிவபத்மநாபனுக்கும் ஒதுக்கப்பட்டிருக்

கின்றன. ஏற்கெனவே தன்னிடமிருந்த பாளையங் கோட்டை, திருநெல்வேலி தொகுதிகளை மீண்டும் வசப்படுத்திக் கொண்டார் நெல்லை மத்திய பகுதியின் மாவட்டப் பொறுப்பாளரான அப்துல் வஹாப். உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா சிபாரிசில் வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகள் அடங்கிய தென்காசி வடக்கு பொறுப்பு துரைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.’’

‘‘முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கிரஹாம் பெல்லுக்கு பதவி கிடைக்கவில்லை போலிருக்கிறதே?”

‘‘அதில்தான் பிரச்னை வெடித்திருக்கிறது. ஆவுடையப்ப னிடம் பேச்சுவார்த்தை நடத்திய தி.மு.க தலைமை நிர்வாகிகள், ‘ராதாபுரம், நாங்குநேரி தொகுதியை பெல்லுக்குக் கொடுக்கலாம்னு நினைக்கிறோம். ஆலங்குளம், அம்பாசமுத்திரம் தொகுதிகளை நீங்க எடுத்துக்கோங்க’ என்று கூறியிருக்கிறார்கள். உஷ்ணமான ஆவுடையப்பன், ‘ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்துக்குச் செயலாளரா நான் இருந்திருக்கேன். 1996 தேர்தல்ல 10 தொகுதிகள் ஜெயிச்சுக் கொடுத்திருக்கேன். என்னைய ஏதோ ஒன்றியச் செயலாளர் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்றீங்க’ என்று சீறிவிட்டாராம். அதன் பிறகு அறிவாலயத்தில் நடந்த பஞ்சாயத்தின்போதும், ‘வருவாய்த்துறைரீதியாக ஆலங்குளம் தொகுதி தென்காசி மாவட்டத்துக்குள்ளும், அம்பாசமுத்திரம் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்துக்குள்ளும் வருகின்றன. இரண்டு தொகுதிகளும் வெவ்வேறு மாவட்டத்தில் இருந்தால் எப்படிப் பணியாற்ற முடியும்?’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமே நேரடியாக ஆவுடையப்பன் வெடித்திருக்கிறார்.’’

‘‘ஓஹோ…’’

‘‘அப்பாவு, ஞானதிரவியம் உள்ளிட்டோரும் பெல்லுக்கு எதிராகக் கம்பு சுற்றியுள்ளனர். அதன் பிறகுதான், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த பட்டியல் மாற்றப்பட்டு, புதிய பட்டியல் தயாராகியுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி சீட் எதிர்பார்த்து ஏமாந்துபோன கிரஹாம் பெல், இம்முறையும் மாவட்டப் பொறுப்பும் கிடைக்காததால் கடும் அப்செட். பதவிக்காக கிச்சன் கேபினெட்டிடம் செட்டில் செய்த ‘பரிமாற்றங்கள்’ திரும்பக் கிடைக்குமா என்று தெரியாமல் தவிக்கிறார் பெல்!”

‘‘ம்ம்… தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மீதும் கோவையில் ஏதோ மனக்கசப்பாமே?’’

‘‘தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சமீபத்தில் கோவை சென்றது. தொழில் அமைப்பினர், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமும் இந்தக் குழு கருத்து கேட்டது. குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு வழக்கம்போல அனைவரிடமும் கடுகடுத்திருக்கிறார். ஒரு திட்டத்தை விளக்கமாகச் சொல்ல முற்பட்டவர்களிடம், ‘விஷயத்துக்கு வாங்க…’ என்று கறார் காட்டியிருக்கிறார். இடைமறித்த துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமியை ‘கொஞ்சம் அமைதியா இரும்மா…’ என்று கடிந்தாராம். சாந்தப்படுத்திய கழகச் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ‘சும்மா இருய்யா…’ என்று சீறியிருக்கிறார்.’’

‘‘அவர் இப்படிப் பேசுவது வழக்கம்தானே?’’

‘‘அது கட்சிக்காரர்களுக்குத் தெரியும். ஆனால், வந்திருந்த தொழிலதிபர்களுக்குத் தெரியுமா? அவர்கள் முகம் சுளித்துவிட்டார்கள். தேர்தல் அறிக்கைக்குழுவைச் சந்திக்க வந்தவர்கள், ‘இவர் இப்படிப் பேசுவார்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டோம்’ என்று நொந்தபடி கிளம்பியிருக்கிறார்கள்.’’

கழுகாருக்குச் சூடாக ஃபில்டர் காபியை அளித்துவிட்டு, “துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் திடீரென அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?’’ என்றோம்.

காபியை உறிஞ்சியபடி தொடர்ந்தார் கழுகார். ‘‘நானும் பார்த்தேன். தேனி மாவட்டம் முழுக்க அந்த அறிக்கைதான் சுற்றுகிறது. ‘அரசியல் பதிவுகளில் `துணை முதல்வரின் புதல்வன்’ என்று என்னைக் குறிப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். நான் கட்சியின் தொண்டன் மட்டும்தான். என்றைக்கும் ஒரு தலைவரின் மகனாக என்னை நான் கருதியதில்லை’ என்று அறிவித்திருக்கிறார் ஜெயபிரதீப். தேர்தல் நேரத்தில், ‘மூத்த மகனை எம்.பி-யாக்கிவிட்டு, இளைய மகனையும் வளர்க்கிறார் பன்னீர்’ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பு’ என்கி றார்கள்’’ என்ற கழுகார், ‘‘பெயரைக் கேட்காதீர். விஷயத்தை மட்டும் கேளும்’’ என்றபடி தொடர்ந்தார்.

‘‘முன்னாள் அமைச்சரும், இந்நாள் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளருமான ஒருவர், தான் அமைச்சராக இருந்தபோது சென்னை அண்ணா நகரில் ஒரு வீட்டை வாங்கினார். வீடு வாங்கிய சில மாதங்களிலேயே கிளுகிளுப்பான ஒரு வீடியோ சர்ச்சையில் சிக்கியதால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. வீடு ராசியால்தான் பதவி பறிபோனதாக நினைத்து, அந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டார். இப்போது, அந்தப் பழைய வீட்டுக்கு அருகிலேயே புதிய வீடு கட்டியிருக்கிறாராம். ராசியில்லாத அந்த வீட்டின் அருகே தனது காரை டிரைவர் நிறுத்தினால்கூட, ‘இருக்கிற பதவியும் பறிபோகணும்னு நினைக்குறியா… வண்டியை அந்தப் பக்கம் நிறுத்தாதே’ என்று ஆவேசமாகிறாராம். பழைய வீட்டின் திசையிலிருக்கும் ஜன்னலைக்கூட மனிதர் திறப்பதில்லையாம். ராசி விவகாரம் அந்த அளவுக்கு அவரை ஆட்டுவிக்கிறது!’’

‘‘ம்ம்… வேல் யாத்திரை புஸ்வாணமாகிவிட்டதே?’’

‘‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாக முட்டிமோதியும் ‘வேல் யாத்திரை’க்கு அனுமதி தரவில்லை முதல்வர் பழனிசாமி. சிலபல கூட்டணிக் கணக்குகள் இருந்தாலும்… மாநில உளவுத்துறை, ‘வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், `அமைதிப்பூங்கா’ என்று பெயரெடுத்த தமிழகம், இதுவரை இல்லாத வகையில் பல சட்டம், ஒழுங்கு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அது அ.தி.மு.க-வுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்திவிடும்’ என்று அழுத்தமாக எச்சரிக்கைவிடுத்ததும், அனுமதி மறுப்புக்கு ஒரு காரணம் என்கிறார்கள். எடப்பாடியின் இந்த அதிரடி முடிவால், டெல்லி சூடாகியிருக்கிறது’’ என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘ஆட்சி மேலிடத்தின் மருமகன் ஒருவரின் அட்டகாசம் நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தாண்டவமாடுகிறதாம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அதன் இயக்குநர் பதவி காலியாக இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்ட மருமகனின் ஆட்கள், மொத்த அலுவலகத்தையே குத்தகைக்கு எடுத்துக்கொண்டதுபோல ஆட்டுவித்தார்கள். சமீபத்தில் நகர ஊரமைப்பு இயக்ககத்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியான கணேசனை இயக்குநராக நியமித்திருக்கிறது தமிழக அரசு. மருமகனின் அட்டகாசத்தை ஒடுக்க, கணேசன் சாட்டையை எடுக்க வேண்டும் என்பதுதான் நேர்மையான அதிகாரிகளின் எதிர்பார்ப்பு’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: