சர்க்கரை கோளாறு வந்த பின், இனிப்பு சாப்பிடாமல் இருப்பதைவிட, பிரச்னை வருவதற்கு முன், கவனமாக இருப்பது மிகவும் அவசியம். எல்லா உடல் கோளாறு களுக்கும் அடிப்படை காரணம், உணவு முறையில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதே!
என்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்தவர், ‘தினமும் தான் உடற்பயிற்சி செய்கிறேனே… பின் ஏன் இதயத்தின் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டது?’ என்று கேட்டார்.
தினமும் உடற்பயிற்சி செய்வதால், எந்தப் பிரச்னையும் வரவே வராது என்று, யாராலும் உத்தரவாதம் தர முடியாது. ஒரு மசால் தோசையும், கோக்கும் குடித்தால், குறைந்தது இரண்டு மணி நேரம் நடந்தால் தான் கலோரி கரையும்… செய்கிறோமா?
உணவு, வாழ்க்கை முறை மாற்றத்தோடு, உடல் பிரச்னைகள் ஏற்படுத்துவதில், மரபணுக்களும் பிரதான பங்கு வகிக்கிறது. முறையான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால், பிரச்னைகள் வரும் வாய்ப்பு இருந்தாலும், அதை பல காலம் தள்ளிப் போடலாம். அப்படியே வந்தாலும், மிகக் குறைந்த பாதிப்புகளுடன் சரி செய்யவும் முடியும்.
பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவிற்கு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டபோது, பலரும், ‘அவருக்கு எப்படி சாத்தியம்?’ என்றே கேட்கின்றனர்.
விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவரின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது, உணவுப் பழக்கம், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற ஏதாவது பிரச்னைகள் இருந்ததா என்பதெல்லாம் தெரியாது. தவிர, அவரின் மரபணுவில், இதற்கான காரணி இருந்திருக்கலாம்.
ஒவ்வொரு தனி மனிதனின் மரபணுவும் வேறுபட்டது. ஒருவேளை, அவர் முழு நேர விளையாட்டு வீரராக இல்லாமல் இருந்திருந்தால், 30 வயதிலேகூட இந்தப் பிரச்னை வந்திருக்கலாம்.
நான், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணி செய்து விட்டு, கடந்த இரண்டாண்டுகளாகவே தமிழகத்தில் இருக்கிறேன். 40 வயதிற்குள் இதய கோளாறுகள் வருவது, அங்கு மிகவும் அரிது; ஆனால், நம் நாட்டில், கடந்த சில ஆண்டுகளில், இது மிகவும் இயல்பாகி விட்டது.
அவர்களின் உணவு முறையை நாம் பின்பற்றுவது, மன அழுத்தம், போதுமான துாக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாதது இவையே பிரதான காரணிகள். மேற்கத்திய உணவுகளை, நம் மரபணு ஏற்றுக் கொள்ளாது; விரோதியாகவே பார்க்கும்.
குறைந்த உணவு, அதிக உடலுழைப்பு என்று இருப்பது தான், நம் மரபணுவின் தன்மை. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், பாரம்பரிய பொருட்களில் செய்த பண்டங்களை சாப்பிடுவதே ஆரோக்கியம்.
இனிப்பு சாப்பிட்டவுடன் பிரச்னை வந்து விடாது. தேவையற்ற கலோரி உடலில் சேர்ந்தபடியே இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வெள்ளை சர்க்கரை, மைதா, வனஸ்பதி போன்ற கரையாத, கெட்ட கொழுப்புள்ள பொருட்களில் தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
டாக்டர் அருண் கல்யாணசுந்தரம்,
இதய அறுவை சிகிச்சை நிபுணர்,
‘புரோமெட்’ மருத்துவமனை, சென்னை.
63851 63838