பீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க!

கையில் ஸ்வீட் பாக்ஸுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “உமக்கும் வாசகர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கி, எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்” என்றபடி, தான் கொண்டுவந்திருந்த ஸ்வீட்டை நமக்கு ஊட்டி மகிழ்ந்தார் கழுகார். நாமும் குலோப் ஜாமூன்களைக் கழுகாருக்கு அளித்தபடி, “பீகாரில் பா.ஜ.க – நிதிஷ் கூட்டணி அரியணை ஏறிவிட்டதே?” என்றோம். ஆமோதித்தபடி ஜாமூன்களை வாய்க்குள் உருட்டியவர், “அதேசமயம் அங்கிருந்து வந்திருக்கும் ரிசல்ட் தி.மு.க கூட்டணியையும் கலகலக்க வைத்துவிட்டதுதான்

எலெக்‌ஷன் டிரெண்ட்” என்றபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.“பீகாரில் 75 தொகுதிகளைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் உருவெடுத்திருக்கிறது. ஆனாலும், ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 70 தொகுதிகளில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், 51 தொகுதிகளில் தோல்வியடைந்ததே ஆர்.ஜே.டி ஆட்சியைப் பிடிக்க முடியாததற்குக் காரணம். தேர்தல் முடிவுகள் வெளியான நவம்பர் 10-ம் தேதி, தி.மு.க தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த கட்சியின் சீனியர்கள் சிலர், காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதித்திருக் கிறார்கள்.”

“என்ன பேசினார்களாம்?”

“காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் சீட்களின் எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லியிருக்கிறார்கள். `பீகாரில் காங்கிரஸ் கொடுத்த சீட் ஒதுக்கீடு நெருக்கடியால்தான் விகாஸ்ஷீல் இன்சான் கட்சியையும், அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியையும் ஆர்.ஜே.டி கூட்டணியில் இணைக்க முடியாமல் போனது. கடைசியில் பா.ஜ.க கூட்டணியில் இணைந்த விகாஸ்ஷீல் இன்சான் கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. கூடவே ஒவைசியின் கட்சியும் ஏகத்துக்கு ஓட்டுகளைப் பிரிக்க… ஆர்.ஜே.டி பல தொகுதிகளில் பின்தங்கிவிட்டது. இப்படி காங்கிரஸ் கட்சியால் பீகாரில் ஆர்.ஜே.டி-க்கு ஏற்பட்ட நெருக்கடி, தமிழகத்திலும் நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாது’ என்று ஸ்டாலினிடம் சீனியர்கள் பீடிகை போட்டிருக்கிறார்கள்.”

“ஓஹோ…”

“ஏற்கெனவே, கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளுக்குக் குறையாமல் சீட் ஒதுக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார். ஆரம்பத்திலேயே இதை கட் அண்ட் ரைட்டாக மறுத்த ஸ்டாலின், 20 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று தெளிவுபடுத்தினாராம். இப்போது பீகார் முடிவுகளுக்குப் பிறகு, ‘காங்கிரஸுக்கு 20 தொகுதிகள் மிக அதிகம்’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டது அறிவாலயம். கடந்த வாரம் ஸ்டாலினிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், ‘இன்றைய சூழலில், 190 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. எவ்வளவு தொகுதிகளில் நீங்கள் நேரடியாகப் போட்டியிடுகிறீர்களோ, அது உங்களுக்கு லாபம்’ என்றாராம்.”

“இதற்கு காங்கிரஸ் ரியாக்‌ஷன் என்ன?”

“பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில், நுங்கம்பாக்கத்திலுள்ள ப.சிதம்பரம் வீட்டுக்குச் சென்ற குண்டு ராவ், ‘அவசர ஆலோசனை இருக்கிறது. கிளம்புங்கள்’ என்று அழைத்திருக்கிறார். ‘இப்பதான் கண் ஆபரேஷன் செய்திருக்கிறேன். கண்ணையே திறக்க முடியலை’ என்று சிதம்பரம் சொல்லியும் விடாப்பிடியாக அவரைக் கையோடு இழுத்துக்கொண்டு சத்தியமூர்த்திபவன் வந்துவிட்டாராம் குண்டு ராவ். காங்கிரஸின் அகில இந்தியச் செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக் கிறார்கள். கூட்டத்தில் சஞ்சய் தத்துக்கும் கே.எஸ்.அழகிரிக்கும் இடையே வாக்குவாதம் வெடித்திருக்கிறது.”

“ஏன்?”

“20 மாவட்டத் தலைவர்களை மாற்ற வேண்டும் என்று அழகிரி பட்டியல் அளித்திருந்தாராம். இப்போது மாற்றம் செய்யத் தேவையில்லை என்று சஞ்சய் தத் வாதிட்டிருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டதாம். முடிவில், காலியாக இருக்கும் மாவட்டத் தலைவர் பதவிகளை மட்டும் நிரப்புவது என்று முடிவாகியிருக்கிறது. கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசும்போது, ‘நம்மைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிடச் சொல்லி தி.மு.க-வுக்கு பா.ஜ.க அழுத்தம் கொடுக்கிறது. இந்த நேரத்தில், நாம் சீட் பங்கீட்டில் கடுமை காட்டினால் சரிவராது. 16 தொகுதிகள் வரை நமக்கு ஒதுக்க தி.மு.க தலைமை தயார். கொடுப்பதை ஏற்றுக்கொண்டு கூட்டணியைத் தொடர்வதுதான் புத்திசாலித்தனம்’ என்றாராம். மற்ற தலைவர்களும் இந்தக் கருத்தை ஏற்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்களாம். இந்தச் சூழலில், கே.எஸ்.அழகிரியின் மீது டெல்லிக்குப் புகார் தட்டிவிட்டிருக்கிறது அவரது எதிர்க் கோஷ்டி!”

“புகார் அனுப்பவில்லை என்றால்தானே காங்கிரஸில் ஆச்சர்யம்… இப்போது என்ன அனுப்பியிருக்கிறார்களாம்?”

“வழக்கமாக, தமிழகத்துக்கு காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் வந்தால் உட்லண்ட்ஸ், பாம்குரோவ் ஹோட்டல்களில்தான் அறை எடுத்துத் தருவது சத்தியமூர்த்திபவன் வழக்கம். இந்தமுறை, தினேஷ் குண்டு ராவுக்கு தாஜ் கிளப் ஹோட்டலில் ஐந்து அறைகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார் அழகிரி. இந்த வகையில் மட்டுமே பத்து லட்ச ரூபாய் பில் வந்துவிட்டதாம். ‘இந்த ஆடம்பரம் எதற்கு? குண்டு ராவுக்கு ஐஸ் வைப்பதற்காக கட்சிப் பணத்தைக் கரைக்கிறார்’ என்று அழகிரிக்கு எதிராக ஓலை அனுப்பியிருக்கிறது எதிர்க் கோஷ்டி.”

“தி.மு.க தரப்பில் வேறு ஏதேனும் தகவல் உண்டா?”

“கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் கடந்த ஒரு வாரமாக வயோதிகம் தொடர்பான பிரச்னைகளால் சென்னை கிரீம்ஸ் சாலையிலிருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 10-ம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்று கனிமொழியையும், அவரின் அம்மாவையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். கூடவே ஸ்டாலினின் மனைவி துர்காவும் சென்று ராசாத்தி அம்மாளிடம் பாசமாகப் பேசினாராம். கடந்த ஒரு வாரமாக தெம்பில்லாமல் படுத்துக்கிடந்தவர்… இவர்கள் வந்து சென்றதும் திடீர் உற்சாகம் பெற்றவராக எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கிவிட்டாராம். டாக்டர்களே ஆச்சர்யமடைந்து, அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கும் அனுப்பிவிட்டார்கள்!”

“மருமகள் மீது அவ்வளவு பாசம்போல… சரிதான், பா.ஜ.க செய்திகள் ஏதேனும்..?”

“ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுவிப்பதால் பா.ஜ.க-வுக்கு எந்த லாபமும் இல்லை என்று டெல்லிக்கு மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அளித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தபோதுகூட, ‘ஏழு பேரை விடுவிப்பதால் பா.ஜ.க-வின் வாக்குவங்கி உயரப் போவதில்லை. மேலும், கோவை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளிகள் நீண்டகாலமாக விடுதலை கோருகிறார்கள். இந்த ஏழு பேரை விடுவித்தால், முன்னுதாரணத்தின் அடிப்படையில் அவர்களையும் விடுவிக்க நெருக்கடி எழும்’ என்று எச்சரித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஏழு பேரை விடுவிக்கும் ஐடியாவை டெல்லி கிடப்பில் போட்டதாகத் தகவல்” என்ற கழுகாருக்கு, சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம்.

காபியை உறிஞ்சியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார். “மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு தரப்பிடமிருந்து பண்டல் பண்டல்களாக உருவிவிட்டார்களாம். அவற்றில் சிலவற்றை உணவுத்துறை அமைச்சர்

ஆர்.காமராஜ் வசம் கட்சித் தலைமை ஒப்படைத் திருப்பதாக ராஜகிரி முழுவதும் பேச்சு ஓடுகிறது. இந்த விவகாரத்தில் இவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தும், தன்னிடம் பண்டல்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அளிக்காததால், வைத்திலிங்கம் தரப்பு அதிருப்தியில் இருக்கிறதாம். இதில் அடுத்த அதிரடியாக அ.ம.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பவர்மீது அழுத்தமான ரிப்போர்ட்டைத் தலைமைக்கு அனுப்பியிருக்கிறது போலீஸ்.”

“இதென்ன புதுக்கரடி?”

“அமைச்சர் துரைக்கண்ணுவின் பெயரைப் பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு விடுதிகளை சுரேஷ்குமார் தரப்பு மிரட்டி எழுதி வாங்கிவிட்டதாகப் புகார் எழுந்திருக் கிறது. கும்பகோணம் பேருந்து நிலையம் அருகிலிருந்த சில வீடுகளை இடித்துவிட்டு, மதில் சுவர் கட்டி சுரேஷ்குமார் தரப்பு ஆக்கிரமித்து விட்டதாகவும் போலீஸ் தரப்பில் ‘நோட்’ போட்டிருக்கிறார்கள். விவகாரம் பெரிதாக வெடிக்கலாம்.”

“ம்ம்…”

“சமீபத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் மனம்விட்டுப் பேசிய கமல்ஹாசன், கடும் மூட் அவுட்டில் இருந்தாராம். ‘எவ்வளவு நாள் நாம் தாக்குப்பிடிப்போம்?’ என்கிறரீதியில் அவர் பேசினாராம். அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், கமல் சொன்ன வார்த்தைகளின் பின்னணியை விசாரித்திருக்கிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் பிரபலம் ஒருவர் மூலமாகத்தான், கமல் கட்சியை ஓட்டுவதற்கான பரிமாற்றங்கள் வந்துகொண்டிருந்தனவாம். ஆந்திராவின் உச்சப் பிரமுகர் நெருக்குதலால், அந்த வரத்து ‘கட்’ ஆகியிருக்கிறது. இதனால்தான் கமல் தடுமாறுவதாக ‘உச்’ கொட்டுகிறார்கள் மய்யத்தின் நிர்வாகிகள்” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், தற்போதைய கரூர் மாவட்ட தி.மு.க செயலாளருமான செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக ஒரு வழக்கு நடந்துவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சென்னை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் என்பவரை போலீஸார் நவம்பர் 11-ம் தேதி கைதுசெய்துள்ளனர். தேர்தல் நெருக்கத்தில் செந்தில் பாலாஜியை முடக்கவே, ஆளும் தரப்பு வேகம்காட்டுவதாக தி.மு.க வட்டாரங்கள் கொதிக்கின்றன. விரைவில் செந்தில் பாலாஜியும் கைதுசெய்யப்படுவார் என்கிறது ஆளும் தரப்பு” என்றபடி விண்ணில் பறந்தார்!

%d bloggers like this: