சிக்கிய பணம்! மிச்சப் பணம் எங்கே? தொடரும் விசாரணை! -போட்டுகொடுத்த மருமகன்!-நக்கீரன்

அ.தி.மு.க. வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை சந்திக்க ரூபாய் 20 ஆயிரம் கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்தப் பணம் கண்டெய்னர் வழியாக தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது என நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. எடப்பாடியைப் பொறுத்த வரை இந்தப் பண விநியோகத்தில் ஐந்து பேரை நம்பிக்கையானவர்களாக வைத்திருந்தார்.

வடமாவட்டங்களைப் பொறுத்தவரை பண விநியோகப் பொறுப்பை உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுருவிடம் ஒப்படைத்திருக்கிறார். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை பண விநியோகப் பொறுப்பு தளவாய் சுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை பண விநியோகம் வேலு மணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டெல்டாவில் வைத்திலிங்கத்தையும் காமராஜையும் எடப்பாடி நம்பாததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. வைத்திலிங்கம், ஜெ. காலத்தில் எடப்பாடியுடன் இணைந்து ஐவர் குழு அமைச்சராக இருந்தார். சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில் ஐவர் குழுதான் துறைரீதியான வசூல்-கட்சி நிதி இவற்றைக் கவனித்தது. அதில் விளையாடியது. சசிகலா மறுபடியும் போயஸ் கார்டனில் நுழைந்ததும் இந்த ஐவரையும் வீட்டுச் சிறைக்கு உட்படுத்தி அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் தனியாக சேர்த்து வைத்த சொத்துக்களை பறிமுதல் செய்தார். அதில் எடப்பாடி மட்டும் கணக்கு வழக்குகளில் தெளிவாக இருந்தார். அதனால்தான் எடப்பாடியை ஓ.பி.எஸ்.க்கு பதிலாக முதல்வர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுத்தார்.

வைத்திலிங்கத்திடம் பணம் கொடுத்தால் அது திரும்பி வராது என எடப்பாடிக்கு தெரியும். அதேபோல சசிகலா தரப்புக்கு நெருக்கமான காமராஜிடமும் பணம் தர எடப்பாடி பயந்தார். அதனால்தான் துரைக்கண்ணுவை அவர் தேர்ந்தெடுத்து அவரிடம் பணம் கொடுத்தார் என விளக்குகிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

துரைக்கண்ணு தனது துறையில் பெரிதாக எடப்பாடிக்கு தெரியாமல் எதுவும் செய்துவிட முடியாது. அவரை கண்காணிக்க வேளாண்துறையில் வலுவான அதிகாரியை எடப்பாடி நியமித்திருந்தார். 72 வயதான துரைக்கண்ணுவிற்கு கொரோனா நோய் தாக்கிவிடக் கூடும் என எடப்பாடி முன்கூட்டியே பயந்தார். அதனால் பத்து நாளைக்கு ஒருமுறை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கவும் ஏற்பாடு செய்தார். துரைக்கண்ணு கொரோனாவில் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்புதான் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு அதில் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்தது. அதனால்தான் அவர் விழுப்புரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் கொரோனா பாசிட்டிவ் என அரசு ரிப்போர்ட்டுக் கள் சொல்லவில்லை என துரைக்கண்ணுவின் மெடிக்கல் ட்ரீட்மெண்ட் பற்றி விளக்குகிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டால் உடல்நிலை முன்னேறிவிடும் என டாக்டர்கள் எடப்பாடியிடம் சொன்னார்கள். அதனால் காவேரி மருத்துவமனைக்கு தினமும் இரண்டு முறை ஆள் அனுப்பி பார்த்துக்கொண் டார் எடப்பாடி. அதுதவிர அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி போன்றோர் தினமும் துரைக்கண்ணுவை பார்த்து நிலைமையை எடப்பாடியிடம் விளக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மருத்துவமனையில் ஒரே ஒரு முறைதான் துரைக்கண்ணுவிற்கு சுயநினைவு வந்தது. அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. அவர் செயற்கை சுவாச கருவியில் இணைக்கப்பட்டார். அதிலும் முன்னேற்றமில்லை. தொடர்ந்து எக்மோ எனப்படும் கருவியில் இணைக்கப்பட்டார். எக்மோ கருவியில் இணைக்கப்பட்டாலும் பிற நோயாளிகள் ஒரு மாதம் கழித்துக்கூட சுயநினைவுக்கு வருவார்கள் என மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் பல நாட்களாகியும் துரைக்கண்ணு சுயநினைவுக்கு வரவில்லை. மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரது மூளையை ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்கள்.

அவரிடம் கொடுக்கப்பட்ட 800 கோடி ரூபாய் பணம் என்ன ஆனது என்கிற கேள்விக்கு விடை இல்லை. அதற்கு விடை கண்டுபிடிக்க இரண்டு அமைச்சர்களை நியமிக்கிறார் எடப்பாடி. அதில் ஒருவர் காவல்துறையை கையாளும் வேலுமணி. அவரிடம் உளவுத்துறை இந்த விவகா ரத்தை சரியாக கையாள்வதற்கு, தஞ்சாவூரில் எஸ்.பி.யாக இருந்து துரைக்கண்ணு குடும்பத் திற்கு மிகவும் நெருக்கமானவராக பழகிய மகேஷ்வரனை களமிறக்குகிறார்கள். மகேஷ்வரன் வந்து பொறுப்பேற்கும் போது துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பன் உடுமலைப் பேட்டை, கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயில்களுக்கு பிரார்த்தனை செய்ய கிளம்பி விட்டதாக தகவல் வருகிறது. ஐயப்பனிடம் துரைக்கண்ணு இறந்துவிட்டார் எனத் தெரிவித்து, உடனடியாக புறப்பட்டு வரச் சொல்கிறார் கள். அவர் வந்து சேர்ந்ததும் குடும்பத்தினரிடம் பணம் பற்றிய விசாரணை மருத்துவ மனையிலேயே தொடங்கு கிறது.

துரைக்கண்ணு சமீபத்தில் பல நூறு கோடிகளுக்கு நிலம் வாங்கி யிருந்தார். வீடுகள், மனைகள் என ஏகப் பட்ட சொத்து வாங்கி குவித்திருந்தார். அவையெல்லாம் எந்த பணத்தில் வாங்கப்பட்டது என முதல்கட்ட விசாரணை தொடங்கியது. அவையெல்லாம் ஐயப்பன் மூலமாக முருகன் என்பவர் வாங்கி சேர்த்திருந்தார் என கண்டறியப் பட்டது. ஐயப்பனை இதுபற்றி கேட்டபோது, இவை முதல்வர் கொடுத்த பணத்தில் வாங்கப் பட்ட சொத்துக்கள் அல்ல. இவையெல்லாம் துரைக்கண்ணு விவசாய துறையில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் என விளக்கம் அளித்தார்.

முதல்வர் கொடுத்த பணம் என்ன ஆனது? என்கிற கேள்விக்கு ஐயப்பனிடம் சரியான பதில் இல்லை. துரைக்கண்ணுவின் மருமகன் கனகதாரா என்பவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். முதலில் அவர் வாய் திறக்கவில்லை. ஐயப்பன் வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவதற்கு முன்பு கனகதாராதான் துரைக்கண்ணுவிடம் உதவியாளராக இருந்தார். ஐயப்பனை சுற்றி ரவுடி கும்பல் நடமாடுவது துரைக்கண்ணுவுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் கனகதாராவிடமும் நெருக்கமாக பேசி வந்தார். ஐயப்பன் கனகதாரா இருவரிடமும் ஒருவித மோதல் போக்கு இருந்து வந்தது. இதைக் கண்டுபிடித்த போலீசார் கனகதாராவை மிரட்டி வழிக்கு கொண்டு வந்தனர்.

ஐயப்பனை நாங்கள் ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறோம், நீ உண்மையை சொல் என ஆசைவார்த்தை காட்டினார்கள். கனகதாரா, எடப்பாடி கொடுத்த பணம் சென்னையைவிட்டு தாண்டவில்லை என்றும், ஐயப்பன் கண்ணில் படாமல் துரைக்கண்ணு விசுவாசமாக மறைத்து வைத்த கதையையும் ஒப்பித்தார்.

கனகதாரா சொன்னதன் அடிப்படையில் சென்னையில் பணத்தை போலீசார் கைப்பற்றி னார்கள். இந்த தகவல் பணத்தை வசூலிக்கும் பொறுப்பில் இருந்த இரண்டு அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதில் ஒரு அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் விழாவில் இருந்தார். அவர் அங்கிருந்து சென்னை வந்ததும், ஏற்கனவே இறந்துபோயிருந்த துரைக்கண்ணு சீரியஸாக இருக்கிறார் என செய்தி ஒளிபரப் பானது. கனகதாரா காட்டிக்கொடுத்துவிட்டார். அவர் ஐயப்பனுக்கு எதிராக காய் நகர்த்துகிறார் என தெரிந்ததும், ஐயப்பனுக்கும் கனகதாராவிற்கும் இடையே மோதல் மருத்துவமனையிலேயே வெடித்தது. தி.மு.க.வுக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படும் அந்த மருத்துவமனையில் நடைபெற்ற மோதல்கள் திமுகவின் மேலிடத்திற்கு சென்றது. எப்படியோ மூடி மறைத்து நள்ளிரவில் துரைக்கண்ணு மரணம் அடைந்தார் என அறிவிக்கப்பட்டது.

துரைக்கண்ணுவின் மரணத்தைத் தொடர்ந்து தஞ்சைப் பகுதி ஐ.ஜி.யான ஜெய ராமன் களத்தில் இறக்கப்பட்டார். அவர் ஐயப்பனுக்கு நெருக்கமான முருகன் உள்பட ஆறு பேரை கைது செய்தார். இதற்கிடையே துரைக்கண்ணுவின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு என, அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர்கள் அவரது வீட்டிற்கு செல்லவில்லை. ஒரு அமைச்சர் இறந்தால் மூன்று நாள் துக்கத்தை அரசு கடைப்பிடிக்கும். அந்த அரசு மரியாதை துரைக் கண்ணுவிற்கு வழங்கப்படவில்லை. இன்னும் எவ்வளவு பணம் துரைக் கண்ணு குடும்பம் வைத்திருக்கிறது என இருபதுக்கும் மேற்பட்ட நபர்களை எஸ்.பி. மகேஸ்வரன் தனியாக பிடித்து விசாரித்து வருகிறார்.

இதுபற்றி ஐயப்பனிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை என எல்லாவற்றையும் மறுத்த அவர், கைதானவர்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார். அத்துடன் எடப்பாடியை சந்தித்து விளக்குவதற்காக, கொரோனா டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் என ரிப்போர்ட் வாங்கி காத்திருக்கிறார். ஆனால் கணக்கு வழக்கில் துரைக் கண்ணுவிடம் கொடுக்கப்பட்ட பணத்திற்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. மிச்சப் பணம் எங்கே என்கிற விசாரணையை போலீசார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது பாபநாசம் தொகுதி அ.தி.மு.க. வட்டாரங்கள்.

%d bloggers like this: