இந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்..! – அறிய வேண்டிய அம்சங்கள்!

சுமார் 12.14 லட்சம் இந்து கூட்டுக் குடும்ப அமைப்புக்கு பான் கார்டு உள்ளது. இதில் 65% பேர் வரி தாக்கல் செய்துள்ளனர்!

இந்து கூட்டுக்குடும்பம் என்றால் என்ன, இந்து கூட்டுக்குடும்பச் சட்ட வரையறைக்கான அடிப்படை என்ன, இந்து கூட்டுக்குடும்ப அமைப்பு தானாக உருவாகுமா இல்லை, நாம் ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதுபோல ஆரம்பிக்க வேண்டுமா, இந்து கூட்டுக்குடும்ப அமைப்பு மூலம் வருமான வரியில் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்ற கேள்விகளுக்கு விளக்கமான

பதிலைத் தந்தார் ஆடிட்டர் கோபால்கிருஷ்ண ராஜு. நாணயம் விகடன் இணையவழி மூலமாக நடத்திய கூட்டத்தில் இந்து கூட்டுக் குடும்பமும் வருமான வரி சேமிப்பும் பற்றிப் பேசினார் அவர். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…

இந்து கூட்டுக் குடும்பமும் சட்டங்களும்..!

‘‘2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடிய நமது நாட்டில் `நிரந்தரக் கணக்கு எண் அட்டை’ (பான் கார்டு) வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 44.5 கோடி. இதில் 97.7 சதவிகிதத்தினர் தனிநபர்கள். இதில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 6.3 கோடி. இந்த எண்ணிக்கை 2013-14-ம் நிதியாண்டு முடிவில் 3.5 கோடியாக இருந்தது.

தனிநபருக்கு எப்படி பான் கார்டு தேவையோ அதுபோல, இந்து கூட்டுக்குடும்ப அமைப்புக்கும் தனியாக பான் கார்டு தேவை. வருமான வரித் துறையானது 2019-ம் நிதியாண்டு முடிவில் சுமார் 12.14 லட்சம் இந்து கூட்டுக் குடும்ப அமைப்புக்கு பான் கார்டு வழங்கி யிருக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம், ஏறக்குறைய 65 சதவிகிதத்தினர் அவர்களின் கூட்டுக்குடும்பத்தின் சார்பாக வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.

யாரெல்லாம் இதில் இருக்கலாம்?

இந்து கூட்டுக்குடும்பத்தில் நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கலாம். குடும்பத் தலைவர், தலைவி, அவர்களின் மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரன், பேத்திகள் என நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஓர் இந்து கூட்டுக் குடும்பத்தில் உறுப்பினர்களாக இருக்கலாம். திருமணம் ஆனபின் மகளானவர் இன்னொரு குடும்பத்துக்கு மருமகளாகச் செல்லும்பட்சத்தில் பிறந்த குடும்பத்தின் கூட்டுக்குடும்ப அமைப்பிலும் உறுப்பினராக இருக்கலாம். ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால், அவர்கள் தங்களுக்கான உரிமையை அவர் பிறந்த குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு மாற்றிக்கொடுப்பது நல்லது.

கர்த்தா யாராக இருக்கலாம்?

இந்து கூட்டுக்குடும்பத்தின் தலைவர் `கர்த்தா’ என அழைக்கப்படுகிறார். இவர் இறக்கும்பட்சத்தில் இவருடைய குழந்தைகள் சிறியவர்களாக இருந்தால் அந்த இடத்துக்கு அவரின் மனைவி வரலாம். ஆனால், அவர் கர்த்தா என அழைக்கப்படுவதற்குப் பதில் `மேலாளர்’ என அழைக்கப்படுவார். ஒருவேளை, இறந்துபோன குடும்பத் தலைவருக்கு வயது வந்த மகன் அல்லது திருமணமாகாத மகள் இருந்தால் அவர்கள் கர்த்தா என்ற ஸ்தானத்துக்கு வரலாம். பெண்கள் இந்த ஸ்தானத்துக்கு வருவது 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி ஏற்பட்ட சட்டத் திருத்தத்தால் சாத்தியமானது.

நான்கு சட்டங்கள்..!

இந்து கூட்டுக்குடும்பம் என்பது தொடர்பாக நான்கு சட்டங்கள் இருக்கின்றன. அவை, 1. இந்து திருமணச் சட்டம் 1955, 2. இந்து வாரிசுச் சட்டம் 1956, 3. இந்து மதச் சிறுபான்மையினர் மற்றும் பாதுகாப்பாளர் சட்டம் 1956, 4. இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956. இவையெல்லாம் ஸ்மிருதிகள், வேதங்கள், இந்துமத பழக்க வழக்கங்களின் அடிப்படையில் வடிவமைக்கப் பட்டவையாகும்.

இந்து கூட்டுக்குடும்பம் என்பது இந்துக்கள் தவிர புத்த, சமண, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

ஓர் இந்து கூட்டுக் குடும்பத்தில் நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த எத்தனை பேர் உறுப்பினர்களாக இருந்தாலும் அந்த அமைப்புக்கென்று ஒரு பான் கார்டு போதுமானது!

இந்துச் சட்டத்தில் இரண்டு பிரிவுகள்..!

இந்துச் சட்டத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. அவை, மித்தக்‌ஷரா (Mitaksara), தாயபாகா (Dayabhaga) ஆகும். மித்தக்‌ஷரா என்ற பிரிவின்படி, கர்த்தா உயிருடன் இருக்கும்போது அந்தக் கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்த ரத்த சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் இடையே சொத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். மேற்குவங்கம், அஸ்ஸாம் தவிர மற்ற மாநிலங்களில் இந்தப் பிரிவுதான் நடைமுறையில் இருந்துவருகிறது. தாயபாகா பிரிவின்படி, கர்த்தாவின் அனுமதியின்றி யாரும் எதுவும் செய்ய முடியாது.

இந்து கூட்டுக்குடும்ப அமைப்பை உருவாக்குவது எப்படி?

ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதுபோல, கூட்டுக்குடும்பமானது ஆரம்பிக்கப் படுவதில்லை. மாறாக, என்றைக்கு ஓர் ஆணுக்குத் திருமணம் ஆகிறதோ, அந்தத் தேதியிலிருந்து இந்துக் கூட்டுக்குடும்பம் என்பது ஒருவர் விரும்பியோ, விரும்பாமலோ ஆரம்பமாகிவிடும். ஆனால், இந்த அமைப்பின் மூலம் ஏதேனும் வணிகம் செய்ய வேண்டுமெனில், அதற்கென்று வங்கிக் கணக்கும், பான் கார்டும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஓர் இந்து கூட்டுக்குடும்பத்தில் நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த எத்தனை பேர் உறுப்பினர்களாக இருந்தாலும் அந்த அமைப்புக்கென்று ஒரு பான் கார்டு போதுமானது.

உதாரணமாக, ஒருவர் தனது குடும்ப அமைப்பின் மூலம் வணிகம் செய்ய அல்லது குடும்பத்தின் அசையா சொத்துகள் மூலம் வருமானம் ஈட்ட அல்லது பங்குச் சந்தைகளில் பங்குகளை வாங்க, விற்க அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருமானம் ஈட்ட நினைத்தால், முதலில் அவர் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பதுடன், வங்கிக் கணக்கு ஒன்றையும் தொடங்க வேண்டும். இதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டு, திருமணச் சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்களை ஆதாரமாகக் கொடுக்கலாம். ரேஷன் கார்டு இல்லாதபட்சத்தில் ஆணைப் பத்திரம் (affidavit) ஒன்று கொடுத்தால் போதுமானது.

வருமான வரி எவ்வளவு?

தனிநபர் ஒருவர் வருமானம் ஈட்டினால், அதற்கு எப்படி வரி செலுத்த வேண்டுமோ, அதேபோலதான் இந்து கூட்டுக் குடும்ப அமைப்பின் மூலம் ஈட்டும் வருமானத்துக்கும் வரி கட்ட வேண்டும். வருமானவரி சட்டத்தைப் பொறுத்தவரை, தனிநபருக்கான வருமான வரி விதிமுறைகளும், கூட்டுக்குடும்பத்துக்கான விதிமுறைகளும் ஏறக்குறைய ஒன்றுதான்.

இந்து கூட்டுக்குடும்பம் மூலம் ஈட்டக்கூடிய வருமானத்தில் ரூ.2.5 லட்சம் வரைக்கும் எந்த வரியும் இல்லை. அதன்பின் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5%, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%, ரூ.10 லட்சத்துக்கு மேல் 30% என வரி விதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கூட்டுக்குடும்ப அமைப்பும் வருமான வரி ஷரத்து 80சி–யின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் அதற்கு வரி விலக்கு உண்டு.

உதாரணமாக, ஒரு தனிநபரின் வருமானம் ரூ.10 லட்சம் எனில், அவர் வரிவிலக்கு எதுவும் கோராதபட்சத்தில் ரூ.2.5 லட்சம் வரி விலக்கு தவிர்த்து மீதமுள்ள ரூ.7.5 லட்சத்துக்கு சுமார் ரூ.1.25 லட்சம் வரியாகக் கட்ட வேண்டியிருக்கும் (ரூ.2.5 லட்சம் x 5% + 5 லட்சம் x 20%). இதுவே தனிநபராகவும், கூட்டுக்குடும்ப அமைப்பு மூலமாகவும் வரி தாக்கல் செய்யும்போது மொத்தம் ரூ.10 லட்சம் வருமானம் வரும் பட்சத்தில் தனிநபரும், கூட்டுக்குடும்ப அமைப்பும் வரி எதுவும் கட்ட வேண்டி யிருக்காது. இது எப்படி சாத்தியம்?

ரூ.2.5 லட்சத்துக்கு வரி கிடையாது. மீதமுள்ள ரூ.2.5 லட்சத்துக்கு 5% வரி எனில், ரூ.12,500 வரி கட்ட வேண்டியிருக்கும் ஆனால், வருமானம் ரூ.5 லட்சம் என்பது ரூ.12,500-க்கு வரி விலக்கு (ரிபேட்) கிடைக்கும். ஆக, ஒட்டுமொத்தத்தில் வரி எதுவும் கட்ட வேண்டிய நிலை ஏற்படாது.

தனிநபர் எனில் மருத்துவ சிகிச்சைக்கு செலவிடப்படும் ரூ.40,000 வரையும், கூட்டுக் குடும்ப அமைப்பு எனில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரிக் கழிப்பு உண்டு. இந்து கூட்டுக்குடும்ப அமைப்பின் மூலம் அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு எடுக்க முடியும். அப்படி எடுக்கப்படும்பட்சத்தில் இந்து கூட்டுக்குடும்ப அமைப்புக்கு வரிக் கழிப்பு உண்டு. கூட்டுக்குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் அந்த அமைப்புக்கே பரிசளித்தால், அது ரூ.50,000-க்கு குறைவாக இருக்கும்பட்சத்தில் வரிக் கழிப்பு உண்டு. அதற்கு மேல் எனில், வரி கட்ட வேண்டியிருக்கும்’’ என பேசி முடித்தவர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதிலிருந்து சில முக்கியமான விஷயங்கள்…

தனிநபர் வருமானத்தையும், கூட்டுக் குடும்ப வருமானத்தையும் தனித்தனியாக வைத்திருப்பது நல்லது. இங்கேயிருந்து அங்கே, அங்கேயிருந்து இங்கே போடும் `கிச்சடி’ வேலையைத் தவிர்த்தல் நல்லது.

தனிநபர் வருமானவரி தாக்கல் செய்வதற்கு படிவம் – 16 முக்கியமானதுபோல, கூட்டுக் குடும்ப வருமானத்துக்கு நிதியாண்டுக்குரிய வங்கி ஸ்டேட்மென்ட் முக்கியம்.

கூட்டுக்குடும்ப அமைப்பு தேவையில்லை எனக் கருதும்பட்சத்தில், அனைத்து உறுப்பினர்கள் சம்மதத்தின் பேரில் முழுவது மாகக் கலைத்துவிடலாம். இதில் சட்ட சிக்கல் எழ வாய்ப்பில்லை.

கூட்டுக்குடும்ப அமைப்புக்கான வருமானத்தை வணிகம், சொத்து மீதான வாடகை, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, திருமணத்தின்போது கிடைக்கும் பரிசுகள் எனப் பல வழிகள் மூலம் பெருக்க முடியும்.

இது குறித்து மேலும் தகவல்களை அறிய இந்திய வருமானவரித் துறை இணையதளத்தின் https://www.incometaxindia. gov.in/Pages/tax-payers-information/booklets.aspx பக்கத்துக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம். அல்லது வருமான வரி அலுவலகங்களிலும் இந்த கையேடுகள் கையிருப்பு இருக்கும்பட்சத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியின்மூலம் இந்து கூட்டுக்குடும்பத்துக்கான வரிமுறைகளை வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்று நம்பலாம்!

%d bloggers like this: