என்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா! – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…

மதுரையில் ஏதோ சத்தம் கேட்கிறதே!’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். நெய் முறுக்கைத் தட்டில் நிரப்பிவிட்டு, ‘‘மு.க.அழகிரியைக் குறிப்பிடுகிறீரா?’’ என்றோம். ஆமோதித்த கழுகார், “பல மாதங்களாக அவர் தரப்பில் சொல்லிவந்த புதுக்கட்சி தொடர்பான பழைய பல்லவிதான்… ஏதோ இப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தவர்போல, தீபாவளி அன்று தன் ஆதரவாளர் களிடம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறார் அழகிரி’’ என்றபடி செய்திகளுக்குள் தாவினார்.

‘‘மு.க.அழகிரியை தி.மு.க-விலிருந்து நீக்கி ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவர் மீண்டும் தி.மு.க-வில் சேர்வதற்கு எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, சென்னையில் அழகிரி நடத்திய அமைதி ஊர்வலமும் எடுபடவில்லை. அவ்வப்போது தி.மு.க-வுக்கு எதிராகச் சாபம் விட்டுக்கொண்டு மௌனவிரதம் இருந்தவர், நவம்பர் 14-ம் தேதி தி.மு.க-விலிருக்கும் தன் ஆதரவாளர்கள் மற்றும் ஒதுங்கியிருக்கும் கட்சியினரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘என்னய்யா, என்னை ஞாபகம் இருக்கா?’ என்று அழகிரி கேட்டதும், பலரும் குழைந்து பேசியிருக்கிறார்கள். ஒரு சிலர், ‘அண்ணே… மறுபடியும் நீங்க ஆக்டிவ்வா வரணும்’ என்று தூண்டில் போட்டிருக்கிறார்கள். அதற்கு அழகிரி, ‘நானும் அந்த முடிவுலதான் இருக்கேன்ய்யா. டிசம்பர் மாசத்துல இருந்து நாம வேகமாச் செயல்படலாம். நம்ம ஆளுங்களை யெல்லாம் தயார்ப்படுத்துங்க’ என்றாராம்.’’

‘‘ஓஹோ… சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிறாரோ?’’

மு.க.அழகிரி

மு.க.அழகிரி

‘‘ஆமாம். நவம்பர் 20-ம் தேதி இது தொடர்பாக சிலரிடம் பேசவும் திட்டமிட்டிருக்கிறாராம். டிசம்பர் மாதத்தில் அரசியல் பல்ஸ் தெரிந்து கொண்டு, ‘கலைஞர் தி.மு.க’ என்று புதிய கட்சி தொடங்கவும் முடிவெடுத்திருக்கிறது அழகிரி தரப்பு. இதற்கிடையே, அழகிரியை பா.ஜ.க-வுக்குள் கொண்டு வர ஒரு டீம் பிரயத்தனம் செய்கிறது. ஆனால், இதை மறுக்கும் அழகிரிக்கு நெருக்கமானவர்கள், ‘அழகிரி பா.ஜ.க பக்கம் செல்வார் என்று சொல்வதெல்லாம் அபத்தம். சாகும்வரை தன் தந்தையின் பெயரிலான இயக்கத்தில்தான் இருப்பேன் என்று அடிக்கடி சொல்லிவருகிறார் அழகிரி. அவர் தனிக்கழகம் தொடங்கி தாய்க்கழகத்துக்குள் கலகம் செய்வார்; தேவைப்பட்டால் பா.ஜ.க-வுடன் கூட்டணியும் அமைப்பார். ஆனால், எதிர்காலத்தில் எப்படியும் தி.மு.க-வைக் கைப்பற்றிவிடலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது’ என்கிறார்கள். முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், முன்னாள் கவுன்சிலர் எம்.எல்.ராஜ் உள்ளிட்ட சிலரைத் தவிர சொல்லிக்கொள்ளும்படி ஆதரவாளர்கள் அழகிரியிடம் இப்போது இல்லை. இந்தச் சூழலில், அழகிரி கொளுத்தியிருக்கும் வெடி, அதிர்வைக் கிளப்புமா அல்லது வழக்கம்போல நமுத்துப்போகுமா என்பதுதான் கேள்வி!’’

“கனிமவளத்துறை தொடர்பாக ஸ்டாலினின் அறிக்கை, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே..?”

“அ.தி.மு.க-வின் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் மகனுக்கு விதிகளைமீறி கல் குவாரியைக் கொடுத்தது தொடர்பாக அந்த அறிக்கையில் சீறிய ஸ்டாலின், ‘சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நவம்பர் 16-ம் தேதி மதியம் அறிக்கை வெளியான அடுத்த இரண்டு மணி நேரத்தில் அ.தி.மு.க-வின் ஐடி தரப்பு, ‘தி.மு.க ஆட்சியின்போது கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கெளதம சிகாமணிக்கு மண் குவாரியை வாரிக் கொடுத்ததும்… அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் ஸ்டாலினுக்குத் தெரியாதா?’ என்று பதிலடி கொடுத்திருக்கிறது.

‘‘சரிதான்… அமித் ஷா வருகை குறித்த தகவல் ஏதேனும்?’’

மிஸ்டர் கழுகு: என்னய்யா... என்னை ஞாபகம் இருக்கா! - பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி...

“நவம்பர் 21-ம் தேதி தமிழகம் வரும் அமித் ஷாவின் புரோகிராம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லையாம். ‘ராஜ்பவனில் தங்குகிறார். ஆளுநரோடு சந்திப்பு நடத்துகிறார். பிறகு மாநில பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்’ ஆகியவை மட்டும் முடிவாகியிருக் கின்றன. தனிப்பட்ட சந்திப்புகள் குறித்த விவரங்கள் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்திலிருந்து அமித் ஷாவுடன் சந்திப்புக்கான நேரம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், 16-ம் தேதி மதியம் வரை எந்த பதிலும் வராததால், முதல்வர் தரப்பு அப்செட்!”

‘‘ம்ம்…”

‘‘ஏற்கெனவே டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக நிலவரம் குறித்துப் பற்றவைத்துவிட்டு வந்தார் அல்லவா… அப்போதே, தான் நேரடியாகக் களத்தில் இறங்குவது என்கிற முடிவுக்கு அமித் ஷா வந்துவிட்டாராம். இந்தப் பயணம் முழுக்க தேர்தல் யுக்திகளை வகுக்கும் பயணமாக இருக்கப்போகிறது என்கிறது கமலாலயம். ‘பீகார் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருந்த அமித் ஷா, இனி மேற்குவங்கத்திலும் தமிழகத்திலும் தீவிர கவனம் செலுத்தப்போகிறார்’ என்கிறார்கள்.’’

‘‘ரஜினியை அமித் ஷா சந்திக்கப்போவதாகவும் கூறப்படுகிறதே..?’’

‘‘ஃபிஃப்டி ஃபிஃப்டி சான்ஸ் இருக்கிறது. அமித் ஷா தரப்பிலிருந்து உறுதியான பதில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆடிட்டர் குருமூர்த்திதான் இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாராம். ரஜினியிடம், ‘அரசியலுக்கு நேரடியாக வர முடியா விட்டாலும் பரவாயில்லை… பா.ஜ.க-வுக்காக வாய்ஸாவது கொடுங்கள்’ என்று குருமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதைக் கூறியிருந்தேன் அல்லவா… அதை அமித் ஷா வாயால் ரஜினியிடம் சொல்லவைக்கத் திட்டமிடுகிறது ஆடிட்டர் தரப்பு.’’

‘‘ஓஹோ…’’

“பா.ஜ.க-வில் வானதி சீனிவாசனுக்கு தேசிய அளவில் மகளிரணி பொறுப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கேரள மாநிலப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக் கிறது. இதில், முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடும் அப்செட் என்கிறார்கள். டெல்லி தரப்பிடம், ‘ஜூனியர்கள் பின்னால் என்னால் நிற்க முடியாது. இவ்வளவு நாள்கள் கட்சியை வளர்த்ததற்கு நீங்கள் அளிக்கும் கௌரவம் இதுதானா?’ என்று புலம்பியிருக்கிறார்’’ என்ற கழுகாருக்கு, சூடாக இஞ்சி டீயை அளித்தோம். சுவைத்தபடி செய்திகளைத் தொடர்ந்தார்.

மிஸ்டர் கழுகு: என்னய்யா... என்னை ஞாபகம் இருக்கா! - பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி...

‘‘நடிகர் விஜய்க்கும், அவரின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்குமான பனிப்போர் ஓயவில்லை. திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், எஸ்.ஏ.சி-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதே பாணியில், அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.ஏ.சி-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றச் சொல்லியிருக்கிறாராம் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த். மீண்டும் மீடியாவிடம் எஸ்.ஏ.சி ஏதாவது கிளறினால், ‘என் அனுமதியில்லாமல் விஜய் இயக்கம் பெயரை எஸ்.ஏ.சி பயன்படுத்துகிறார்’ என்று மத்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கவும் விஜய் தரப்பு ரெடியாகியிருக்கிறது. எதுவாக இருந்தாலும் சட்டரீதியாகச் சந்திப்பது என்கிற முடிவில் இருந்த எஸ்.ஏ.சி., தீபாவளிக்குப் பிறகு திடீரென பின்வாங்கிவிட்டாராம். தன் கட்சியின் தலைவர் பத்மநாபன், பொருளாளர் ஷோபா இருவரையும் நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக வேறு இருவரை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம்.”

‘‘சரிதான்!’’

‘‘சசிகலாவின் மூத்த அண்ணனும், டி.டி.வி.தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உடல்நிலை சரியில்லாமல் நவம்பர் 14-ம் தேதி உயிரிழந்தார். நவம்பர் 15-ம் தேதி, தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியிலுள்ள சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷின் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தினகரன், திவாகரன் உள்ளிட்ட சசிகலா குடும்ப உறவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது, ‘இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் முறைச்சுக் கிட்டு இருக்கப்போறீங்க… குடும்பத்துக்குள்ள சண்டை எதுக்கு?’ என்று தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க சில உறவுகள் முயன்றனர். உஷ்ணமான தினகரன், ‘இன்னும் ஒரு வாரத்துல சின்னம்மா விடுதலை சம்பந்தமா அதிகாரபூர்வ தகவல் வந்துடும். அவர் வெளியே வந்த பிறகு எல்லா வற்றையும் பார்த்துக்குவார். அதுவரைக்கும் இது சம்பந்தமா எதுவும் பேசாதீங்க’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டாராம்.”

‘‘சிறையில் சுதாகரன்கூட ஏதோ வருத்தத்தில் இருக்கிறாராமே..?’’

‘‘இருக்காதா பின்னே… சசிகலாவின் அபராதத் தொகையை நடராஜனின் தம்பி குடும்பம் ஏற்பாடு செய்கிறது. இளவரசிக்கான தொகையை அவருடைய மகன் விவேக் ஜெயராமன் ஏற்பாடு செய்கிறார். ஆனால், சுதாகரன் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை தயார் செய்ய முடியாமல் திண்டாடுகிறதாம் அவர் குடும்பம். சுதாகரனுடைய சகோதரர்கள் தினகரன், பாஸ்கரன் இருவருமே தங்களால் எந்தத் தொகையும் கொடுக்க முடியாது என்று கையை விரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால், ‘கூடப்பொறந்தவங்களே கைவிட்ட பிறகு என்ன செய்யறது… இன்னும் ஒரு வருஷம் ஜெயில்ல இருந்துட்டுப் போறேன்…’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கடும் விரக்தியுடன் புலம்பியிருக்கிறார் சுதாகரன்.’’

“வளர்ப்பு மகனுக்கு இப்படியொரு கஷ்டமா… அடப்பாவமே!’’

‘‘ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் தொடர்பாகவும் சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், ஆளுங்கட்சியினரோடு அனுசரணையாக இருந்தபோதிலும், பா.ஜ.க-வுடன் மோதல் போக்கில் இருந்ததால் அவரை மாற்றியே தீர வேண்டுமென்று இந்து அமைப்புகள் விடாப்பிடியாக நின்றனவாம். தென்காசி மாவட்ட ஆட்சியரான அருண் சுந்தர் தயாளனுக்கும், அரசியல் கட்சியினருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. அதிலும், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவது தொடர்பான பிரச்னையில், அரசுக்கு சுந்தர் தயாளன் அனுப்பிய அறிக்கை ஆளும்தரப்பு பிரமுகர்களைக் கடுப்பாக்கிவிட்டதாம். அதன் விளைவுகளே மேற்கண்ட இடமாற்றங்கள்’’ என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘தமிழகத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான நிறுவனம் ஒன்று, தனது ஆலையை மீண்டும் திறக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில் அந்த நிறுவனத்தின் தரப்பிலிருந்து ஆளும்தரப்பை சிலர் சந்தித்திருக்கிறார்கள். ஆலையைத் திறக்க ஒத்துழைத்தால், ‘தேர்தல் நேரத்தில் கணிசமான கவனிப்புக்குத் தயார்’ என்றும் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்களாம். இதுவரை இதற்கு ஆளும்தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லையாம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: