சசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன?

மன்னார்குடியில் உள்ள சசிகலா உறவினர்கள், அடுத்த 15 நாளில் சசிகலா ரிலீஸ் ஆவார் என்று ஸ்வீட் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள. அ.ம.மு.க-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், பெருந்திரளான தொண்டர்களுடன் பெங்களூரு போய் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனின் மகள் திருமணத்தை சசிகலாதான் முன்னின்று நடத்தவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், 2021 ஜூனில் திருமணத்தை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. அதேபோல, பெங்களூரு சிறைச்சாலையில் உள்ள சசிகலா தண்டனைக் காலத்தை முடிக்க இருக்கிறார். நன்னடத்தை விதிகளின் படி அவருக்குச் சலுகை நாட்களை பெங்களூரு சிறைச்சாலை நிர்வாகத்தினர் அளிக்க வேண்டும். தண்டனையுடன் கூடிய அபராதத்தொகையான பத்து கோடியையும் சசிகலா கட்டிவிட்டார். அதையடுத்து, சசிகலாவின் தண்டனைக் காலத்தை நிர்ணயம் செய்யும் படலத்தை சிறைச்சாலை நிர்வாகத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

முன்பு சிறைச்சாலையின் உயர் அதிகாரியாக இருந்த ரூபா ஐ.பி.எஸ்., சிறைச்சாலை விதிகளை மீறி சசிகலா நடந்துகொண்டதாக வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அவர் தற்போது, கர்நாடக அரசின் உள்துறை கூடுதல் செயலாளராக இருக்கிறார். சிறைச்சாலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பும் அவரிடம்தான் இருக்கிறது. எனவே, சசிகலாவை விடுவிப்பதில் அடுத்து என்ன நடக்கும்?… என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நவம்பர் 18-ம் தேதியன்று சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட அபராதத்தொகை தொடர்பாக கர்நாடகா சிறைச்சாலை நிர்வாகத்தினர் மாநில உள்துறையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அவர்கள் ஒ.கே. சொன்ன பிறகே, அபராதத்தொகையின் ரசீதை சிறைச்சாலை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதை ஒரு பாஸிட்டிவ் சிக்னலாக சசிகலா தரப்பினர் கருதுகிறார்கள். இதையடுத்து, மன்னார்குடியில் உள்ள சசிகலா உறவினர்கள், அடுத்த 15 நாளில் சசிகலா ரிலீஸ் ஆவார் என்று ஸ்வீட் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள. அ.ம.மு.க-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், பெருந்திரளான தொண்டர்களுடன் பெங்களூரு போய் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

கடந்த பத்து நாள்களாக, பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியனும் அவரது டீமும். சிறைத்துறை அதிகாரிகளைச் சந்தித்து சசிகலாவுக்கு நன்னடத்தை அடிப்படையில் எத்தனை நாள்கள் கிடைக்கும் என்பதை வலியுறுத்திக் கேட்டிருக்கிறார். இவரது நடவடிக்கையை தமிழக சி.ஐ.டி. போலீஸும், வருமானவரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் உன்னிப்பாக ஃபாலோ செய்து வந்தார்களாம். சசிகலா வழக்கறிஞர் தரப்பினர் நன்னடத்தை விஷயமாக வந்திருப்பதாகத்தான் இந்த அதிகாரிகள் நினைத்திருக்கிறார்கள்.

அதேசமயம், சசிகலாவின் நெருங்கிய உறவினர்களின் சொந்தப்பணத்தை டி.டியாக ரெடி பண்ணியிருக்கிறார்கள். எப்படியும் பிற்காலத்தில் வருமானவரித்துறை கேள்விகளை கேட்கும் என்பதை எதிர்பார்த்து, ஆடிட்டர் உதவியுடன் பத்து கோடி ரூபாய் ரெடி செய்திருக்கிறார்கள். நடராஜனின் தம்பி பழனிவேல், அவரின் மனைவி வசந்தா தேவி, டாக்டர் வெங்கடேஷ் மனைவி ஹேமா, மற்றும் இளவரசியின் மகன் விவேக் (ரூ. 10,000 மட்டும்) இவர்கள்தான் சசிகலாவுக்காக டி.டி. கொடுத்தவர்கள்.

ஜெயலலிதாவுக்கான அபராதத்தொகை 100 கோடி ரூபாய். சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா 10 கோடி ரூபாய் அபதாரத்துடன் சிறைதண்டனை தரப்பட்டது. ஜெயலலிதா இறந்ததுவிட்டதால், அவருக்கான அபராத்தொகையை வசூலிப்பது தொடர்பாக கர்நாடகா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஃபிக்ஸடு டெபாசிட் பணவர்த்தனை, அசையா சொத்துக்கள், நகைகள் உள்ளிட்டவை நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளன. அவற்றை சட்ட சம்பிரதாயப்படி விற்று பணமாக மாற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இதேநேரம், கர்நாடகா அரசு தரப்பில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்து நடத்தி முடித்ததற்கு ஆன செலவு 5 கோடி ரூபாய். இதை எப்படி செட்டில் செய்வது என்பது பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சாரம்சங்களை சட்டநிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேசும்போது, “34-வது பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 17.11.20 அன்று பத்து கோடி ரூபாய்க்கான டி.டியைக் கட்டப்போனோம். அப்போது நீதிபதி எங்களிடம் சில விளக்கங்களை கேட்டார். 2014-ல் அப்போதைய நீதிபதி குன்ஹா தீர்ப்புப்படி, ஜெயலலிதா பெயரில் இருந்த ஃபிக்ஸடு டெபாசிட் நீதிமன்ற பெயருக்கு மாற்றப்படவேண்டும். ஜெயலலிதாவின் நகைகளை விற்று பணமாக மாற்றவேண்டும். இதெல்லாம் முடிந்தபிறகுதானே நீங்கள் சசிகலாவின் அபாதாரத்தொகையைக் கட்டமுடியும்? என்று வினா எழுப்பினார் நீதிபதி.

அதற்கு நாங்கள் உரிய விளக்கத்தைத் தெரிவித்தோம். நீதிமன்ற வசம் உள்ள நகைகளில் பெரும்பாலவை ஜெயலலிதாவுக்குச் சொந்தமானவை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நகை உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய முடியாது. அதேநேரம், தண்டனை பெற்ற மற்றவர்களுக்குச் சொந்தமான நகை உள்ளிட்டவை நீதிமன்ற பொறுப்பில் இருக்கின்றன. அவற்றை விற்று சட்டசம்பிரதாயங்களை முடிக்கவேண்டுமானால், நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை, சசிகலா எப்படி சிறைச்சாலையில் காத்திருக்கமுடியும்?

எனவே, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை இப்போதே செலுத்த அனுமதிக்கவேண்டும் என்று விளக்கம் சொன்ன பிறகுதான் நீதிபதி சமாதானம் அடைந்தார். இதுதொடர்பாக, சசிகலாவுக்கு எந்த சட்டபிரச்னையும் எதிர்காலத்தில் வந்துவிடக்கூடாது என்கிற கோரிக்கையையும் வைத்தோம். அதை ஏற்றுக்கொண்டு, டி.டி-யை வாங்கிக்கொள்ள நீதிபதி உத்தரவு பிரப்பித்தார். பிறகுதான் அபராதத்தொகையை டி.டி-யாகச் செலுத்தினோம். நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு நகல் நவம்பர் 18-ம் தேதி சிறைச்சாலைக்குச் சென்றது. அவர்களும் அதை பெற்றுக்கொண்டார்கள். அதற்குப்பிறகுதான், நிம்மதியானோம். நீதிபதியும் நகலில் கையெழுத்துப் போட்டுவிட்டார். அதன் ஒரிஜினல் காப்பி இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை. வந்ததும் முழு விவரத்தைச் சொல்கிறேன்” என்றார். சசிகலாவைத் தொடர்ந்து பெங்களூரு சிறைச்சாலையில் உள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் இதே பாணியில் அபாதாரத்தொகை கட்ட ஏற்பாடு நடந்து வருகிறதாம்.

இதுபற்றி சசிகலா தரப்பிடம் கேட்டபோது, ”நீதிமன்றத்தில் அபாதாரத்தொகை கட்டியாகிவிட்டது. இனி, சிறைச்சாலை அதிகாரிகள்தான் அந்த மாநில உள்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி சசிகலாவை எப்போது விடுவிப்பது என்று முடிவு செய்யவேண்டும். அவருக்கு எவ்வளவு நாட்கள் நன்னடத்தை சலுகை தரப்போகிறார்கள் என்பது பற்றி இனிதான் முடிவெடுப்பார்கள். இதற்கான பூர்வாங்க வேலை நடந்துவருகிறது” என்றார்கள்.

%d bloggers like this: