ஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி

புலி வருது’ கதையாக, அரசியல் வட்டாரத்தில் அடிக்கடி புயலை கிளப்பி வந்த நடிகர் ரஜினி, அடுத்த மாதம் தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகி

உள்ளது. சென்னையில், நேற்று மன்ற நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், இம்முடிவை அவர் எடுத்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில், தீவிரமாக களமிறங்க ஆயத்தமாகும்படி, மன்றத்தினருக்கு உத்தரவிட்டுள்ள அவர், கூட்டணி அமைப்பது குறித்து, பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், கால் நுாற்றாண்டுக்கும் மேலாக, அரசியல் கனவில் மிதந்த ரஜினி ரசிகர்களுக்கு, 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், ரஜினி பொங்கல் விருந்து வைத்தார். தனிக்கட்சி ஆரம்பித்து, சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

அதன்பின், ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றி, நிர்வாகிகளை நியமித்தார். ‘புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்; 63 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைத்து, ஒவ்வொரு தெருவிலும், நம் கட்சிக் கொடி பறக்க வேண்டும்’ என்று கூறினார்.தொடர்ந்து, பல விவகாரங்களில் கருத்து மட்டும் கூறி வந்த ரஜினியின் அரசியல் ஆர்வம், கொரோனாவால் பின்னடைவை சந்தித்தது. ரஜினியின் உடல்நிலை குறித்து, அக்டோபர் 29ம் தேதி வெளியான தகவல், பரபரப்பை உருவாக்கியது. உடல்நிலையை காரணம் காட்டி, அரசியலுக்கு ரஜினி வராமல் போய் விடுவாரோ என, அவரது ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர்.

இதுகுறித்து, ரஜினி விளக்கம் அளித்த பின், ரசிகர்கள் அமைதியாகினர்.இந்நிலையில், சென்னையில் நேற்று, மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், ரஜினி ஆலோசனை நடத்தினார். கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில், 2:00 மணி நேரம் நடந்த கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கருத்துக்களை, ரஜினி கேட்டறிந்தார். மேலும், பணம், பதவிக்கு ஆசைப்படுபவர்களுக்கு, கட்சியில் இடமில்லை என்பதை, நிர்வாகிகளிடம் ரஜினி மீண்டும் வலியுறுத்தினார். பொதுவாக கருத்துகளைக் கேட்ட ரஜினி, பின் ஒவ்வொருவரையும், தனித்தனியாக அழைத்தும் பேசினார்.கூட்டம் முடிந்து, ரஜினி அளித்த பேட்டியில், ”அரசியல் கட்சி தொடங்குவது குறித்து, மாவட்ட நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

நான் எடுக்கும் எந்த முடிவுக்கும், அவர்கள் கட்டுப்படுவதாக தெரிவித்தனர். என் முடிவை விரைவில் அறிவிப்பேன்,” என்றார். ரஜினியுடன் நடந்த ஆலோசனை குறித்து, நிர்வாகிகள் கூறியதாவது: ‘வந்தா ஜெயிக்கணும்’ என்பதையே, ரஜினி இப்போதும் சொல்கிறார். கட்சி ஆரம்பிக்கலாமா; ஆரம்பித்தால் எப்படி கொண்டு போக வேண்டும்; அதற்கான சூழ்நிலை ஆகியவை குறித்தும் கேட்டார்.

நாங்களும் பதிலளித்தோம். ஒவ்வொரு மாவட்ட செயலர்களிடமும், கருத்துகளை விளக்கமாக கேட்டார். ‘தமிழகத்திற்கு நல்ல தலைவர் இல்லை; இந்த நேரத்தில் நீங்கள் தான் வர வேண்டும்’ என, தெரிவித்தோம். ஜனவரியில் கட்சி ஆரம்பித்தால், அடுத்த நான்கு மாதம் கூட போதும்.

அவர் நேரில் சென்று, பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. காணொளி மூலம் சமூக வலைதளங்களில், அவர் பேசினாலே போதும். அவர் எந்த முடிவு எடுத்தாலும், எங்களுக்கு முழு திருப்தி தான். அதையும், அவரிடம் நாங்கள் தெரிவித்தோம்.ஆனால், அவரது பேச்சும், ஆர்வமும், எங்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது.

அடுத்த மாதமான ஜனவரியில், கட்சி துவங்கும் முடிவில் இருப்பதையே, அவரது பேச்சு தெளிவுபடுத்தியது. மக்களை சந்திக்கும்படியும், மாவட்ட சுற்றுப்பயணம் செய்யும்படியும், எங்களிடம் அவர் கூறியுள்ளார். இதன் வாயிலாக, களத்தில் இறங்கும்படியும், தீவிரமாக செயல்படும்படியும் அறிவுறுத்தி உள்ளார். கூட்டணி பற்றிய பேச்சு வந்தபோது, அதையெல்லாம் தாம் பார்த்துக் கொள்வதாகவும், முதலில் மக்களை சந்தித்து, நலத் திட்டப் பணிகளை செய்யும்படியும் கூறினார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சிரித்தபடி வந்தார்; சீரியஸாக பேசினார்!ரஜினி மண்டபத்துக்குள் வரும் போது, சிரித்த முகத்துடன் தான் வந்தார்.

மாவட்ட நிர்வாகிகள் சிலர் பேசியதை கேட்டதும், எரிச்சலடைந்த அவர், ‘மைக்’ வாங்கி பேசத் துவங்கினார். அப்போது, அவர் கூறியதாவது:இங்க உள்ள நிர்வாகிகள் மேல, ஏகப்பட்ட புகார் வந்துருக்கு. எனக்கு களங்கம் ஏற்படுத்த நினைச்சவங்களை, நீக்கப் போகிறேன். புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்யப் போறேன்.

பணம் சம்பாதிக்க நினைச்சு, என் பின்னாடி யாரும் வராதீங்க. அப்படி இருக்கறவங்க, நீங்களா வெளியில் போயிடுங்க. மக்கள் நலத் திட்டப் பணிகளை தீவிரமா செய்ய சொன்னேன்; 25 சதவீதம் கூட ஒழுங்கா வேலை செய்யலை. போஸ்டர் மட்டும் அடிச்சு ஒட்டிட்டு, வீட்டுல உட்கார்ந்துட்டீங்க.எல்லாரும் மக்கள போய் நேரில் சந்தியுங்கள்.

மாவட்டம் முழுதும் சுற்றுப்பயணம் போங்க. நான் அரசியலுக்கு வர மாட்டேன்னு நினைச்சுட்டு இருக்கீங்க போல; நான் பார்த்துக்கிறேன். உங்க நடவடிக்கை பத்தின ஜாதகமே என்கிட்ட இருக்கு. நம் மீது மக்களும், ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் உள்ளனர்.

அதை நான் பொய்யாக்க விரும்பவில்லை.இவ்வாறு, அவர் கூறினார். உடனே,ஒரு மாவட்ட பொறுப்பாளர் குறுக்கிட்டு,’உங்க உடல்நிலைய கருத்தில் கொண்டு,சமூக வலைதளங்கள் வாயிலாக, மக்களிடம் நீங்கள் பேசலாமே…’ எனச் சொன்னார். அதை ஏற்க மறுத்த ரஜினி, ”மக்கள் என்னை நேரில் பார்க்க விரும்புறாங்க. நான் வீதிக்கு வந்து தான் பிரசாரம் செய்யணும்.

உங்கள நம்புனதுல எனக்கு ஏமாற்றம் தான்,” என்றார் கோபமாக!தனி அறையில், மாவட்ட செயலர்களை தனித்தனியாக அழைத்து, தனியார் உளவு நிறுவனம் அளித்த அறிக்கையை, அவர்களிடம் காண்பித்து விளக்கம் கேட்டார். இன்று, கட்சி குறித்த முக்கிய முடிவு எடுக்க உள்ளதால், அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும், சென்னையில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளார்.தனித்து போட்டியா; கூட்டணியா?ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினி கேட்டார். பெரும்பான்மையான நிர்வாகிகள், தனிக்கட்சி துவங்கி போட்டியிட்டால், நினைக்கும் மாற்றத்தை கொண்டு வரலாம் என்றோம். ஐந்து மண்டலங்களில், ‘ஹெலிகாப்டர்’ வாயிலாக, ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டும் பிரசாரம் செய்தால் போதும் என, அவரிடம் கூறினோம்.’நாம் தனியாக போட்டியிட்டால், எத்தனை சதவீதம் ஓட்டுக்கள் பெறலாம்’ என, நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டார்.

அதற்கு, 2014ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 22 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. 2019 லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 18 சதவீதம் ஓட்டுக்களை, அ.தி.மு.க., பெற்றது.தற்போதைய சூழலில், இரு கட்சிகளும் கூட்டணி பலத்துடன் உள்ளன. எனவே, நாமும் கூட்டணி அமைக்கலாம். பா.ஜ., காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள், நம்முடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன. பா.ம.க., – தே.மு.தி.க., மக்கள் நீதி மையம், அ.ம.மு.க., புதிய தமிழகம் போன்ற மாநில கட்சிகளும் தயாராக உள்ளன. எனவே, இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, வலுவான கூட்டணியை அமைக்க முடியும் என, அவரிடம் உறுதி அளித்தோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

%d bloggers like this: