பங்கைப் பிரி… பங்கைப் பிரி!” – விரைவில் அழகிரி போர்க்கொடி

கழுகார் என்ட்ரி கொடுத்ததும், மைசூர்பாக்கையும் மதுரை மிளகு காரசேவுவையும் நீட்டினோம். கழுகார் புருவம் உயர்த்தவும், “சென்ற இதழில் சகாயம் ஐ.ஏ.எஸ்-க்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டிருப் பதைக் கூறியிருந்தீர். இந்த விஷயம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, சகாயத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பைத் தொடருமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதற்குத்தான் இந்த ட்ரீட்” என்றோம். புன்முறுவல் பூத்த கழுகார், “எனக்கு வந்த செய்தியைச் சொல்கிறேன், அவ்வளவே…” என்று காரசேவுவை சுவைத்துவிட்டு, “இதைவிடக் காரமாக மதுரையிலிருந்து செய்தி வந்திருக்கிறது தெரியுமா…” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

“கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன. மகன் என்கிற முறையில் இந்தப் பங்குகளுக்கு உரிமை கோரி, மு.க.அழகிரி வழக்கு தொடுக்கவிருக்கிறாராம். அழகிரிக்கு நெருக்கமான வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் அதற்கான முஸ்தீபுகள் ஆரம்பித்துவிட்டன. அதேபோல, வரும் ஜனவரி 30-ம் தேதி மு.க.அழகிரியின் 70-வது பிறந்தநாள் வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கும் ஏற்பாடுகள் தூள்பறக்கின்றன. சுவர் விளம்பரங்களில் சூட்டைக் கிளப்பும்படி உத்தரவு போயிருக்கிறது.”

“அது சரி, நேரில் ஆஜராகச் சொல்லி அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதே?”

“அமித் ஷாவை அழகிரி சந்திக்காததற்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்தான் இந்த நோட்டீஸ் என்கிறார்கள். 2006-11 தி.மு.க ஆட்சிக்காலத்தில், ‘தயா ஐடி பார்க்’ என்கிற நிறுவனத்தை துரை தயாநிதி மதுரையில் தொடங்கினார். இந்த நிறுவனத்துக்கு வாங்கப்பட்ட நிலம் மற்றும் பணப் பரிமாற்றங்களில் முறைகேடு நடந்திருப்பதாக சி.பி.ஐ-யில் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் துரை தயாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் சி.பி.ஐ., டிசம்பர் 1-ம் தேதி டெல்லியிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சொல்லியிருக்கிறது.”

“சரிதான்…”

“தி.மு.க அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதியின் வயது முதிர்வைக் காரணம் காட்டி, அந்தப் பதவியை இரண்டாகப் பிரிக்க அறிவாலயத்தில் ஆலோசனை நடக்கிறதாம். சட்டம் படித்த விசுவாசி ஒருவரை, ஆர்.எஸ்.பாரதியின் பொறுப்பில் அமரவைப்பதற்கு கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறதாம். இதில் பாரதிக்கு வருத்தம் என்கிறார்கள்.”

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் வேலுமணி தரப்பு வருத்தத்தில் இருக்கிறதாமே..?”

 

“கூட்டணி விவகாரத்தில் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் எடப்பாடியும் பன்னீரும் இணைந்து முடிவெடுத்துவிட்டார்கள் என்று வருத்தத்தில் இருக்கிறாராம் வேலுமணி. தவிர, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் எடப்பாடி இணக்கமாக இருப்பதும் வேலுமணி தரப்பை வருத்தமடையச் செய்திருக்கிறதாம். டெல்டா பகுதியிலுள்ள மணல் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் அந்த நபருக்குக் கணிசமான பங்கீடும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ‘எங்களை மட்டும் அந்தக் குடும்பத்தினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவர் மட்டும் தொடர்பிலிருப்பது நியாயம்தானா?’ என்று பொருமலில் இருக்கிறதாம் வேலுமணி தரப்பு.”

“ஓஹோ… துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவே..?”

 

“ஆமாம். பன்னீரின் கட்டுப்பாட்டிலுள்ள வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் முதன்மைச் செயலாளராக இருந்த ராஜேஷ் லக்கானியை ஆவணக் காப்பகத்துறைக்கு மாற்றியுள்ளனர். இரண்டு மாதங்களாகவே பன்னீருக்கும், லக்கானிக்கும் ஒத்துப்போகாமல் இருந்திருக்கிறது. இதனால், முன்பே மத்திய அரசுப் பணிக்குத் தன்னை மாற்றிவிடும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார் ராஜேஷ் லக்கானி. இதற்கிடையே பன்னீர் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு ஃபைல்களை லக்கானி தொடவில்லையாம். இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் பன்னீர் புலம்பியிருக்கிறார். ஏற்கெனவே லக்கானிக்கும் சண்முகத்துக்கும் ஒத்துப்போகாது என்பதால், இந்தச் சூழலைப் பயன்படுத்தி லக்கானியை ‘டம்மி’ போஸ்ட்டிங்குக்கு மாற்றியிருக்கிறது சண்முகம் தரப்பு. சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலராக இருந்த கார்த்திகேயனுக்கு வீட்டு வசதி, நகர்புற மேம்பாட்டுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சொன்னதைக் கேள்வி கேட்காமல் கச்சிதமாகச் செய்துமுடிப்பவர் என்பதால் பன்னீரே கார்த்திக்கு சிபாரிசு செய்திருக்கிறார்” என்ற கழுகாருக்கு சூடாக ஃபில்டர் காபியை அளித்தோம். காபியைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“சமீபத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க கூட்டணி குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்குக் குறைந்த பிரதிநிதித்துவம் அளிக்கும் தி.மு.க-வின் முடிவை ராகுல் காந்தி ரசிக்கவில்லை என்கிறார்கள். ‘கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று தி.மு.க நெருக்கடி கொடுத்தால், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கைகோக்கவும் காங்கிரஸ் தலைமை திட்டமிடுகிறதாம்.”

“ம்ம்…”

“நடிகர் விஜய் பெயரில் பதிவுசெய்த கட்சியை வாபஸ் பெறுவதாக டெல்லி தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்திருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஷயம் முடிந்துவிட்டது என்று விஜய் தரப்பு மூச்சுவிடுவதற்குள், அடுத்த விவகாரத்தை எஸ்.ஏ.சி ஆரம்பித்துவிட்டாராம். விஜய் மக்கள் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்தின் அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி, அமைப்பு ஒன்றை ஆரம்பிக்கும் பணியில் மும்முரமாகியிருக்கிறாராம் எஸ்.ஏ.சி. இந்த அமைப்பை டெல்லி தேர்தல் கமிஷனில் பதிவு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். விஜய் நற்பணி மன்றத்தில் நீண்டகாலம் மாநிலத் தலைவராக இருந்த ஜெயசீலனை, இந்தப் புதிய அமைப்பின் தலைவராக நியமிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விஷயத்தைக் கேள்விப்பட்டு டென்ஷனான விஜய், உடனடியாக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி நிர்வாகிகளை எச்சரிக்கச் சொல்லியிருக்கிறார். இதன்படி, நவம்பர் 29-ம் தேதி விக்கிரவாண்டியில் விஜய் மக்கள் மன்றத்தின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், ‘எஸ்.ஏ.சி-யுடன் யாரும் தொடர்பில் இருக்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கப்பட்டதாம்” என்றபடி சிறகுகளை உலுப்பிய கழுகார்,

“மும்பையில் ஐடி கம்பெனி நடத்திவரும் ராம் பிரசாத் என்பவருக்குச் சொந்தமான கம்பெனிகள் மற்றும் பண்ருட்டியிலுள்ள அவரது மாமனார் வீடு உள்ளிட்ட 16 இடங்களில் நவம்பர் 27, 28-ம் தேதிகளில் அதிரடி சோதனையிட்ட வருமான வரித்துறை, 1,500 கோடி ரூபாய் வரை கணக்கில் வராத பணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறதாம். இவர் மணல் பிரமுகர் சேகர் ரெட்டியின் பினாமி என்று முதலில் தகவல் பரவியது. இதை மறுத்திருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள், ‘ராம் பிரசாத் சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில், சுமார் 300 கோடி ரூபாய் வரை போலிக் கணக்கு காட்டி முறைகேடு செய்ததாக ஒரு புகார் மும்பை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு உள்ளது. இவரும் சேகர்ரெட்டியும் ஒரே சமூகம் என்பதால், அவரின் பினாமியாக வதந்தியைப் பரப்பிவிட்டனர்’ என்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: