ரஜினியின் 2021 பொங்கல்… தமிழர் திருநாளில் கட்சி தொடக்கம்… தியானத்தில் கிடைத்த தெளிவு!

ஒரே நாளில் ரஜினி அதிரடி முடிவு எடுக்க வேறு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சினிமாத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள்.

சினிமாவின் சூப்பர் ஸ்டார் அரசியல் தலைவராகத் தயாராகிவிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று அரசியல் வருகையை உறுதி செய்தது முதலே அவரது கட்சியின் பெயரைக் கேட்க காத்துக்கொண்டிருக்கிறது பெருங்கூட்டம். இடைப்பட்ட ஆண்டுகளில் தனது ரசிகர் மன்றத்தை

மக்கள் மன்றமாக மாற்றி கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி வந்த ரஜினி இடையில் வந்த பாராளுமன்ற தேர்தலிலோ, சட்டமன்ற இடைதேர்தலிலோ, உள்ளாட்சி தேர்தலிலோ போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தலே எனது இலக்கு என்று சொல்லிவந்தவர் திடீரென கடந்த மார்ச் மாதம் ஒரு பின்வாங்கல் பிரஸ்மீட் கொடுத்தார்.

“ஆட்சி மாற்றமல்ல… அரசியல் மாற்றம்தான் தேவை. நான் முதலமைச்சர் இல்லை. வேறு ஒருவர்தான் முதல்வர் வேட்பாளர். திமுக – அதிமுக கட்சிகள் மிகப்பெரிய பலத்துடன் இருக்கின்றன” என்றார்.

ரஜினி

 

இந்நிலையில் கடந்த மாதம் தனது அறிக்கையாக சமூக வலைத்தளங்களில் பரவியது போலியானது என்றும், ஆனால் அந்த அறிக்கையில் எழுதப்பட்டிருப்பது உண்மைதான் என்றும் குழப்பினார்.

கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட தனது உடல்நிலையை எடுத்துச் சொல்லி கட்சி தொடங்குவதில் நீடிக்கும் தாமதத்துக்கான காரணத்தை விளக்கினார்.

ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அரசியலுக்கு வரவேண்டாம், ஆரோக்கியத்துடன் இருந்தால் போதும் என்று ரசிகர்களும் அமைதியானார்கள். நேற்று முன் தினம் ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன் கூட “ரஜினி கட்சி தொடங்குவது அவர் கையில்தான் இருக்கிறது. கட்சியை விட அவரது உடல்நலனே முக்கியம்” என்றார். எனவே ரஜினி கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்து பின்வாங்கியதாக தகவல் பரவியது. ஆனால், ஒரே நாளில் ரஜினி அதிரடி முடிவு எடுக்க வேறு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சினிமாத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள்.

“தனது உடல்நலனையும், குடும்பத்தினர் அறிவுரையையும் கருத்தில் கொண்டு ரஜினி அப்படி ஓர் எண்ணத்துக்கு வந்தது உண்மை. அரசியல் வேண்டாம் என்றே முடிவெடுத்துவிட்டார். ஆனால், திடீரென அரசியலுக்கு வரும் எண்ணத்தில் உறுதியானது நேற்று காலைதான். வழக்கமாக வியாழக்கிழமைகளில் ரஜினி காலை நேரத்தில் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்த தியானம் சுமார் 2 மணி நேரம் வரை கூட நீடிக்கும். ஆழ்ந்த தியானத்துக்கு செல்லும் ரஜினி அப்போது தனக்கு கிடைக்கும் உத்தரவின் அடிப்படையில் தான் முடிவுகளை எடுப்பார். அப்படி நேற்று காலை தியானத்தின் போது கிடைத்த உத்தரவு தான் அரசியல் கட்சி அறிவிப்பு.

இதே வியாழக்கிழமை சென்ட்டிமென்ட் படிதான் வரும் 31- ம் தேதியை தேர்வு செய்துள்ளார். அன்று காலையும் இதேபோல் தியானம் மேற்கொண்ட பின்னர் கட்சியின் பெயரையும் தொடக்க நாளையும் அறிவிப்பார். அது அனேகமாக பொங்கல் திருநாளாக இருக்கும். கட்சியை ஏற்கனவே பதிவு செய்துவிட்டதாகவும் தெரிகிறது. வரும் ஆண்டு ரஜினியின் ஆண்டாக இருக்கும்” என்றார்கள்.

டிசம்பர் 31-க்கு இடையில் இன்னும் 3 வியாழன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: