சிவாயநம என்று கூறுவதன் பொருள் இது தானா.?! எல்லாம் சிவமயமே.!

நாரதர் தனது தந்தையான பிரம்மாவிடம் சென்று “தந்தையே சிவநாமங்களில் உயர்ந்தது சிவாயநம என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கி கூறுங்கள்” என்றார்…

பிரம்மா நாரதரிடம், “நாரதா அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உன் சந்தேகத்தைக் கேள்” என்றார்..நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று தனது சந்தேகத்தை கேட்டார்..நாரதர் இதைக் கேட்டதும் அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது

இதைப்பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது.. அவர் பிரம்மாவிடம் ஓடிச் சென்று, “தந்தையே சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன்,

இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்” என்றார்..

“நாரதா நீ தவறாகப் புரிந்து கொண்டாய்..அதோ அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள் அது பதிலளிக்கும்” என்று சிரித்தபடியே கூறினார் பிரம்மா

இதன்படி நாரதரும் ஆந்தையிடம் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது..நாரதர் பதறிவிட்டார்.. பிரம்மாவிடம் சென்று “என்ன இது சோதனை” என்று கேட்டார்..

பிரம்மா”நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம், அதோ அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்று குட்டியிடம் போய் கேள் அது பதிலளிக்கும்” என்றார்..”தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார் வேண்டாம்” என்று பயந்து நடுங்கினார் நாரதர்.”பயம் வேண்டாம்” என்று பிரம்மா தைரியம் கூறி நாரதரை அனுப்பி வைத்தார்.

நாரதரும் கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார்..அப்போது தான் பிறந்த கன்று இதைக் கேட்ட உடனே உயிரை விட்டது..
நாரதர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது.. பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி என்றால் இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும், என நினைத்தார் நாரதர்.. அப்போது அங்கு வந்த பிரம்மா அவரிடம், “கன்றும் இறந்து விட்டதா, சரி பரவாயில்லை இந்நாட்டு மன்னனுக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்”என்றார்.. இதைக் கேட்ட நாரதர் அலறியே விட்டார். “பிரம்ம தேவா என்ன இது? அந்தக்குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால் மன்னன் என்னைக் கொன்றே விடுவான்” என்றார் நாரதர்..இருந்தாலும் பிரம்மா விடவில்லை.. “இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது அவ்வளவு தான், அதனால் குழந்தையிடம் கேள் பொருள் நிச்சயம் தெரியும்” என்றார்..

நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் சென்று இதைக் கேட்டார்..அந்தக் குழந்தை பேசியது “நாரதரே இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன், அதன்பின் கன்றானேன், இப்போது மனிதன் ஆனேன்…பிறவியில் உயர்ந்த மானிடப் பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது..இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்”என்று குழந்தை கூறியது.

அந்தக் குழந்தை மேலும் கூறியது, “சிவாயநம என்பதை #சிவயநம என்றே உச்சரிக்க வேண்டும்,

சி என்றால் சிவம், வ என்றால் திருவருள், ய என்றால் ஆன்மா, ந என்றால் திரோதமலம், ம என்றால் ஆணவமலம்.. திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள்..நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்..

சிவாயநம என்று உள்ளம் உருக கூறினால், இந்த பிறவியில் இருந்து அவர் விடுபடுவார்”என்றது குழந்தை…

இதைக்கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார்.. பிறவிப்பிணியில் இருந்து விடுபட சிவாயநம என்போம், இறைவனின் திருவடிகளை அடைவோம்.!

%d bloggers like this: