`ரஜினியின் மனமாற்றம்… கழகம் கட்சியானதா?’ – மக்கள் மன்றத்தின் திடீர் அறிவிப்பின் பின்னணி!

ரஜினி கட்சியின் பெயர், கட்சி அலுவலகம், சின்னம் ஆகியன குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. கட்சியின் பெயர் `மக்கள் சேவை கட்சி’ என்றும், சின்னம் `ஆட்டோ’ எனவும் கட்சி அலுவகலம் செயல்படும் இடம் என சென்னை எர்ணாவூரில் உள்ள முகவரியை குறிப்பிட்டிருக்கிறார்கள். தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது போன்ற தகவல்கல் இடம்பெற்றுள்ளன என்ற போதிலும் அதில் ரஜினியின் பெயர் இல்லை.

 

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இது தொடர்பாக விவரம அறிந்த சிலரிடம் விசாரித்த போது, கடந்த மாதம் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்தார். அங்கே நின்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலினை அருகில் அழைத்து, `வெளியே மீடியாக்கள் உள்ளனர். அவர்களிடம் இந்த தகவல்களை நீங்களே சொல்லிவிடுங்கள்’ என்று சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு காரில் ஏறி பறந்தார்.

ஒரு வருடம் முன்பு, ரஜினி தரப்பில் இருந்து புதிய கட்சி பதிவு செய்ய டெல்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பத்தில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் முகவரி இருந்தது. அதை தெரிந்துகொள்ள தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளின் வி.ஐ.பி-கள் சிலர் களத்தில் இறங்கினர். சிலர் ஆர்.டி.ஐ-யிலும் கேட்டுப்பார்த்தனர்.

முதலில் `அனைத்து இந்திய மக்கள் சக்தி கழகம்’ என்கிற பெயரை தேர்ந்தெடுத்தார் ரஜினி. ஆனால், அதுதொடர்பான எந்த ஆவணங்களிலும் ரஜினி பெயர் இல்லை. அதேபோல், முகவரி என்கிற இடத்தில் எர்ணாவூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவரங்களை எப்படியோ மோப்பம் பிடித்த வி.ஐ.பி-கள் சிலர், எர்ணாவூரில் உள்ள அந்த இடத்தை விசிட் செய்தனர். ஆனால், அந்த இடத்தின் சுற்றுப்புறத்தை பார்த்து, `ரஜினி ஏன் வடசென்னைக்கு வரப்போகிறார். இது ரஜினி கட்சி ஆபீஸாக இருக்காது’ என்கிற முடிவுக்கு வந்தனர். இதே காலகட்டத்தில், தமிழகத்தில் இருந்து புதியதாக பதிவு செய்த கட்சிகளின் பின்னணியை வி.ஐ.பி-கள் விசாரித்து ஏமாந்தனர். எம்.ஜி.ஆர். கட்சி என்கிற பெயரில் இன்னொருவர் பதிவு செய்திருந்தாராம். அதையும் வி.ஐ.பி-கள் துருவி விசாரித்தனர். அதை பதிவு செய்தவருக்கும் ரஜினிக்கும் சம்மந்தமில்லை என்று தெரிந்துகொண்டனர்.

ரஜினிகாந்த்

 

இந்த நிலையில் திடீரென ஒரு நாள்.. ரஜினி தியானத்தில் இருந்துவிட்டு வந்தவர், முதலில் பதிவு செய்தபோது கட்சியின் பெயரில் இருந்த `கழகம்’ என்கிற வார்த்தை வேண்டாம் என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார். அதையடுத்து, ரஜினியின் விருப்பப்படியே கட்சியின் பெயர் `மக்கள் சேவை கட்சி’ என்று மாற்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ரஜினிக்கு மிகவும் விசுவாசமானவர்கள் 100 பேர் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று சொல்லி பழைய பெயரை மாற்றி புது பெயர் கேட்டு விண்ணப்பிக்கும் ஆவணங்களில் ரஜினியின் வழக்கறிஞர்கள் கையெழுத்து வாங்கினர். அவர்களும் புதியதாக மாற்றப்பட்ட பெயரை வெளியே சொல்லவில்லை. இந்த நிலையில்தான், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்ட லிஸ்ட்டை வைத்து ரஜினி கட்சியின் பெயர், சின்னம், முகவரி ஆகியன அம்பலமாகின.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில், “இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “வழக்கமாக தேர்தல் ஆணையம் கட்சிகளின் பட்டியலை பிப்ரவரி மாதத்தில் தான் வெளியிடுவார்கள். அதற்கு முன்னதாக ரஜினி தனது கட்சியின் பெயரை அறிவித்து விடுவார் என்பதால் பிரச்னை இருக்காது என நினைத்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் தனது பட்டியலை டிசம்பர் மாதமே வெளியிட்டதால், தற்போது பெயர் வெளியாகிவிட்டது. கட்சியின் பெயரை தலைவர் ரஜினி தான் அறிவிப்பார் என்பதால், தற்போது `தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி’ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்” என்றார்.

%d bloggers like this: