“ரஜினியைக் கண்டுக்காதீங்க…” – ஸ்டாலினுக்கு ஐபேக் அட்வைஸ்

ரஜினி தரப்பு வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறதே…’’ என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடான ஃப்ரெஞ்சு ஃப்ரைஸை சாஸுடன் கழுகாருக்கு நீட்டிவிட்டு, ‘‘சில அ.தி.மு.க பிரமுகர்கள் தமிழருவி மணியனிடம் பேச ஆரம்பித்திருப்பதைக் கூறுகிறீரா?’’ என்றோம். ஆமோதித்தபடி ஃப்ரைஸை மென்றவர், “தென் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர் தன் சம்பந்தி மூலமாக ரஜினி தரப்பிடம் பேசியிருக்கிறாராம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘அ.தி.மு.க தலைமை மீதிருக்கும் மனக்கசப்பு காரணமாக ரஜினியுடன் முன்னாள் எம்.பி மைத்ரேயன் அநேகமாக இணையலாம் என்கிறார்கள். கொங்கு மண்டல முக்கிய அமைச்சர் ஒருவரும் ரகசியப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறாராம். தி.மு.க தரப்பில் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு ஏற்கெனவே அழைப்பு சென்றுவிட்டது என்கிறார்கள். சிலரின் பெயர்களை ரஜினியே ரிஜெக்ட் செய்திருக்கிறார். ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகம் வரவிருக்கிறாராம். அதற்குள் தன் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய மும்முரத்தில் இருக்கிறாராம் ரஜினி.’’

‘‘ஓஹோ… போயஸ் தோட்டத்துக்குள் வாரிசு அரசியல் லைட்டாகத் தலைதூக்குகிறதாமே..?”
‘‘ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவைத்தானே கூறுகிறீர்… அர்ஜுனமூர்த்தியை ரஜினியிடம் அறிமுகம் செய்ததில் தொடங்கி, கட்சி தொடங்குவதற்கான பணிகள் வரை பலவற்றையும் செளந்தர்யாவே செய்துவருவதாகக் கூறுகிறார்கள். இதுபோக, மருமகன் தனுஷுக்கும் அரசியல் ஆசை துளிர்க்கத் தொடங்கியிருக்கிறதாம். ‘இது சரியல்ல. வாரிசு அரசியலுக்கு எதிராக நாம் பேசிவிட்டு, வாரிசுகளை உள்ளே நுழைப்பது பூமராங் ஆகிவிடும்’ என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு நுழைந்தால், ஐந்து சதவிகித வாக்குவங்கி வைத்திருக்கும் கட்சிகளெல்லாம் காணாமல் போய்விடும் என்கிற மிதப்பில் இருக்கிறதாம் ரஜினி தரப்பு.’’

‘‘ஐபேக்கின் பிரசாந்த் கிஷோர் திடீரென சென்னை வந்திருக்கிறாரே..?’’
“வேறென்ன… தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் வழக்கமான தேர்தல் ஆலோசனைக் கூட்டம்தான். செனடாப் சாலையிலுள்ள உதயநிதியின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு சர்வே முடிவுகளைவைத்து விவாதித்திருக்கிறார்கள். அப்போது, ‘ரஜினி கட்சி தொடங்கின பிறகு, உங்களைக் குறிவெச்சுதான் தீவிரமா செயல்படுவாங்க. ரஜினியின் கருத்துக்கு நேரடியா எந்த மறுமொழியையும் சொல்லாதீங்க… அவரைக் கண்டுக்காதீங்க. அ.தி.மு.க., பா.ஜ.க-வை மட்டும் தாக்கிப் பிரசாரம் பண்ணுங்க. ரெண்டாம்கட்ட தலைவர்களைவெச்சு ரஜினிக்கு பதிலடி கொடுத்தா போதும்’ என்று ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர் அட்வைஸ் செய்தாராம்.’’

‘‘ம்ம்… மு.க.அழகிரி என்ன செய்யப் போகிறார்?’’
‘‘ஸ்டாலின் தரப்பிலிருந்து அழகிரியைச் சிலர் தொடர்புகொண்டிருக்கிறார்கள். வார்த்தை தடித்து வாக்குவாதமாகிவிட்டதாம். ‘எனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல், எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இணங்கப்போவதில்லை’ என்று கறார் காட்டிய அழகிரி, அடுத்து சொன்ன தகவல்தான் அறிவாலயத்துக்கு ஷாக் கொடுத் திருக்கிறது. ‘உங்க தலைவர் மகன் உதயநிதி, திருவாரூர் தொகுதியில போட்டியிடலாம்னு நினைக்கிறாராமே… அவர் அங்கே நின்னா, என் பையன் துரையை அவருக்கு எதிரா நிறுத்துவேன். எந்தத் தொகுதியில உதயநிதி நின்னாலும் சரி, அங்கே என் பையன் எதிர்த்து நிற்பான்’ என்று அழகிரி குரலை உயர்த்தவும், எதிர்ப்பக்கத்தில் சத்தமே இல்லையாம்.’’
‘‘அழகிரி என்றதும்தான் ஞாபகம் வருகிறது… மதுரை தி.மு.க-வில் ஏன் இவ்வளவு பஞ்சாயத்துகள்?’’

‘‘மதுரை என்றாலே திருவிழா, பஞ்சாயத்துதானே. அரசியலிலும் அது அரங்கேறாதா என்ன… மதுரை மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்புக் குழுவில் அதலை செந்தில்குமாரை நியமித்துள்ளார்கள். ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்று சொல்லி, பல கோடி ரூபாய் நில மோசடி செய்தது உட்பட பல வழக்குகள் இவர்மீது இருக்கின்றனவாம். திருவள்ளூரில் கிச்சன் கேபினெட் தொடங்கியிருக்கும் தண்ணீர் பிசினஸில் இவரும் ஒரு பார்ட்னராம். இவரை மாணவரணி துணைச் செயலாளர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்று ஏற்கெனவே போர்க்கொடி எழுந்த நிலையில், மாநகர் பொறுப்புக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்வைக் கிளப்பி யிருக்கிறது. அதுபோல, மதுரை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்புக்குழுவில், சர்ச்சைக்குரிய எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமியின் உறவினர் முகேஷ் சர்மா உள்ளிட்டோரை நியமித்திருக் கிறார்கள். தேர்தல் செலவைப் பார்த்துக் கொள்வார் என்று கணக்கு போட்டு, கட்சிக்காரர்களுக்கு அறிமுகமில்லாத பல்ராம் தனுஷ்கோடி என்பவருக்குப் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். இதனால், கொதித்துப் போயிருக்கிறது மாநகர் தி.மு.க வட்டாரம்” என்ற கழுகாருக்குச் சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம்.
காபியை ரசித்துக் குடித்த கழுகாரிடம், “அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?” என்றோம்.

‘‘அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘தமிழகத்தில் ஆன்மிக அரசியல் சாத்தியமில்லை. 50 ஆண்டுக்கால திராவிட அரசியலை அழிக்கச் சதி நடக்கிறது’ என்று முழங்கியிருப்பது அரசியலைச் சூடாக்கியிருக்கிறது. ரஜினியின் அரசியல் வரவை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்ற நிலையில், இதற்கு நேர்மாறாக கட்சியின் ‘நம்பர் 3’ முழங்கியிருப்பது, ரஜினியால் கட்சிக்குள் குழப்ப ரேகைகள் படர்வதைப் பட்டவர்த்தனமாகக் காட்டிவிட்டது. ரஜினி குறித்து எதுவும் பேசப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் எடப்பாடி. ஜெயக்குமார் அளவிலேயே ரஜினியை டீல் செய்யப்போகிறார்கள்.’’
‘‘ஓஹோ… அ.தி.மு.க தரப்பில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் எப்படியிருக்கின்றன?’’
‘‘இரண்டுவித கவர்ச்சிகர திட்டங்களைக் கையிலெடுத்திருக்கிறது அ.தி.மு.க. ஒன்று, சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு டிசம்பர் 20-ம் தேதிவரை அவகாசம் அளித்திருக்கிறார்கள். இதன் மூலமாக, அதிக எண்ணிக்கையிலான குடும்பங்களை அரிசி அட்டையில் இணைத்து, பொங்கல் பரிசாக ஒரு குடும்பத்துக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் தர திட்டமிட்டிருக் கிறார்கள். இரண்டாவது, வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் 35 லட்சம் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கெல்லாம் மாதம்தோறும் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறதாம். இந்த இரண்டு திட்டங்களுக்கும் மாஸ்டர் மைண்ட் வேலுமணி என்கிறார்கள்.’’

‘‘ம்ம்…’’
‘‘தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி செயல்படுகிறது. தனியாரின் கட்டுப்பாட்டிலுள்ள அந்தக் கல்லூரியை, அரசு கையகப்படுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், லோக்கல் அமைச்சரான ராஜலட்சுமி எதையும் கண்டுகொள்ளாமல் பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்கச் சென்றுவிட்டாராம். போராட்டத்தைக் கேள்விப்பட்ட, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சங்கரன்கோவிலுக்குச் சென்று, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கிறார். இதை எதிர்பார்க்காத அமைச்சர் ராஜலட்சுமி, அவசர அவசரமாக வந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டாராம். தென் மாவட்ட அ.தி.மு.க-வுக்குப் பொறுப்பாளராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரையும் ராஜலட்சுமியையும் முந்திக்கொண்டு ராஜேந்திர பாலாஜி இந்தப் பிரச்னையில் தலையிட்டிருப்பது அ.தி.மு.க-வில் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது’’ என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்காக தனது நெல்லித்தோப்பு தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தொகுதியை விட்டுக்கொடுத்தவர் ஜான்குமார். அதன் பிறகு, காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜான்குமார், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், நாராயணசாமி கண்டுகொள்ளவே இல்லை. அதனால், கட்சி நடவடிக்கைகளிலிருந்து சமீபகாலமாக ஒதுங்கியிருந்த ஜான்குமார், சமீபத்தில் புதுச்சேரி வந்த பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவைச் சந்தித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வான்டடாகச் சென்று, சுரானாவைச் சந்தித்து சால்வை அணிவித்திருக்கிறார் ஜான்குமார். ‘இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான்’ என்று ஜான்குமார் விளக்கம் கொடுத்தாலும், அதை யாரும் நம்பத் தயாராக இல்லை. சுரானாவிடம், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர், உழவர்கரை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் பா.ஜ.க-வை வெற்றிபெற வைக்கிறேன், ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி கொடுங்கள்’ என்று ஜான்குமார் டீல் போட்டிருப்பதாகப் பரவும் தகவலால் அரண்டு போயிருக்கிறார் நாராயணசாமி” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: