`41 தொகுதிகள் தரும் கட்சிகளுடனேயே கூட்டணி’ – பிரேமலதா அறிவிப்பு சாத்தியமா?

தே.மு.தி.க-வின் தற்போதைய வாக்குவங்கி, அ.தி.மு.க கூட்டணியில் அந்தக் கட்சியின் நிலை, தி.மு.க கூட்டணிக்குப் போவதற்கான சாத்தியங்கள், மிக முக்கியமாக மூன்றாவது அணி அல்லது தனியாகக் களமிறங்குமளவுக்கு தே.மு.தி.க தற்போது பலமாக இருக்கிறதா?

“2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க-வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது தே.மு.தி.க. அதேபோல, வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் 41 தொகுதிகளைத் தரும் கட்சிகளுடன்தான் தே.மு.தி.க கூட்டணி அமைக்கும். இல்லையெனில் தனித்துக் களமிறங்கும்”

 

இப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கோயம்பேட்டில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தடாலடியாக அறிவித்துள்ளார், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா. இதற்கு முன்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜயகாந்தின் மகன், விஜய பிரபாகரன்,“இப்போதுவரை அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும், பத்திரிகையாளர்கள் மூன்றாவது அணி அமைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்டார்கள். அப்படி ஒரு வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக தைரியமாக அமைப்போம் என்றுதான் நான் சொன்னேன். தே.மு.தி.க-வுக்கு எதற்குமே அச்சமும் இல்லை; பயமும் இல்லை” என மீண்டும் கூட்டணி குறித்து ஒரு திரியைக் கிள்ளிப் போட்டிருக்கிறார்கள் அம்மாவும் மகனும்.

இந்தநிலையில், தே.மு.தி.க-வின் தற்போதைய வாக்கு வங்கி பலம், அ.தி.மு.க கூட்டணியில் அந்தக் கட்சியின் நிலை, தி.மு.க கூட்டணிக்குப் போவதற்கான சாத்தியங்கள், மிக முக்கியமாக மூன்றாவது அணி அல்லது தனியாகக் களமிறங்குமா தே.மு.தி.க, பிரேமலதா சொல்வதுபோல 41 தொகுதிகள் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படுமா ஒட்டுமொத்தத்தில் தமிழக அரசியல் களத்தில் தற்போது அந்தக் கட்சியின் செல்வாக்கு என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தே.மு.தி.கவின் வாக்குவங்கி வளர்ச்சி!

2005-ல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, 2006-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கியது தே.மு.தி.க. 232 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி 8.45 சதவிகித வாக்குகளை அள்ளியது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றார். இந்த அதிர்ச்சியில் இருந்தே இரண்டு திராவிடக் கட்சிகளும் மீளாதிருந்த நிலையில், தொடர்ந்து, 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி,10.45 சதவிகித வாக்குகளைப் பெற்று பேரதிர்ச்சி கொடுத்தது. 2009 தேர்தலுக்கு முன்பாக இரண்டு திராவிடக் கட்சிகளும் கூட்டணிக்கு வலைவிரித்திருந்தபோது, சிக்கிக்கொள்ளாத விஜஜகாந்த், 2011 தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில், 29 இடங்களில் வெற்றி பெற்றது அந்தக் கட்சி. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். அந்தத் தேர்தலில் தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

தே.மு.தி.க-வின் வாக்கு வங்கி வீழ்ச்சி!

தொடர்ந்து 2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்றது தே.மு.தி.க. அந்தக் கட்சிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சொல்லப்போனால், அந்தக் கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட்ட கட்சியும் தே.மு.தி.க-தான். ஆனால், ஒரு தொகுதியில் கூட அந்தக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. வாக்கு வங்கியும் அடிவாங்கியது. தொடர்ந்து,2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கினார் விஜயகாந்த். 104 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி 103 இடங்களில் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதமும் (2.35) அதளபாதாளத்துப் போனது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெறும் நான்கு இடங்கள் மட்டுமே அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. ஆனாலும், ஒரு இடத்தில் கூட அந்தக் கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை. வாக்கு சதவிகிதத்திலும் (2.2%) ஏற்றமில்லை. ஆக மொத்தத்தில் தற்போது தமிழகத்தில் தே.மு.தி.க-வின் வாக்குவங்கி என்பது 2.5 சதவிகிதத்துக்கும் கீழ் என்பதே உண்மை.

தே.மு.தி.க-வின் இமேஜ்!

தே.மு.தி.கவின் வாக்கு வங்கி படிப்படியாக குறைந்துவந்த அதே காலகட்டத்தில்தான் விஜயகாந்தின் உடல்நிலையும் கூடவே, அவரின் தொடர்பற்ற பேச்சுக்கள், செயல்பாடுகளால் அவரின் இமேஜும் இறக்கத்தைக் கண்டது. கூடவே, பிரேமலதாவின் சில செயல்பாடுகளால், அந்தக் கட்சியின் மீதான நல்ல அபிப்ராயமும் மக்கள் மத்தியில் குறைந்துபோனது. தற்போது விஜயகாந்தால் முன்பைப்போல களத்தில் இறங்கிப் பணியாற்ற முடியாத நிலைதான் இருக்கிறது. ஆனால்,“வயது மற்றும் உடல் சோர்வு காரணமாக விஜயகாந்த் முன்புபோல இப்போது சுறுசுறுப்பாக இல்லை. எனினும், தேர்தல் பிரசார காலத்தின்`கிளைமாக்சில்’ விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விஜயகாந்தின் பிரசாரம் நிச்சயம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் பிரேமலதா. கூடவே. வாக்கு வங்கி சரிவைப் பற்றி யார் கேள்வி எழுப்பினாலும்,“நாங்கள் தனியாக நின்றபோது பெற்ற வாக்குகளைத்தான் பார்க்கவேண்டும். கூட்டணியில் போட்டியிட்ட வாக்குகளைப் பார்க்கக்கூடாது” என மழுப்பல் பதில்தான் தே.மு.தி.க தரப்பில் வரும்.

தி.மு.க - அ.தி.மு.க

 

தி.மு.க & அ.தி.மு.க கணக்கு!

மெகா கூட்டணியையும் கூடவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றியையும் பெற்றிருக்கும் தி.மு.க, தே.மு.தி.க-வின் வருகையை எதிர்பார்ப்பது என்னமோ உண்மைதான். ஆனால், 2014, 2016 -ல் எதிர்பார்த்தது போலல்ல; ஒரு சப்போர்ட்டுக்காக மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். `வந்தால் மகிழ்ச்சி, வரவாவிட்டால் பரவாயில்லை’ என்கிற ரீதியிலேயே தி.மு.க, தே.மு.தி.க-வைப் பார்க்கிறது. மறுபுறம், அ.தி.மு.க-வில் கூட்டணியில் இருந்தாலும், இந்தமுறை 15 சீட்டுகளுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறது, அந்தக் கட்சி.ஒருவேளை, பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி, தனித்துக் களமிறங்கினால், தே.மு.தி.க அந்தக் கூட்டணிக்குச் செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அப்போது, பிரேமலதா கேட்ட 41 தொகுதிகளை விட அதிகமாகவே போட்டியிடலாம்.

ஆனால், புதிதாகக் கட்சி தொடங்கவிருக்கிற ரஜினியுடன், தே.மு.தி.க கூட்டணி அமைத்தால், அது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா, தே.மு.தி.க தனித்துக் களமிறங்குமா என்பது குறித்து பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.

ப்ரியன் (மூத்தபத்திரிகையாளர்) ;

“தே.மு.தி.க தற்போது பிரேமலதாவின் சுயநலத்துக்காகத்தான் இயங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். அது, குடும்பக் கட்சியாக மாறி பலகாலமாகிவிட்டது. அதேபோல, `எங்களை விட்டால் ஆளில்லை’ என்று சொல்லுமளவுக்கு அந்தக் கட்சிக்கு தற்போது பலமில்லை. ஊருக்கு 500 வாக்குகள்தான் அந்தக் கட்சிக்கு விழும். அதனால், தி.மு.க, அ.தி.மு.க கொடுக்கிற இடங்களைத்தான் அவர்கள் வாங்கிக்கொள்ள முடியும். அ.தி.மு.க கூட்டணியில் தங்களின் பேரத்தை அதிகப்படுத்துவதற்காகத்தான் பிரேமலதா, தற்போது இப்படிப் பேசிவருகிறார். அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. ரஜினியோ, கமலோ தங்களுடன் தே.மு.தி.க-வை இணைத்துக்கொண்டால், `சந்தர்ப்பவாதக் கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள்’ என அவர்களுக்குத்தான் அது பாதகமாக அமையும். பா.ஜ.க-வுடன் இணைந்து களமிறங்கினாலும் பெரிய தாக்கத்தை தே.மு.தி-கவால் ஏற்படுத்தமுடியாது. அது அவர்களுக்கே தெரியும். அ.தி.மு.க, அல்லது ஒருவேளை தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால், பத்து தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெறலாம் அவ்வளவுதான்”என்கிறார் அவர்.

ஆனால்,“எம்ஜிஆருக்குப் பிறகு ஏழை மக்களின் வாழ்வு நலம்பெற பாடுபட்டு வருபவர், விஜயகாந்த். இதை மக்கள் புரிந்துகொண்டு தேர்தலில் அதை வெளிப்படுத்துவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பிரேமலதா.

மக்கள் என்ன தீர்ப்பளிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

%d bloggers like this: