பாமகவை நம்ப வேண்டாம்… எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த உளவுத்துறை ரிப்போர்ட்..!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை கூட பாமக நிறுவனர் ராமதாஸ் எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை கொடுத்துள்ள ரிப்போர்ட் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இதுநாள் வரை அதிமுக – திமுக இடையே தான் நேரடிப் போட்டிக்கான வாய்ப்பு இருந்தது. கமல் போன்ற சிலர் 3வது அணி அமைத்தாலும் கூட அது திமுக தரப்பிற்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் கணக்கு இருந்தது. ஆனால் ரஜினி ஆரம்பிக்கும் புதிய கட்சி தமிழக அரசியலில் புதிய கணக்குகளுக்கு வழிவகுத்துள்ளது. ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு தமிழகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை தேர்தல் செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமி நிறுத்தி வைத்துள்ளார்.

அதே நேரம் கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பு என்ன அவர்களை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்வது என்கிற பணியில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். சட்டப்பேரவை தேர்தல் களம் திமுக – அதிமுக என்பதை தாண்டி ரஜினி – திமுக என்று ஆகிவிடக்கூடாது என்பதில் எடப்பாடி மிகவும் கவனமாக இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு ரஜினியுடன் முக்கிய கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு சென்றுவிடக்கூடாது என்பதிலும் எடப்பாடி உறுதியாக உள்ளார். ஆனால் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் அதனை உறுதிப்படுத்த மறுத்து வருகிறார்கள்.

சட்டப்பேரவை தேர்தலில் 41 தொகுதிகளை கேட்டு அதிமுகவிற்கு தேமுதிக நெருக்கடி கொடுத்து வருகிறது. அதே சமயம் பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் பாமகவின் எதிர்பார்ப்பு என்ன, அவர்களின் சட்டப்பேரவை தேர்தல் வியூகம் என்னவாக இருக்கும் என்று அறிய உளவுத்துறையை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். பாமகவின் உயர்மட்ட நிர்வாகிகள், ராமதாசின் செயல்பாடு, அன்புமணியின் பேச்சு போன்றவற்றுடன் ராமதாசுக்கு நெருக்கமான சிலரிடம் உளவுத்துறை நடத்திய ஆய்வில் அவர் அதிமுக கூட்டணி என்பதில் மாற்றுக் கருத்துடன் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் கணிசமான தொகுதிகள் என்றால் திமுக கூட்டணிக்கு செல்வத கூட தவறில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ராமதாஸ் கூறியுள்ளதை உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ளது. இதே போல் எடப்பாடி பழனிசாமிக்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் சுனில் டீமும் கூட பாமக நிர்வாகிகள் செயல்பாடுகளை கவனித்து வருகிறார்கள். அவர்களின் கண்காணிப்பின் அடிப்படையிலும் ராமதாசை கூட்டணிக் கட்சியாக அதிமுக நம்ப முடியாது என்றே தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் உளவுத்துறை மற்றும் சுனில் டீம் கொடுத்துள்ள இந்த ரிப்போர்ட் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பாமக கூட்டணியில் இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக – விசிக கூட்டணியை எதிர்கொள்வது அதிமுகவிற்கு கடினம். இதே போல் ரஜினி – கமல் கூட்டணி அமைத்தால் அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் எடப்பாடிக்கு கிடைக்குமா என்பது சந்தேகம். இப்படிஒரு சூழலில் ராமதாஸ் கடைசி நேரத்தில் கழுத்தறுக்க கூடும் என்பதால் உஷாராக இருக்குமாறு உளவுத்துறை மற்றும் சுனில் டீம் எடப்பாடியை எச்சரித்துள்ளது. எது எப்படியோ திமுகவை மட்டும் அல்லாமல் ரஜினியையும் தற்போது எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.

%d bloggers like this: