ரஜினியும் கமலும் இணைந்தால் உருவாகும் 3 சிக்கல்கள்! – சமாளிக்க முடியுமா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளையெல்லாம் கடந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ‘மக்கள் நலனுக்காக ஈகோவை ஒதுக்கி வைத்து ரஜினியுடன் இணைவேன்’ என்று நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

நேற்று மட்டுமல்ல, இரண்டு நாட்களுக்கு முன் மதுரையில் மீடியாவைச் சந்தித்தபோதும் ‘”நானும் ரஜினியும் கூட்டணி வைப்போம். அது எப்போது என்று இப்போது சொல்ல முடியாது. மேலும், இதை ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன், ரஜினி விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும்போதுகூட, “மக்கள் நலனுக்காக நானும் கமலும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தால், நிச்சயம் இணைவோம்” என்று தெரிவித்திருந்தார்.

ரஜினி – கமல் பேச்சுகளைப் பார்க்கையில் இருவரும் இணைந்து தேர்தலைச் சந்திக்க ரெடி என்பதுபோலவே இருக்கிறது. திரையுலகிலும் இவர்கள் 40 ஆண்டுகால நட்பு கொண்டவர்கள். எனவே, இணைவதற்கான சாத்தியங்களும் உண்டு. ஒருவேளை இந்த இருவரும் இணைந்து தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளம் உண்டு. அவற்றில் முதன்மையான மூன்றை மட்டும் பார்ப்போம்.

1.முதல்வர் வேட்பாளர்:

கமல் கட்சியைப் பொறுத்தவரை கமல்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்து விட்டார்கள். ஆனால், ரஜினி கட்சியில் தொடக்கத்தில் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று பேசப்பட்டது. ஆனால், இந்த வருட மார்ச் மாத வாக்கில் ரஜினி மீடியாவைச் சந்தித்தார். அப்போது, ‘என்னை வருங்கால முதல்வர் என்று அழைப்பதை முதலில் நிறுத்துங்கள் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ஏனெனில், தனக்கு இப்போதே 70 வயதாகி விட்ட நிலையில் முதல்வராகுவது, எதிர்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது சாத்தியமே இல்லை என்பதாகத் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த முடிவில் தற்போது மாறுதல் ஏற்பட்டிருக்கலாம். அதனால், ரஜினி – கமல் இணையும் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதே மிக முதன்மையான சிக்கல். அதை எப்படிக் கையாள்வது என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

2.தொண்டர்கள் எனும் ரசிகர்கள்:

ரஜினி – கமல் இருவருக்குமே அவரவர் கட்சியின் தொண்டர்கள் என்பவர்கள் அவர்களின் ரசிகர்கள்தான். அதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. பொதுவான நபர்கள் என்பவர்கள் 1 அல்லது 2 சதவிகிதம்தான் இருப்பார்கள். அதனால், ரஜினி – கமல் கூட்டணியை இருவரின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது முக்கியக் கேள்வியாக முன் நிற்கிறது.

எம்.ஜி.ஆர் – சிவாஜி எனும் இரு துருவ நட்சத்திர போர் நடந்தது. ஒருவர் பட வெளியீட்டின்போது மற்றவர்கள் ரகளையில் ஈடுபட்டதைப் பற்றிப் படித்திருக்கிறோம். இதே நிலைதான் ரஜினி – கமல் எனும் இரு துருவங்களும் நடந்தது. அதைக் கட்டுப்படுத்த இருவருமே பெரிதும் முயன்றார்கள். தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று அடிக்கடி மேடைகளில் மாறிமாறி சொன்னார்கள். ஆனாலும் ரசிகர்களுக்கு இதெல்லாம் முழுமையாகச் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ரஜினியை முதல்வராக்க கமல் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். அதேபோல, கமலை முதல்வராக்க ரஜினி ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, இரு தரப்பும் ஒருங்கிணைந்து தேர்தல் வேலைகளைப் பங்கிட்டு செய்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதை எதிர்கொள்வதும், சீர் செய்வதும் பெரிய சவாலே.

கொள்கைகள் முட்டிக்கொள்ளும்:
ரஜினி சொல்லும் ஆன்மிக அரசியலுக்கும் கமலுக்கு வெகு தூரம். ஆனால், ரஜினியால் கடவுளை உதாரணமாகக் காட்டாமல் பேச முடியாது. ஏனெனில், அது அவரின் பலம். ரசிகர்களையும் பொதுமக்களையும் அப்படித்தான் கட்டி வைத்திருக்கிறார். கமலுக்காக அதைத் தவிர்த்து பேச அவரால் முடியாது.

தற்போது கமல் கடவுள் மறுப்பைப் பேசுவதைத் தவிர்த்து வருகிறார். அதற்காக ஒரே மேடையில் கடவுளை உயர்த்தி, சிலாகித்து, சிறப்பித்துப் பேசப்படும்போது அப்படியே ஏற்றுக்கொள்வாரா என்று தெரியாது. அப்படி ஏற்றுக்கொண்டால், அவரின் ரசிகர்கள் ஏமாந்துபோவார்கள். இத்தனை நாள் சொன்ன பகுத்தறிவை ஓட்டுகளாகவும் ரஜினியின் நட்புக்காகவும் கைவிட்டார் என்றே புரிந்துகொள்வார்கள். ஏனெனில், கமல் தனது ரசிகர்களை அப்படித்தான் தயார் படுத்தி வைத்திருக்கிறார்.

ஒருவேளை ரஜினியின் ஆன்மிக பேச்சை கமல் தொட்டு பகுத்தறிவு பேசினால், ரஜினியின் ரசிகர்கள் எரிச்சலாகக்கூடும். இது களத்தில் செயல்படுவதிலும் ஆர்வத்தை மட்டுப்படுத்தக்கூடும்.

இன்னும் சில …

இந்த மூன்று சிக்கல்கள் அல்லாமல், தொகுதிகள் பிரிக்கையில் 234 தொகுதிகளில் ஆளுக்கு 117 என்றா. இல்லை ஒருவருக்கு அதிகம், மற்றவருக்கு குறைவு என்றா. அப்படிப் பிரித்தால் குறைவாகப் பிரிக்கப்பட்ட நடிகரின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது உள்பட பல சிக்கல்கள் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் கடந்து ரஜினி – கமல் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்துவிட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது அடுத்த கேள்வி. தனித்தனியாக நிற்பதைக் காட்டிலும் சேர்ந்து நிற்கையில் வாக்கு எண்ணிக்கை அதிகமாகும். அது திமுகவுக்கு பாதகமாக அமையும் என்பதே யதார்த்தம்.

%d bloggers like this: