சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள் –வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

சனிப்பெயர்ச்சியை ஒட்டி 27 நட்சத்திரங்களுக்குமான பரிகாரங்கள் இங்கே உங்களுக்காக…

வாக்கியப் பஞ்சாங்கப்படி மார்கழி 12-ம் தேதி (டிசம்பர் – 27) அதிகாலை 5:22 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனி பகவான் 3, 6, 11 வீடுகளில் பிரவேசிக்கும்போது அனுகூலமான பலன்களைத் தருவார் என்றும் கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்று வரும்போது மாறுபட்ட பலன்களைத் தருவார் என்பதும் நம்பிக்கை.

ராசிகளுக்கான பரிகாரங்கள் சொல்வதுபோல அந்த ராசியில் இருக்கும் நட்சத்திரங்களுக்கான பரிகாரங்கள் சொல்வதன் மூலம் ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட பலனளிக்கும் பரிகாரங்களைத் தரமுடியும். இந்த அடிப்படையில், நிகழும் சனிப்பெயர்ச்சியை ஒட்டி 27 நட்சத்திரங்களுக்குமான பரிகாரங்கள் இங்கே உங்களுக்காக…

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

அசுவினி: சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 4, 7, 10 ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தைக் கண்டகச் சனி என்கிறோம். இந்த அடிப்படையில் மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய நட்சத்திரக் காரர்களுக்கு கண்டகச் சனி தொடங்குகிறது. கண்டகச் சனி, செயல்களில் மந்தமான பலன்களைத் தருவார் என்பதால் கூடுதலான முயற்சி தேவைப்படும் காலகட்டம் இது.
அசுவினி நட்சத்திரம் நட்சத்திரங்களில் முதலானது. இவர்கள் முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமானை வழிபடுவதே சிறந்த பரிகாரம். வாரம் ஒருமுறையாவது அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். சிரமமான வேலைகளைச் சுருக்கமாக முடித்துக்கொடுக்கும் தெய்வம் விநாயகப்பெருமான் என்பதால் கண்டகச் சனியால் விளையும் பாதிப்புகளை நீக்கி அருள் வழங்குவார். விநாயகருக்கு அறுகம்புல்லைச் சமர்ப்பித்துத் தினமும் வழிபடுவதன் மூலம் நற்பலன்களை அதிகரிக்க முடியும். ஏழுமுறை தோப்புக்கரணமும் ஏழுமுறை பிரதட்சிணமும் செய்வதன் மூலம் சனிபகவானின் பார்வையால் உண்டாகும் கெடுபலன்கள் நீங்கி நற்பலன்கள் அதிகரிக்கும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

பரணி: பரணி நட்சத்திரக்காரர்களுக்கு கண்டகச் சனி தொடங்குவதால் எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம். பரணி நட்சத்திரம் தேவி துர்கைக்கு உரியது. இவர்கள் எப்போதும் அம்பிகை வழிபாடு செய்வது அற்புதமான பலன்களைத் தரும். இவர்களுக்கு, இந்தச் சனிப்பெயர்ச்சிக்கான பிரத்யேக பரிகாரமாக ஐயப்பன் வழிபாட்டைச் சொல்லலாம். சனிக்கிழமைகளில் மாலை வேளையில் ஐயப்ப சாமிக்கு பானகம் நிவேதனம் செய்துவழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் தீரும். செயல்களில் வேகம் பிறக்கும். வெள்ளிக்கிழமைகளில் துர்கையை வழிபடுவதும் நல்லது.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

கிருத்திகை: கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி பகவான். சிவபெருமானையும் அவரின் அம்சமான முருகப்பெருமானையும் கிருத்திகை விரதமிருந்து வழிபட்டு வரும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் ஏற்றங்களையும் நல்ல மாற்றங்களையும் அடைவர். கிருத்திகை நட்சத்திரத்தின் 1 -ம் பாதம் மேஷ ராசியில் வருகிறது. மற்ற பாதங்கள் ரிஷப ராசியாகிவிடுகின்றன. எனவே கிருத்திகை 1-ம் பாதத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கண்டகச் சனி. இவர்கள் கூடுதலாக சிவ வழிபாடு செய்வதே சிறந்த பரிகாரமாகும். ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதன் மூலமும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிவாலய தரிசனம் செய்வதன் மூலமும் கண்டகச் சனியின் பாதிப்புகளை முற்றிலும் தவிர்க்கலாம்.
கிருத்திகை 2, 3, 4 ம் பாதங்களைச் சேர்ந்த நட்சத்திரக்காரர்களுக்குச் சனிபகவான் ராசி மண்டலத்தில் 9-ம் வீட்டில் அமர்கிறார். ஏற்கெனவே இருந்த அஷ்டமச் சனியை விட இந்த இடம் மிகுந்த நற்பலன்களைத் தரும் இடம்தான் என்றாலும் செயல்களில் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படும் காலம். ஒருமுறை திருவண்ணாமலை சென்று அக்னி ரூபனான அருணாசலேஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

ரோகிணி: ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசியின் 9-ம் இடத்தில் சனிபகவான் அமைவது இதுவரை இருந்த கஷ்டங்களிலிருந்து விடிவு காலத்தைத் தருவதாக இருந்தாலும் வாகனப் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இல்லையென்றால் அதிகப்படியான செலவுகளும் சிறு விபத்துகளும் ஏற்படலாம். ரோகிணி நட்சத்திரக்காரர்களின் அதிதேவதை பிரம்மன். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை திருப்பட்டூர் சென்று வழிபாடு செய்வது, அதிகபலன்கள் தரும். விசேஷமாக இவர்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் துர்கை அம்மனை வழிபடுவதும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதும் மிகவும் நன்மை பயக்கும் பரிகாரங்களாகும். துர்கை சடுதியில் வந்து சங்கடங்கள் தீர்ப்பவள் என்பதால், ஓடிவந்து உங்கள் துன்பங்கள் தீர்த்து நற்பலன்களை அதிகப்படுத்துவாள் என்பதில் சந்தேகமில்லை.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

மிருகசீரிடம்: சந்திரபகவானை அதிதேவதையாகக் கொண்ட மிருகசீரிட நட்சத்திரம் 1, 2 பாதங்கள் கொண்டு ரிஷப ராசியைச் சேர்ந்தவர்களுக்கு, ராசிக்கு 9-ம் இடத்தில் சனிபகவான் அமர்வது சிறப்பான அமைப்பாகும். இவர்களுக்கு இது நாள் வரையில் இருந்துவந்த பணக்கஷ்டங்கள் தீரும். புதிய வாய்ப்புகள் உருவாகும். என்றாலும் இவர்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த நட்சத்திரக்காரர்கள் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் இணைந்திருப்பதுபோன்ற படத்தினை வைத்து வழிபாடு செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அம்பிகையைத் தொடர்ந்து வழிபாடு செய்துவந்தால் குடும்பத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 3,4-ம் பாதம் மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது. ராசிக்கு எட்டாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். இதனால் உறவுகளுக்கிடையே சிக்கல், தேவையற்ற செலவுகள், ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஆகியன ஏற்படக்கூடும். எனவே சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளை அலட்சியம் செய்வது கூடாது. இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட கிருஷ்ண வழிபாடே சிறந்த பரிகாரமாகும். கிருஷ்ண பகவானுக்குரிய ஏகாதசி திதிகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும். முடிந்தால் ஒருமுறை குருவாயூர் சென்று தரிசனம் செய்வதும் நன்மை பயக்கும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

திருவாதிரை: சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அனுதினமும் சிவ வழிபாடு செய்ய வேண்டியவர்கள். சிவ நாமத்தை எப்போதும் உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டியவர்கள். அவ்வாறு ‘சிவ… சிவ’ என்று சொல்பவர்களுக்குக் கோள்கள் எல்லாம் ‘நல்ல நல்ல’ என்று சம்பந்தப் பெருமானே பாடியிருக்கிறார். எனவே அஷ்டமச் சனி வருகிறதே என்ன பாதிப்புகள் வருமோ என்று அச்சப்படாமல், சிவ நாம பாராயணம் செய்வதும் சிவபுராணம் படிப்பதும் திருவாதிரை நட்சத்திரக் காரர்களுக்குச் சிறந்த பரிகாரமாக அமையும். ருத்ர ஜபம் செய்வதும் கேட்பதும் மிகவும் நல்லது. மேலும் ருத்ர ரூபனான அனுமனைச் சனிக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் கூடுதல் பலத்தோடு செயல்படலாம். அதனால் சனிபகவானால் உண்டாகும் பிரச்னைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

புனர்பூசம்: ராமபிரானின் நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்களைச் சேர்ந்த மிதுனராசிக்காரர்களுக்கு அஷ்டமச் சனி தொடங்குகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கக் கட்டாயம் அனுமனை வழிபட வேண்டும். அனுமன் சனிபகவானை வென்றவர் என்பதால் அவரை வழிபடுவதன் மூலம் சனியின் கெடு பார்வையிலிருந்து தப்பலாம். அனுமனைப் போன்ற நிதானமான பொறுமையும் பக்தியும் கொண்டு ராம வழிபாடும் அனுமன் வழிபாடும் செய்துவந்தால் இந்தக் காலகட்டத்தில் நன்மைகள் அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஆஞ்சநேயரை வழிபடுவதோடு ராமநாம ஜபமும் செய்ய வேண்டியது அவசியம்.
புனர்பூசம் 4-ம் பாதம் கடக ராசியில் வரும் என்பதால் அவர்களுக்குக் கண்டகச் சனியே தொடங்குகிறது. எனவே மற்ற பாதங்களைவிட இந்த பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு நற்பலன்கள் அதிகமாக நடைபெறும். இவர்களும் சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வதன் மூலம் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

பூசம்: பூச நட்சத்திரம் கடக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு ராசிக்கு 7-ம் வீட்டில் சனி பகவான் பிரவேசிப்பதால், கண்டகச் சனி தொடங்குகிறது. எனவே இந்த நட்சத்திரக் காரர்கள், வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். செயல்களில் சின்னச் சின்னத் தடைகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை. குருபகவானை அதிதேவதையாகக் கொண்ட பூச நட்சத்திரக்காரர்ளுக்கு அடுத்த ஓராண்டுக்கு குருபகவானின் பார்வை கிடைப்பது மிகவும் நல்ல விஷயமாகும். அதேபோன்று பூசம் சனி பகவானின் நட்சத்திரம் என்பதால் ஆட்சி பலம் பெற்று அமரும் சனிபகவானால் பெரிய தீமைகள் எதுவும் நடைபெறாது. இவர்கள் தினமும் ஐயப்பசாமியை தியானிப்பது நற்பலன்களைத் தரும். தினமும் விளக்கேற்றி சரணகோஷம் சொல்லி வழிபட்டால் நன்மைகள் கூடும். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிவாலய தரிசனம் செய்வதும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல ஒரு பரிகாரமாகும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

ஆயில்யம்: கடக ராசி, ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு 7-ம் வீட்டில் சனி அமர்வதால் வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் அடிக்கடி ஏற்படும். நண்பர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கிப் பொருளை இழக்க நேரிடும். எனவே பேராசைப் படாமல், இருப்பதை வைத்து வாழப்பழகிக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. இந்த நட்சத்திரக்காரர்களின் அதிதேவதை ஆதிசேஷனான சர்ப்ப தெய்வம். இவர்கள் சுப்ரமண்ய சுவாமியை வழிபட வேண்டியது அவசியம். தினமும்வேலையைத் தொடங்கும் முன், ‘ஓம் சரவண பவாய நமஹ’ என்று 18 முறை சொல்லித் தொடங்குவதன் மூலம் தொடங்கும் வேலைகள் நல்லபடியாக முடியும். ஆறுமுகக் கடவுளின் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர்களால் உண்டாகும் தொல்லைகளும் நீங்கும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

மகம்: மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் சிம்மராசியாகும். இந்த ராசிக்கு ஆறாம் இடத்தில் சனிபகவான் அமர்ந்து பலன் தரப்போவது மிகவும் சிறந்த அமைப்பாகும். அண்மையில் நடைபெற்ற குருப்பெயர்ச்சியும் இந்த நட்சத்திரக்காரர்களுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகம் நட்சத்திரக் காரர்களுக்கு வெற்றிகள் குவியும் காலகட்டம். தொழிலில் நல்ல முன்னேற்றம், எதிர்பாராத பணவரவு ஆகியன உண்டாகும். மக நட்சத்திரக்காரர்கள் எப்போதும் தங்களின் பெற்றோரை வழிபட வேண்டும். தினமும் தந்தை, தாயின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெறும் மகம் ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும். முறையாக பித்ருக்கள் வழிபாடு செய்துவருவது இவர்களைக் கிரக தோஷங்களிலிருந்து காக்கும். மக நட்சத்திரக்காரர்கள் சூரிய வழிபாடு செய்வது நல்லது. ஞாயிற்றுக் கிழமைகளில் சிவாலய தரிசனம் செய்வதும் நல்ல பரிகாரமாகும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

பூரம்: பார்வதி தேவியை அதிதேவதையாகக் கொண்ட நட்சத்திரக்காரர்களான பூர நட்சத்திரக் காரர்களுக்குப் பல்வேறு சுப பலன்கள் நடைபெறும் கால கட்டம் இது. உங்கள் ராசிக்கு ஆறில் சனி அமர்ந்து நற்பலன்களை வழங்க இருக்கிறார். எனவே, பூர நட்சத்திரக் காரர்களுக்கு இதுவரை இருந்துவந்த எதிரிகளின் தொல்லைகள் மறையும். புகழ், பெருமை ஆகியன தேடிவரும். இவர்கள் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. சிவாலய தரிசனமும் சிவபுராண பாராயணமும் நற்பலன்களை அதிகரிக்கும். மேலும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவோ கேட்கவோ செய்தால் சகல நன்மைகளும் தேடிவரும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

உத்திரம்: உத்திர நட்சத்திரத்தின் அதிதேவதை சூரிய பகவான். இந்த நட்சத்திரத் தில்தான் ஐயப்ப சுவாமி அவதரித்தார் என்பது கூடுதல் சிறப்பு. உத்திர நட்சத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியிலும் பிற பாதங்கள் கன்னி ராசியிலும் வரும். அதனால் உத்திர நட்சத்திரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு 6-ம் இடத்திலும் கன்னி ராசிக் காரர்களுக்கு 5-ம் இடத்திலும் அமர்ந்து சனிபகவான் பலன்கள் தர இருக்கிறார். உத்திரம் 1-ம் பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு நற்பலன்கள் மிகுதியாக நடைபெறும் பெயர்ச்சியாக இது அமையும். இவர்கள் ஐயப்ப வழிபாடும் சூரிய வழிபாடும் செய்வதன் மூலம் மேலும் நற்பலன்களை அதிகரிக்கலாம். அதேபோன்று தானம் செய்வதன் மூலம் தனலாபங்களை அடையமுடியும்.
உத்திர நட்சத்திரம் 2,3,4-ம் பாதத்தைச் சேர்ந்தவர்கள் கன்னி ராசிக்காரர்களாவர். இவர்களது ராசிக்கு 5-ல் சனி பகவான் அமைவது நல்ல இடம் ஆகாது. ஆனால் இதற்கு முன்பு இருந்த அர்த்திராஷ்டமத்தை விட சிறந்த இடம். எனவே கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். செலவு செய்வதற்கு முன்பாக யோசித்துச் செய்ய வேண்டியது அவசியம். தீய வழிகளைச் சிந்திக்காமலும் அவ்வழிகளில் செல்லாமலும் இருப்பதன் மூலம் உங்கள் அறிவையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். உத்திர நட்சத்திரம் கன்னி ராசிக்காரர்கள் சிவ வழிபாடு செய்வது மிகவும் அவசியம்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

அஸ்தம்: சாஸ்தாவை அதிதேவதையாகக் கொண்ட அஸ்த நட்சத்திரம் விநாயகரின் அவதார நட்சத்திரமாகும். ராசிக்கு ஐந்தில் குருபகவான் அமர்வதும் குருவின் பார்வை கன்னி ராசியைப் பார்ப்பதும் மிகுந்த நல்ல நிலையாகும். எனவே 5- ம் இடத்து சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் இதனால் குறையும். பொதுவாக அஸ்த நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களுக்கு அதிகமாக உதவி செய்து மன மகிழ்ச்சி அடைபவர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களால் மற்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை ஏற்படும். செலவுகளில் மட்டும் கட்டுப்பாடு தேவை. தினமும் விநாயகர் வழிபாடும் வாரம் ஒருமுறையேனும் விநாயகர் கோயிலுக்குச் சென்று பிரதட்சிணம் செய்து வழிபடுவதும் நல்லது. 10 முறை தோப்புக்கரணமும் 10 முறை பிரதட்சிணமும் செய்ய வேண்டும். விநாயகர் அகவல் பாடுவதும் கேட்பதும் நல்லது. ஒருமுறை, பூரண புஷ்கலை சமேதராக ஐயப்பன் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

சித்திரை: சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும் அடுத்த இரண்டு பாதங்கள் துலா ராசியிலும் வரும். எனவே சனிபகவான் முதல் இரண்டு பாதங்களுக்கு 5-ம் இடத்திலும் 3, 4 ஆகிய பாதங்களுக்கு நான்கிலும் அமர்ந்து பலன் தர இருக்கிறார். சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களின் ராசிக்குக் கோசாரப்படி சனிபகவான் சாதகமாக இல்லை. என்றாலும் பெரிய பாதகங்களும் நேராது. குருபகவான் ராசியைப் பார்ப்பதால் தொல்லைகள் நீங்கும். புதிய முயற்சிகளில் கவனமாகச் செயல்பட்டால் நன்மைகள் நடைபெறும். இவர்கள் எப்போது சிவ நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டியது அவசியம். சிவஸ்துதி ஒன்றை சொல்லிக்கொண்டே பணியாற்றினால் வெற்றிகள் கிடைக்கும்.
சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதத்தில் பிறந்தவர்களின் ராசிக்கு 4-ம் இடத்தில் சனி பகவான் அமர இருக்கிறார். இது அர்த்திராஷ்டம சனியாகும். இதனால் சின்னச் சின்னத் தடைகள் செயல்களில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும் என்றாலும் பாதிப்புகள் அதிகம் இருக்காது. எனவே இந்த பாதங்களைச் சேர்ந்தவர்கள் சுப்ரமண்ய வழிபாடு செய்வதன் மூலம் பாதிப்புகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு நன்மையடையலாம். வாய்ப்புள்ளவர்கள் ஒருமுறை திருச்செந்தூர் சென்று வழிபடுவது நன்மை தரும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

சுவாதி: வாயு பகவானின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரம் துலாராசியைச் சேர்ந்தவர்களுக்கு ராசிக்கு 4 – ல் அமர்ந்து பலன் தருவதால் கண்டகச் சனி அல்லது அர்த்திராஷ்டம சனியாவார். ஆனாலும் துலா ராசியைப் பொறுத்தவரை அது சனியின் உச்சவீடு. சனிபகவான் ஆட்சி பலம் பெற்று அமர்வதாலும் நீசமான குருவோடு சேர்ந்து பலன்கொடுப்பதாலும் துலாராசிக்கு நற்பலன்களே விளையும். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய காலகட்டம் இது. மனக்குழப்பங்கள் ஏற்படும். இதனால் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள்.
எனவே முறையான இறைவழிபாடு செய்ய வேண்டியது அவசியம். வாயுபகவான் அதிதேவதை என்பதால் வாயுபுத்திரனான அனுமனை வழிபடுவது மிகவும் நற்பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் சுந்தரகாண்ட பாராயணமும் ஆலயம் சென்று அனுமன் தரிசனமும் செய்வது நல்லது. மேலும் சுவாதி நட்சத்திரம் நரசிம்ம சுவாமிக்கு உரியது. பிரதோஷ தினத்தன்று மாலை நரசிம்ம சுவாமிக்குப் பானக நிவேதனம் செய்து வழிபடுவதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் தீரும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

விசாகம்: முருகப்பெருமானை அதிதேவதையாகக் கொண்ட நட்சத்திரம் விசாகம். எனவே இயல்பாகவே முருக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியவர்கள் இந்த ராசிக்காரர்கள். விசாக நட்சத்திரம் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும் நான்காம் பாதாம் விருச்சிக ராசியிலும் அமைகின்றன. எனவே முதல் மூன்று பாதங்களைச் சேர்ந்தவர்கள் அர்த்திராஷ்டமம் நடைபெறுவதால் முருக வழிபாட்டையும் விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். வேலை அல்லது கல்வி நிமித்தமாகக் குடும்பத்தை பிரிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் அதிகமாக பயப்படும்படி எதுவும் நடந்துவிடாது. முடிந்தவரை சரவண பவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து வாருங்கள். குருவாயூருக்குச் சென்று கிருஷ்ண வழிபாடு செய்வதும் இவர்களுக்கு மிகவும் உகந்த வழிபாடாகும்.
விசாக நட்சத்திரம் 4 ம் பாதம் விருச்சிக ராசியில் வருகிறது. இந்தப் பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராசிக்கு மூன்றில் சனிபகவான் அமர்கிறார். இது மிகவும் நல்ல அமைப்பாகும். தடைகள் நீங்கி வெற்றிகள் அதிகரிக்கும். செல்வ வளம் சேரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விசாக நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக் கிழமைகளில் சுக்ர ஹோரையில் மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

அனுஷம்: மகாலட்சுமியை அதிதேவதையாகக் கொண்ட நட்சத்திரம் அனுஷம். மகான் மகாபெரியவா அவதரித்ததும் அனுஷத்தில்தான். அனுஷ நட்சத்திரக்காரர்களின் விருச்சிக ராசிக்கு இதுவரை இருந்த ஏழரைச் சனி விலகுகிறது. சனிபகவான் மூன்றாம் இடமான மகரத்தில் பெயர்ச்சியாகிறார். இது மிகவும் யோகமான அமைப்பாகும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது நடைபெறும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். முடிவெடுக்க முடியாமலும் வாக்குக்கொடுத்து நிறைவேற்ற முடியாமலும் இருந்த அனுஷ நட்சத்திரக்காரர்கள் இப்போது சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள். தீர்க்கமாக முடிவெடுத்து வெற்றிபெறுவார்கள்.
அனுஷ நட்சத்திரக்காரர்கள் தான தர்மங்கள் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும். வேதம் கற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் தானம் செய்வதன் மூலம் மேன்மேலும் தன தான்ய அபிவிருத்தியைப் பெறலாம். மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்வது, கனகதாரா ஸ்தோத்திரப் பாராயணம் செய்வது ஆகியன நன்மைகளை வாரி வழங்கும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

கேட்டை: கேட்டை நட்சத்திரத்தின் அதிதேவதை இந்திரன். இந்திரன் தேவலோக ராஜன். இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு ராஜயோகம் ஏற்படும். புதிய வீடு, வாகன யோகங்கள் வாய்க்கும். நல்ல வேலை, குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் ஆகியன கூடும். விருச்சிக ராசியைப் பொறுத்தவரை சந்திரன் நீசமடையும் ராசி இது என்பதால் மனவலிமை குறைவாகக் காணப்படும் ராசி. எனவே மனவலிமை அதிகரிக்க துர்கையை வழிபடுவது மிகவும் அவசியம். ராகு கால வேளைகளில் துர்கையை நினைத்து வீட்டிலேயே விளக்கேற்றி வணங்கிவந்தால் மனவலிமை அதிகரிப்பதோடு பகைவர்களை வெல்லும் வலிமையும் அதிகரிக்கும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

மூலம்: தனுசு ராசி, மூல நட்சத்திரக் காரர்களுக்கு ஜன்மத்தில் இருந்த சனிபகவான் பெயர்ந்து இரண்டாம் இடத்தில் அமர்கிறார். பாதச்சனி என்று சொல்லப்படும் இந்த இரண்டாம் இடத்தில் மகர ராசியில் சனிபகவான் ஆட்சிபலம் பெற்று அமர்கிறார். இதனால் இதுவரை இருந்த இக்கட்டுகளிலிருந்து சிறு விடுதலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த பல காரியங்கள் செயல்பாட்டுக்கு வரும். பொருள் வரவில் இருந்த தட்டுப்பாடு நீடிக்கும் என்பதால் சிக்கன நடவடிக்கை தேவைப்படும் காலகட்டமிது. மூல நட்சத்திரக்காரர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் விலகும். இவர்களுக்கான முக்கியமான பரிகாரம் கிழங்கு தானம். கிழங்குவகைகளை அடிக்கடி தானம் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும் என்கிறது சாஸ்திரம். வாய்ப்பிருந்தால் ஒருமுறை திருப்பட்டூர் சென்று பிரம்மனை தரிசித்துவிட்டு வருவதும் நல்லது.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

பூராடம்: வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எல்லாம் போராடி வெல்பவர்கள் பூராட நட்சத்திரக் காரர்கள். பூராட நட்சத்திரக்காரர்களின் அதிதேவதை வருணபகவான். இந்தச் சனிப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த பல பிரச்னைகளிலிருந்து விடுவிக்கும். என்றாலும் தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் கண்டிப்பு காட்டாமல் விட்டுக்கொடுத்துப் போகவேண்டியது அவசியம். இவர்களின் ராசிக்கு இரண்டாம் இடத்தில் நீசமான குருவோடு சனிபகவான் இணைகிறார். இதனால் கெடுபலன்கள் குறையும். மேலும் நற்பலன்கள் அதிகரிக்க மகான்களின் அதிஷ்டானங்கள், ஜீவசமாதிகள் ஆகியவற்றை தரிசனம் செய்வது நல்லது. குரு தரிசனமும் ஆசியும் துன்பங்களை நீக்கி இன்பங்களை வழங்கும். மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் சாத்தி வழிபடுவது ஆகச்சிறந்த பரிகாரமாக அமையும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

உத்திராடம்: உத்திராட நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும் பிற பாதங்கள் மகர ராசியிலும் வரும். தனுசு ராசிக்கு இரண்டாம் இடத்திலும் மகர ராசிக்கு ஜன்மத்திலும் சனி அமர்கிறார். எனவே முதல் பாதம் உத்திராட நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் சூரிய வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும். சிவ வழிபாடும் அவசியம். சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் ( குறைந்தது ஆறு என்ற எண்ணிக்கையில்) அபிஷேகம் செய்து வந்தால் சிவன் குளிர்ந்து நன்மைகள் அருள்வார். அதனால் சனிபகவானால் உண்டாகும் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். பாதச் சனி பொங்கு சனியாக மாறி நற்பலன்கள் அளிக்கும்.
உத்திராட நட்சத்திரத்தின் 2,3,4 ஆகிய பாதங்கள் மகர ராசியில் வருகிறது. மகர ராசியில் சனி பகவான் ஜன்மச் சனியாக அமர்கிறார். மகர ராசி சனிபகவானின் சொந்த வீடு. அங்கே அவர் ஆட்சி பலம் பெற்று அமர்கிறார். ஜன்ம குருவும் நீசமடைந்திருக்கிறார். அதனால் வழக்கமாகப் பிற ராசிகளுக்கு நட்சத்திரங்களுக்கு ஜன்ம சனி ஏற்படுத்தும் பாதிப்புகள் உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படாது. உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை விநாயகப்பெருமான். சனியின் தொல்லைகளை வென்றவர் கணநாதர் என்பதால், கணபதி வழிபாடு செய்துவருவதும் சிவாலய தரிசனம் செய்துவருவதும் உத்திராட நட்சத்திரக்காரர்களுக்குச் சிறந்த பரிகாரமாக அமையும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

திருவோணம்: திருவோண நட்சத்திரக்காரர்களின் சொந்த ராசியிலேயே சனி பகவான் அமைவதால் காரியங்களில் தடங்கல்கள், அவப்பெயர்கள், பண விரயம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் சனிபகவானின் சொந்தவீடாகவே இவர்களின் ராசி அமைவதால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். மேலும் திருவோண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்குரியது. எனவே திருவோண விரதம் மற்றும் ஏகாதசி விரதம் இருப்பது இவர்களுக்கான மிகச்சிறந்த பரிகாரமாகும். பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்வதும் இவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரமாக அமையும். ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மந்திரத்தைத் தினமும் காலையும் மாலையும் 108 முறை சொல்லிவந்தால், நன்மைகள் மிகுதியாகும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

அவிட்டம்: அவிட்ட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும் அடுத்த இரண்டு பாதங்கள் கும்ப ராசியிலும் வரும். இதில் மகர ராசிக்கு ஜன்மச் சனியும் கும்ப ராசிக்கு ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இந்தப் பெயர்ச்சி அமைகிறது. அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரை இருந்த சிக்கல்கள் பலவற்றிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தாலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவைபடும். மகர ராசி சனி பகவானின் சொந்தவீடு என்பதாலும் ஆட்சிபலம் பெற்று அமர்வதாலும் வழக்கமாக ஜன்மச் சனி கொடுக்கும் பாதிப்புகளைக் கொடுக்க மாட்டார். அதே வேளையில் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டியதும் அவசியம். யாரையும் நம்பி எதையும் பேசுவதையோ பொறுப்பை ஒப்படைப்பதையோ தவிர்க்கவேண்டும். கோயில்களுக்கு தானம் செய்வது. சொந்த ஊரில் இருக்கும் கோயில்களில் வழிபாடுகள் நடைபெற உதவுவது, கோயில்களில் விளக்கேற்ற எண்ணெய் தானம் செய்வது ஆகியவை இவர்களுக்கான முக்கிய பரிகாரங்களாகும்.
கும்ப ராசியைச் சேர்ந்த அவிட்டத்தின் 3,4 பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏழரைச் சனி தற்போதுதான் ஆரம்பிக்கிறது. கும்பமும் சனிபகவானின் சொந்த வீடுதான் என்பதால் பெரும் கெடுதல்கள் ஏதும் ஏற்படாது. அதே வேளையில் ராசிக்கு 12 – ல் அமரும் சனி பகவான் செலவுகளை அதிகரிக்கச் செய்வார். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். இவர்கள் முருக வழிபாடு செய்வது நல்லது. முருகனுக்கு உகந்த விபூதி அபிஷேகம் செய்து அதைக் கண்ணாரக் கண்டு வழிபடுவது மிகச் சிறந்த பரிகாரமாகும். முருகனின் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தால் நற்பலன்கள் விளையும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

சதயம்: சதய நட்சத்திரம் கும்ப ராசிக்கு ஏழரைச் சனி தொடங்க இருக்கிறது. சதய நட்சத்திரத்தின் அதிபதி தர்மதேவதை. எனவே எப்போதும் தர்ம வழியில் நடப்பதே இவர்களுக்கான பரிகாரமாகும். கும்ப ராசிக்கு 12-ம் இடத்தில் அமரும் சனிபகவான் தேவையற்ற குழப்பங்களை மனத்தில் உருவாக்குவார். ஆனால் கும்பமும் சனிபகவானின் சொந்த வீடு என்பதால் பிரச்னைகளைக் குறைவாகவே தருவார். ஏழரைச் சனியால் உண்டாகும் பிரச்னைகள் நீங்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு பால் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்து அதைக் கண்டு மகிழ வேண்டும். இதனால் மன அமைதியும் தெளிந்த சிந்தனையும் உண்டாகும். அந்தணர்கள், வேதம் படித்த பண்டிதர்களுக்கு உதவுவதன் மூலம் புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

பூரட்டாதி: பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமாக இந்தச் சனிப்பெயர்ச்சி அமைய இருக்கிறது. பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும் கடைசி பாதம் மீன ராசியிலும் அமைகின்றன. இதனால் முதல் மூன்று பாதங்களுக்கு ஏழரைச் சனி தொடக்கம்; நான்காம் பாதத்துக்கு 11-ம் இடத்தில் சனிபகவான் அமர்கிறார். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குபேரன். குபேரனின் ஆசியைப் பெற நாம் சிவ வழிபாடும் ஐயப்ப வழிபாடும் செய்ய வேண்டியது அவசியம். குலதெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். உள்ளூரில் இருக்கும் சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.
மீன ராசியில் அமையும் பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாகத்துக்காரர்கள், இந்தச் சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஏற்கெனவே உங்களுக்கு குரு, ராகு – கேது ஆகிய கிரகங்கள் நற்பலன்களைத் தந்துகொண்டிருக்கிறார்கள். அதோடு சனிபகவானும் இணைந்து நற்பலன்களை வழங்க இருக்கிறார். ஏற்றமான ஒரு காலம் அமைய இருக்கிறது. இந்த நற்பலன்கள் அதிகரிக்க, `ஓம் நமோ நாராயணா’ என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் புருஷ சூக்தம் பாராயணம் செய்வதும் செவிமடுப்பதும் குபேர சம்பத்துக்களைப் பெற்றுத் தரும். மஞ்சள் பட்டு வஸ்திரத்தை பெருமாளுக்குச் சமர்ப்பித்து வணங்குவது, இவர்களுக்கான சிறந்த பரிகாரமாகும்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

உத்திரட்டாதி: மீன ராசிக்காரர்களான உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் அதிர்ஷடமான காலமாக அமையும். தொட்டதெல்லாம் துலங்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்கும் எல்லாம் சாதகமாகும். நீதியின் வழியில் நடக்கும் இந்த நட்சத்திரக்காரர்கள் சிவ சகஸ்ரநாம பாராயணம் செய்வது சிறந்த பரிகாரமாகும். தானம் அளிப்பதும் கோயில்களைப் புனரமைக்க உதவுவதும் மிகச்சிறந்த பலன்களைக் கொடுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

ரேவதி: மிகவும் அற்புதமான காலகட்டத்தில் ரேவதி நட்சத்திரக்காரர்கள் அடியெடுத்துவைக்கிறார்கள். இதுவரை 10-ம் இடத்தில் கண்டகச் சனியாக இருந்த சனி பகவான் தற்போது அவரது சொந்தவீடான மகரத்தில் பிரவேசித்து மீன ராசிக்கு 11 – ம் இடத்தில் அமர இருக்கிறார். இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து மிகவும் சாதகமான பலன்களைத் தரப்போகும் காலகட்டமாக இது அமையும்.
மேலும் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவான். அவர் ஆட்சி பலம் பெற்று அமர்வது மிகவும் சிறப்பானதாகும். இதுவரை தடைப்பட்ட செல்வச் செழிப்புகளையெல்லாம் அள்ளி வழங்கப்போகிறார் சனிபகவான். இந்த நட்சத்திரக்காரர்கள் மேலும் நற்பலன்களைப் பெற கிருஷ்ண பகவானை வணங்குவது நல்லது. ஆலயங்களுக்குச் சர்க்கரைப் பொங்கல் வைத்து நிவேதனம் செய்வதற்குரிய பொருள்களைத் தானம் அளிப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும். சர்க்கரைப் பொங்கலைப் போல வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

%d bloggers like this: