பா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி?! -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்?

அன்புமணி ராமதாஸுக்குத் துணை முதல்வர் பதவி, பா.ஜ.க-வுக்குக் கொடுப்பதைவிட அதிகமான சீட்டுகள்’ ஆகியவற்றைக் கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க-வுக்கு நிபந்தனை விதித்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால்,

அமைச்சர்கள் சந்திப்பின்போது உண்மையில் நடந்தது என்ன, பா.ம.க., அ.தி.மு.கவுக்கு நிபந்தனையாக முன்வைக்கும் விஷயங்கள் என்னென்ன ஆகியவை குறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.
2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், `மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்கிற கோஷத்தை முன்வைத்தும், இளைஞரணிச் செயலாளர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தும் தேர்தலைச் சந்தித்தது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால், போட்டியிட்ட ஒரு இடத்தில்கூட அந்தக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.

தொடர்ந்து, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த மருத்துவர் ராமதாஸ், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தார். முதல்வரும் துணை முதல்வரும் ராமதாஸின் பண்ணை வீட்டுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கே அவர்களுக்கு தடபுடலாக விருந்தளிக்கப்பட்டது.

தேர்தலில், அந்தக் கட்சிக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அதேவேளையில், பா.ம.க-வின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எட்டு இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இவற்றில், அரூர், சோளிங்கர், பாபிரெட்டிபட்டி ஆகிய தொகுதிகளில் பா.ம.க-வின் உதவியுடனேயே அ.தி.மு.க வெற்றி பெற்றதாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியோ ஆனால், சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க-வின் தேவையை உணர்ந்தே இருக்கிறது அ.தி.மு.க. ஆனால், பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி குறித்து, தொகுதிப் பங்கீடுகள் குறித்து அவ்வப்போது பல விவாதங்கள் எழுந்துவரும் நிலையில் பா.ம.க குறித்து மட்டும் எந்தவிதச் சத்தமும் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில்தான், வன்னியர்களுக்கு 20 சதவிகித ஒதுக்கீட்டுக்கான போராட்டங்களை அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ். முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. முதல்வரின் அழைப்பின் பேரில் அவரைச் சந்தித்தார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ். ஆனால், `சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை அளிக்க தனி ஆணையம் அமைக்கப்படும்’ என்கிற முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பில் திருப்தியடையவில்லை மருத்துவர் ராமதாஸ்.

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்
`சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்போம் என்பது இந்தப் பிரச்னையைக் கிடப்பில் போடும் செயலாகும்’ என அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து, தமிழகம் முழுவதுமுள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தியது பா.ம.க. தொடர்ந்து மூன்றாவதுகட்டமாக, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் மக்கள்திரள் போராட்டத்தை நடத்தியது. தொடர்ந்து கடந்த 21-ம் தேதி, `வன்னியர் 20% தனி ஒதுக்கீடு: தமிழக அரசின் நடவடிக்கை ஏமாற்றும் முயற்சி’ என மீண்டும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில்தான், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி இருவரும் மருத்துவர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 21-ம் தேதி மாலை சந்தித்தனர். வரும் 27-ம் தேதி நடக்கும் அ.தி.மு.க பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் ராமதாஸ் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆனால், மருத்துவர் ராமதாஸ், அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி, அதிக சீட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால், “வன்னியர்களுக்கான 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தால் போதும். வேறு எதைப் பற்றியும் தான் கேட்கவில்லை. ஆனால், தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தால் மட்டுமே கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என நிபந்தனை விதித்தார். இருபது சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறாமல், எங்களுடன் கூட்டணியில் சேர்ந்தால், கட்சியின் மீதான மரியாதை குறைந்துவிடும் என நினைக்கிறார். ஆனால், எங்கள் தரப்பில் எந்தவித உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை. காரணம், வன்னியர்களுக்குக் கொடுத்தால் மற்ற சமூகத்தினரும் தனி இட ஒதுக்கீட்டைக் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். தேர்தலில் அது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால், கண்டிப்பாக அவர்களின் டிமாண்ட்டை தற்போது ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை” என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில்.

இந்தநிலையில், நான்காவதுகட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் பெருந்திரள் போராட்டங்களை நடத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அரசுக்கு மனு கொடுக்கும் நிகழ்வுக்கு ஆயத்தமாகிவருகிறது பா.ம.க. கூடவே, வரும் டிசம்பர் 31-ம் தேதி, பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வேறு நடைபெற இருக்கிறது. கண்டிப்பாக அன்று, கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் அல்லது அதற்கான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

போகிற போக்கைப் பார்த்தால், தேர்தல் நெருங்குவதற்குள் பல கூட்டணி மாற்றங்கள், அரசியல் களேபரங்களைத் தமிழகம் சந்திக்கும் என்றே தெரிகிறது.

%d bloggers like this: