மலச்சிக்கலால் அவதியா? நீங்களாகவே குணப்படுத்தலாம்!

வயிற்றில் ஏற்படும் தொல்லைகளில் ஒன்று கான்ஸ்டிபேஷன் என்னும் மலச்சிக்கல். நன்றாகச் செரிமானமாகி, எளிதாக மலம் கழிந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவதாலும் பலருக்குத் தீவிரமான கோளாறு எதுவும் இல்லாமலும் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். பெருங்குடல், மலக்குடல் இவை சரியாகச் செயல்பட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடாதது, குறைவான உடல் செயல்பாடு, தண்ணீர் குறைவாக அருந்துதல், பேறுகாலம் அல்லது சில மருந்துகளைச் சாப்பிடுவது போன்றவை உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு இருக்கலாம். பலருக்கு வெளியே தெரியாத ஆரோக்கிய கேடுகள் மலச்சிக்கலை உருவாக்கும்.

வாழ்க்கை முறையையும், சாப்பாட்டு முறையையும் மாற்றுவதால் மலச்சிக்கலைத் தீர்க்கலாம்.

தேங்காயெண்ணெய்

தேங்காயெண்ணெயில் எம்சிஎஃப்ஏ என்னும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை குடலின் இயக்கத்தைத் தூண்டி மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. இந்த எண்ணெய் சிறுகுடலுக்குத் தேவையான உயவை அளிக்கிறது. உடலிலிருக்கும் அதிகப்படியான கழிவுகளை வெளியேற்றுகிறது. சுத்தமான தேங்காயெண்ணெயை தினமும் இரண்டு தேக்கரண்டிகள் அருந்தி வந்தால் மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம். தேங்காயெண்ணெயை உள்ளுக்குள் சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.

இஞ்சி

சமையலில் ருசிக்காகப் பயன்படுத்தப்படும் இஞ்சிக்குப் பல மருத்துவகுணங்கள் உள்ளன. இது இயற்கையான மலமிளக்கி ஆகும். வயிற்றின் செயல்பாட்டைத் தூண்டி மலச்சிக்கலை இது தீர்க்கிறது. இஞ்சியைத் தேநீருடன் சேர்த்துப் பருகலாம் அல்லது இஞ்சி எண்ணெயை அடிவயிற்றில் தடவி அழுத்திக்கொடுக்கலாம்.

காஃபி

காஃபைன் கலந்த பானங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் மலம் வெளியேறுவதைத் தூண்டுகின்றன. அடிவயிற்றுத் தசைகளைத் தூண்டி குடலிலிருந்து மலக்குடலுக்கும் பின்பு வெளியேவும் மலத்தைத் தள்ளும் பணியை காஃபி செய்கிறது. மலச்சிக்கல் இருப்பதுபோல் உணர்ந்தால் ஒன்று அல்லது இரண்டு கோப்பை காஃபி அருந்தினால் மலம் எளிதாக வெளியேறும். அதிகமாக காஃபி அருந்தினால் உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் உள்ளது. ஆகவே, காஃபி அருந்தும்போது நிறையத் தண்ணீர் பருகவேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை அமிலத் தன்மை கொண்டது. அதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களும் உள்ளன. இவை குடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றி, நீரை நிரப்புகின்றன. நீரின் அளவு அதிகமாகும்போது மலம் இளகி வெளியேறுகிறது.

அன்னாசிப்பழச் சாறு

அன்னாசிப் பழம் சுவை நிறைந்தது மட்டுமல்ல, ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியதுமாகும். பிரோமெலைன் என்னும் நொதி (என்சைம்) அன்னாசிப்பழத்தில் உள்ளது. இது வயிற்றுப் பொருமலைக் குறைத்து மலச்சிக்கலை போக்குகிறது.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் இயற்கையான மலமிளக்கியாகும். அஜீரணம், வயிற்றுப் பொருமல் போன்ற மற்ற உபாதைகளையும் இது தீர்க்கிறது. பெருஞ்சீரகப் பொடி அரை தேக்கரண்டி எடுத்து, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் அருந்தி வர வயிறு ஆரோக்கியம் பெறும். ஏதாவது ஓர் எண்ணெயில் 2 அல்லது 3 சொட்டு பெருஞ்சீரக எண்ணெய் கலந்து அதை அடிவயிற்றில் இதமாக தடவி அழுத்தி விடலாம்.

பாலும் நெய்யும்

பொதுவாகப் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களைச் சாப்பிடுவது மலம் இறுகுவதற்குக் காரணமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாலுடன் நெய் சேர்த்துச் சாப்பிடும்போது வயிற்றின் இயக்கம் தூண்டப்படுகிறது. ஒரு தம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 அல்லது 2 தேக்கரண்டி நெய் சேர்த்து தினமும் மாலையில் அருந்தி வரக் காலையில் மலம் எளிதாகக் கழியும்.

மலச்சிக்கலை எளிதாகத் தீர்ப்பதற்கு நீர் போதும். தினமும் அதிக அளவு நீர் அருந்தினால் மலம் கழிப்பதில் பிரச்சனை இருக்காது. வெதுவெதுப்பான நீர் அருந்துவது இன்னும் நல்ல பலன் தரும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் சுறுசுறுப்பாக நடமாடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது.

%d bloggers like this: