“மாமா… மாப்ள!” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…

‘சபாஷ்!’’ – என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். புரியாமல் பார்த்தோம். “20.12.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘முன்கூட்டியே தேர்தல்… முடிவுக்கு வருகிறதா கூட்டணி? பன் வார் லால்’ என்று ஆளுநர் பன்வாரிலாலின் அரசியல் நகர்வுகள் குறித்து எழுதியிருந்தீர். அந்தக் கட்டுரையில், ‘தமிழக அரசுக்கு எதிராக அஸ்திரத்தை ஆளுநர் ஏவுவார். அதற்கு எதிர்க்கட்சிகளையும் பயன்படுத்தப்போகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தீர். உமது நிருபர் படை கூறியதுபோலவே, டிசம்பர் 22-ம் தேதி ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கொடுத்துள்ளார் ஆளுநர். அவரிடம் எடப்பாடி அரசின் ஊழல் புகார்களைப் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி அண்ட் கோ மீதான பிடி இறுகலாம் என்கிறார்கள். இதைச் சரியாக சொன்னதற்குத்தான் இந்த சபாஷ்’’ என்ற கழுகார், கைநிறைய ஏற்காடு ஹோம் மேட் சாக்லேட்களை அள்ளிக்கொடுத்து விட்டு, தானும் ஒரு விள்ளலை உள்ளே தள்ளினார்.

‘‘200 இடங்களில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று சூளுரைத்திருக்கிறாரே ஸ்டாலின்?’’ என்று கழுகாரைச் செய்திகளுக்குள் இழுத்தோம்.
‘‘இது ஐபேக் ஏற்கெனவே கொடுத்த ஐடியாதான். ‘130-க்கு குறைவான இடங்களில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தாலும், அதை ‘வடக்கு’ பாணியில் பா.ஜ.க எளிதாகக் காலி செய்துவிடும்’ என்று ஐபேக் எச்சரித்துள்ளதாம். இதற்காகத்தான் 200 என்கிற இலக்கை நிர்ணயித்திருக்கிறாராம் ஸ்டாலின். கூட்டணிக் கட்சி களிடம் கறார்காட்டும் முடிவிலிருந்த தி.மு.க., இப்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதாம். எந்தக் கட்சியையும் கழற்றிவிடாமல், கூட்டணிக் கட்சிகளைச் சரிக்கட்டும் அளவுக்கு சீட்களை வழங்கலாம் என்று ஸ்டாலின் தரப்பு முடிவெடுத்துள்ளது. ரஜினியின் என்ட்ரியே இந்த மனமாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள்.’’
‘‘ஓ… ஒரு சில தலைவர்களிடம் குறிப்பிட்ட அசைன்மென்ட்களை ஸ்டாலின் கொடுத்திருக்கிறாராமே?”

‘‘அதுவா… அ.தி.மு.க சார்பில் சீட் கேட்கும் நபர்களின் பட்டியலை தி.மு.க தயார் செய்துவருகிறது. அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, கடைசி நேரத்தில் சீட் கிடைக்காமல் விரக்தியில் இருப்பவர்களை வளைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காகச் சில தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாராம் ஸ்டாலின். அந்த நபர்களைப் போட்டி வேட்பாளராகக் களமிறக்கி, அ.தி.மு.க-வின் வாக்குவங்கியில் சேதாரத்தை ஏற்படுத்த தி.மு.க திட்டமிட்டிருக்கிறது.”
“அதெல்லாம் இருக்கட்டும்… பிரசார களத்தில் எம்.ஜி.ஆர்., அண்ணா அஸ்திரங்களையெல்லாம் அதிரடியாக வீசுகிறார் கமல்ஹாசன்… முதல்வர் பழனிசாமியும் தன் பங்குக்கு ‘2,500 ரூபாய் தருவோம்’ என்று தேர்தல் களத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலின் தரப்பில் அப்படியெதுவும் அதிரடி காட்டப்படவில்லையே?”
“கொரோனா காரணமாக கிச்சன் கேபினெட் யோசிக்கிறது என்கிறார்கள். அதனாலேயே பெரிய அதிர்வை ஸ்டாலினால் கிளப்ப முடியவில்லை. இப்போதுதான், ‘ஜனவரி முதல் வாரத்துக்குப் பிறகு அநேகமாகப் பிரசாரத்தை தொடங்குவோம்’ என்று அறிவித்திருக்கிறார்கள்.’’
‘‘சரிதான்… மு.க.அழகிரியின் திடீர் சென்னை விசிட்டின் பின்னணி என்ன?’’
‘‘தன் தாயார் தயாளு அம்மாளைப் பார்க்க வந்திருக்கிறார் அழகிரி. கோபாலபுரத்தில் தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்தவர், அவருடன் நீண்ட நேரம் செலவழித்திருக்கிறார்.’’
‘‘ஓஹோ…’’
‘‘பெயர் சொல்ல மாட்டேன்… நீரே கண்டுபிடித்துக்கொள்ளும். ஏலகிரி மலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்குச் சொந்தமாக சொகுசு பங்களா இருக்கிறது. ஓய்வெடுப்பதற்காக பங்களாவுக்குச் செல்லும் அந்தத் தலைவரைப் பார்க்க, அமைச்சர் ஒருவரும் சென்றுவிடுகிறாராம். ஏலகிரி மலையில் புதிதாக ஸ்டார் ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்திருக்கும் அந்த அமைச்சர், அந்தத் தலைவருக்குப் பிடித்தமான உணவுகளை தன் வீட்டிலேயே சமைத்து, கொண்டு செல்கிறாராம். பங்களா தோட்டத்தில், மணிக்கணக்கில் அசைபோட்டபடி இருவரும் அரசியல் பேசுகிறார்களாம். இதைத் தாண்டி சில டீலிங்குகளும் பேசி முடிக்கப்படுகின்றனவாம்.”

‘‘யாரென்று புரிகிறது. ஆனால், இருதரப்பினரும் எலியும் பூனையுமாக இருப்பவர்கள் ஆயிற்றே?’’
‘‘அதெல்லாம் வெளி வேஷம்தான். அந்தத் தலைவரை ‘மாமா’ என்று அமைச்சர் அழைப்பதும், அமைச்சரை ‘மாப்ள’ என்று அந்தத் தலைவர் உரிமையுடன் அழைப்பதும் சகஜம் தான் என்கிறார்கள். தற்போது தேர்தல் நெருங்கிவரும் சூழலில் இருவரும் சீக்ரெட் பிளான் ஒன்றை வகுத்துள்ளார்கள். தலைவர் போட்டியிடும் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் செல்வாக்கு இல்லாத ‘டம்மி’ வேட்பாளரை அந்த அமைச்சர் நிறுத்தவுள்ளார். பதிலுக்கு, அமைச்சர் போட்டியிடும் தொகுதியில் டம்மி வேட்பாளரைத் தலைவர் நிறுத்தப்போகிறாராம். இந்த டீல் இருதரப்பின் கட்சித் தலைமைக்குத் தெரிந்தாலும், நடவடிக்கை எடுக்க முடியாத உயரத்தில் இருவரும் இருப்பதால், கட்சி நிர்வாகிகள்தான் புலம்பித் தீர்க்கிறார்கள்’’ என்ற கழுகாருக்கு சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். காபியைப் பருகிக்கொண்டே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.
‘‘திருச்சியை கன்ட்ரோல் செய்வது வைத்திலிங்கமா… வேலுமணியா என்கிற போட்டி கடுமையாகியிருக்கிறது. வேலுமணியைவைத்து மாவட்டச் செயலாளர் ப.குமார் சமீபத்தில் கூட்டம் நடத்தினார். இதற்குப் போட்டியாக வைத்திலிங்கத்தின் ஆதரவாளரான வெல்லமண்டி நடராஜன், டிசம்பர் 19-ம் தேதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டிக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்திவிட்டார். இதற்காக திருச்சி முழுவதும் வைத்திலிங்கத்தின் படங்களுடன் பெரிய பெரிய பேனர்கள், விழா தோரணங்கள் என்று பல லட்சம் செலவழித்திருக்கிறார் வெல்லமண்டி. ‘தன் மகன் ஜவஹருக்கு சீட் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் வைத்தியை வெல்லமண்டி தூக்கிப் பிடிக்கிறார்’ என்று அ.தி.மு.க வட்டாரங்கள் கூறும் நிலையில், இந்த வரவேற்பை வைத்திலிங்கமும் மகிழ்ச்சியுடன் ஏற்றிருக்கிறார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஏரியா பகுதிச் செயலாளர் சரவணனை வேலுமணி தன் கட்டுப் பாட்டில் எடுத்ததுபோல, திருச்சியையும் தன் ஆளுகைக்குள் எடுத்துவிடக் கூடாது என்று தவிப்பில் இருக்கிறாராம் வைத்தி.”
“இவர்கள் அக்கப்போர் ஓயாதுபோல… முதல்வர் எடப்பாடி பழனிசாமிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் குட்டு வாங்கினாராம்?”
‘‘வேறு எதற்கு… பலூன்களை உடைத்ததற்குத்தான். டிசம்பர் 19-ம் தேதி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ‘அம்மா மினி கிளினிக்’கைத் தொடங்கிவைக்கச் சென்ற ராஜேந்திர பாலாஜி, நுழைவு வாயிலில் தொங்கவிடப்பட்டிருந்த பலூன்களைக் கத்திரிக்கோலால் குத்தி உடைத்தி ருக்கிறார். அமைச்சரின் இந்த பலூன் விளையாட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. ஏற்கெனவே ஏக குடைச்சலிலிருந்த எடப்பாடியை இது வெறுப்பேற்ற… ராஜேந்திர பாலாஜிக்கு போனைப் போட்டு, ‘என்னய்யா நினைச்சிட்டிருக்க நீ… எலெக்‌ஷன் நேரத்துல சின்னப்பிள்ளைத்தனமா நடந்துக்கிட்டு இருக்க’ என்று டோஸ் விட்டாராம். மறுநாள் அருப்புக்கோட்டை, நரிக்குடி ஒன்றியங்களில் நடந்த மினி கிளினிக் திறப்புவிழாவில் பலூன்களே கட்டப்படவில்லை. ரிப்பனை மட்டும் வெட்டி, திறந்துவைத்த ராஜேந்திர பாலாஜி, மீடியாக்களைச் சந்திக்காமலேயே முகத்தை ‘உர்ர்’ என வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாராம்.”

‘‘அந்தக் குழந்தை மனதுதான் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்…’’
‘‘ம்க்கும்… ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழகம் வருகிறார். பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் குடிசைப்பகுதியில் அவர்களுடன் சேர்ந்து பொங்கலைக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறாராம். தமிழகத்தில் பட்டியல் சமூக வாக்குகளைத் திரட்டுவதற்கான முயற்சிதான் இது என்கிறது பா.ஜ.க வட்டாரம். மோகன் பகவத்தைத் தொடர்ந்து, வாரத்துக்கு ஒரு மத்திய அமைச்சர் வீதம் தமிழகத்துக்கு விசிட் அடிக்கவைக்க டெல்லி அட்டவணை போட்டிருக்கிறதாம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் டெல்லி டு சென்னைக்கு பா.ஜ.க தலைவர்களின் படையெடுப்பு களைகட்டும் என்கிறது கமலாலயம்.’’

“சசிகலா தரப்பு தகவல் ஏதேனும் இருக்கிறதா?”
“சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, சசிகலா தமிழக அரசியலில் ஒரு கை பார்க்க நினைத்தாலும், அது அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார்கள் சட்டத்துறையைச் சேர்ந்த சிலர். எழும்பூரிலிருக்கும் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா அண்ட் கோவினர் மீது ஃபெரா வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதைவைத்து, தேர்தல் நேரத்தில் சசிகலா தங்களுக்குக் கட்டுப்படவில்லையென்றால் அவரை மீண்டும் சிறைக்குள் அனுப்பவும் மத்திய பா.ஜ.க அரசிடம் ஒரு திட்டம் இருக்கிறதாம்” என்று கிளம்பத் தயாரான கழுகார்,
‘‘முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ‘சவுண்ட்’ பார்ட்டி ஒருவர், விரைவில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொள்ளலாம் என்று தகவல்கள் கசிகின்றன. இதற்கான பேச்சுவார்த்தையை முடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்” என்றபடி ஜூட் விட்டார்.

%d bloggers like this: