மிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்!

அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், இந்த இதழுக்காகத் தயாராகிக்கொண்டிருந்த, ‘நெருங்குது தேர்தல்… வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்’ கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். ‘‘அதிகாரிகளின் வேஷத்தைக் கலைத்துவிட்டீர். நானும் சில அதிகாரவட்ட தகவல்களைச் சொல்கிறேன்… கேளும்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘சமீபத்தில், ‘மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியிலிருக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்’ என்று தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த வகையில், சென்னையில் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர்கள் மகேஸ்வரி, சுதாகர் என இடமாற்றம் செய்யப்பட வேண்டியவர்களின் பெரிய பட்டியல் தயாராகியிருக்கிறது. இவர்களுக்கு பதிலாக, தங்களுக்குத் தோதான அதிகாரிகளைத் தங்கள் இடங்களில் பணியமர்த்திக்கொள்ள அமைச்சர்கள் தரப்பு மும்முரமாகியிருக்கிறதாம்.’’

‘‘ஓ…’’

‘‘சுற்றுச்சூழல்துறை, மாசு கட்டுப்பாடு வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் இடங்களில், திடீர் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை கோடிக்கணக்கில் பணத்தைக் கைப்பற்றியது அல்லவா… அந்த விவகாரத்தில் ஒரு அப்டேட். கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தபோது, ‘எங்களுக்கு மேலேயுள்ள அதிகாரிகளுக்கு இந்தப் பணத்தைப் பங்கிட்டுக் கொடுத்தோம். குறிப்பாக, ‘துறையின் உச்ச அதிகாரியான ‘வெற்றி’ அதிகாரிக்கு மாதந்தோறும் இவ்வளவு தொகை சப்ளையாகியிருக்கிறது’ என்று பெரிய பட்டியலை வாசித்தார்களாம். பட்டியலில் குறிப்பிட்டிருந்த தொகையைப் பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஜெயந்த் முரளியே ஆடிப்போய்விட்டாராம்.’’

‘‘சரிதான்…’’

‘‘குறிப்பிட்ட வரம்புக்கு மேலுள்ள அதிகாரிகளைக் கைதுசெய்யும் அதிகாரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இல்லை. அதற்குத் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையரின் ஒப்புதல் வேண்டும். குறிப்பாக, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை விசாரணை நடத்தக்கூட இந்த ஆணையரின் ஒப்புதல் அவசியம். ஆணையர் பொறுப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வரை மோகன் பியாரே இருந்தார். அவர் ஓய்வுபெற்ற பிறகு, அந்தப் பொறுப்பு கூடுதலாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது உயரதிகாரிகள் லஞ்சப் புகாரில் சிக்கினால், அவர்களை விசாரிக்க சண்முகத்தின் அனுமதி அவசியம். இதனால், மாசு கட்டுப்பாடு வாரியத்தில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்தும், அந்த ‘வெற்றி’ அதிகாரியை விசாரிக்க முடியவில்லையாம். தலைமைச் செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட் வைத்தும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள். ‘இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு நடவடிக்கை எடுத்தாலும், கடைசியில் பெருந்தலைகளை சிலர் காப்பாற்றுகிறார்களே’ என்று புலம்புகிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம்.’’

‘‘ம்ம்… லஞ்ச ஒழிப்புத்துறையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ஃபைல் க்ளோஸ் ஆகிவிட்டதாமே?’’

‘‘2017-ம் ஆண்டில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடுகளில் சோதனை நடத்திய பிறகு, சில ஆவணங்களைத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வருமான வரித்துறை அனுப்பியிருக்கிறது. அதாவது, ‘சம்பந்தப்பட்ட நபர்கள் முறைகேடாக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்த்திருக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தவும்’ என்று குறிப்பிட்டு டெல்லியிலிருந்து அந்தக் கடிதம் வந்திருக்கிறது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய உயரதிகாரி ஒருவர், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ஃபைலை மட்டும் சத்தமில்லாமல் க்ளோஸ் செய்துவிட்டாராம். ராமமோகன ராவ் சம்பந்தப்பட்ட ஃபைல்கள் மட்டும் இப்போது கிடப்பில் கிடக்கின்றன. அந்த ஃபைலை இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் உயிரூட்ட நினைத்தால், கோட்டையிலிருக்கும் ‘முருகக்கடவுள்’ பெயர்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியிடமிருந்து போன் வந்து தடுத்துவிடுகிறதாம். இந்த விவரங்களையெல்லாம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் காதுக்கும் கொண்டுபோயிருக்கிறது தி.மு.க ஆதரவு ஐ.ஏ.எஸ் வட்டாரம்.’’

‘‘ஸ்டாலின் என்ன செய்யப்போகிறாராம்?’’

‘‘தக்க தருணத்துக்காகக் காத்திருக்கிறாராம். டிசம்பர் 23-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் சந்தித்தபோது, ‘தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்துக்குத் தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்’ என்றிருக்கிறார். இந்தத் தகவலை மத்திய அரசின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுசென்றிருக்கிறாராம். அதோடு, தி.மு.க கொடுத்த ஊழல் பட்டியல் குறித்து முழுமையாக ஆராய, தனி டீமிடம் பொறுப்பைக் கொடுத்திருக்கிறாராம். விரைவில், அமைச்சர் வேலுமணியின் உள்ளாட்சித்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை தாண்டவமாடப்போகிறதாம். அதற்குப் பிறகு சரவெடி பறக்கும் என்கிறார்கள்.’’

‘‘ஓஹோ… 2,500 ரூபாய் பொங்கல் பரிசை முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்பைப் பெற்றிருக்கிறதே..?’’

‘‘தேர்தலைக் குறிவைத்து அறிவித்திருக்கிறார் எடப்பாடி. இதுமட்டுமல்ல, கூட்டுறவு வங்கியிலிருக்கும் நகைக்கடன் தள்ளுபடி, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டங்களும் அவர்வசம் இருக்கின்றனவாம். இதனால்,

அ.தி.மு.க-வுக்குச் செல்வாக்கு கூடிவிடும் என்று கணக்கு போடும் தி.மு.க., கொரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்களிடம் நேரடியாகப் பணம் விநியோகம் செய்ததில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாக ஆதாரத்தைத் திரட்டுகிறதாம். 2,500 ரூபாயை நேரடியாக வழங்காமல், வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று விரைவிலேயே அறிவாலயத்திலிருந்து அறிக்கை வரவிருக்கிறது என்கிறார்கள். இதற்கு அரசு செவிசாய்க்காத பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் தி.மு.க தரப்பு தயாராகிறதாம்.’’

‘‘அப்படிச் செய்தால், ‘தி.மு.க-தான் பணம் கொடுப்பதைத் தடுத்துவிட்டது’ என்று அ.தி.மு.க தரப்பு பிரசாரம் செய்யுமே?’’

‘‘அது அவர்கள் பாடு’’ என்ற கழுகாருக்குச் சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். பருகிக்கொண்டே செய்திகளைத் தொடர்ந்தார்.

‘‘சமீபத்தில் செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். இதில் 100 கோடி ரூபாய்க்கு மேலாகக் கணக்கில் வராத பணம் குறித்த விவரங்கள் சிக்கினவாம். செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் நடந்த சோதனையில், கல்லூரியின் பதிவாளரிடம் வாக்குமூலம் வாங்கியிருக்கிறது வருமான வரித்துறை. அதில், தமிழக அரசின் மூத்த அமைச்சருக்கும், துறையின் அமைச்சருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் விவகாரங்கள் அடங்கியிருக்கின்றனவாம். முதல்வரின் செயலாளர்களில் ஒருவரின் பெயரும் இந்த வாக்குமூலத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். செட்டிநாடு குழுமத்தின் தலைவர் ஐயப்பனின் சொந்த ஊரில், அவர் சமூகத்துக்குச் சொந்தமான கோயில் விவகாரத்தில் பரிமாறப்பட்ட தொகை குறித்தும் வருமான வரித்துறையிடம் சில ஆவணங்கள் சிக்கியிருக்கின்றனவாம். வருமான வரித்துறையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.’’

‘‘ம்ம்… ரஜினி எப்படி இருக்கிறார்?’’

‘‘ஹைதராபாத் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடும் பனிப்பொழிவு இருப்பதால், ரஜினிக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது. இந்தநிலையில், ஷூட்டிங்கில் கலந்துகொண்ட எட்டுப் பேருக்கு கொரோனா என ரிசல்ட் வந்ததால், டாக்டர்கள் அட்வைஸ்படி உடனே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டாராம். அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்றாலும், சில நாள்களுக்குப் பிறகு சென்னைக்கு வரத் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள்.”

‘‘விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கட்சி தொடங்குகிறாராமே?’’

‘‘சமீபத்தில், சென்னை அமைச்சர் ஒருவரும், கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரும் சந்திரசேகரை ரகசியமாகச் சந்தித்தார்களாம். ‘புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டிலிருந்து நடிகர் விஜய்யை நாங்கள் மீட்டுத் தருகிறோம். நீங்கள் உடனே கட்சி ஆரம்பியுங்கள்’ என்றிருக்கிறார்கள். உற்சாகமான சந்திரசேகர், ‘அகில இந்திய அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் புதிய கட்சியைப் பதிவுசெய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறாராம். இதற்காக, டெல்லியிலுள்ள பிரபல வழக்கறிஞர் ஒருவரிடம் ஆவணங்களை அனுப்பியிருக்கிறார். இந்தக் கட்சியின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொதுச்செயலாளராக ஜெயசீலன் இருப்பார்களாம். கட்சி தொடங்குவதற்காக, 100 பேரிடம் அஃபிடவிட்டில் கையெழுத்து வாங்கியிருக்கிறது சந்திரசேகர் தரப்பு’’ என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீபதி குழும நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது அல்லவா… சோதனையில் 200 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், மேலும் 500 கோடிக்கான ஆவணங்களும் சிக்கியிருக்கின்றனவாம். அதை எப்படிக் கையாளுவது என்று டெல்லியிடம் ஒப்பீனியன் கேட்டிருக்கிறது வருமான வரித்துறை’’ என்றபடி சிறகை விரித்தார்.

%d bloggers like this: