காக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்!

‘‘அதிர்வைக் கிளப்பிவிட்டீரே!’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். நாம் புரியாமல் பார்க்கவும், கையோடுகொண்டுவந்திருந்த லட்டுகளை நமக்கு அளித்தவர், ‘‘30.12.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘நெருங்குது தேர்தல்… வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்!’ என்ற தலைப்பில் உமது நிருபர்குழு எழுதியிருந்த செய்தி, கோட்டையில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் வட்டாரத்தில் இதுதான் மிகப்பெரிய டாபிக்… பாராட்டுகள்’’ என்ற கழுகாரின்

வாழ்த்தைப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டோம். லட்டைப் பிட்டு, தானும் உண்ட கழுகார், ‘‘ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் என்னிடமும் சில தகவல்கள் இருக்கின்றன’’ என்றபடி செய்திகளுக்குள் தாவினார்.
‘‘ஆவினில் ‘கர்ம’ சிரத்தையுடன் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், அங்கு நடைபெற்ற ஏகப்பட்ட முறைகேடுகளுக்குத் துணைபோயிருக்கும் தகவல் லீக் ஆகியிருக்கிறது. இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி, அறிக்கையொன்றைத் தயார் செய்திருக்கிறது. அந்த அதிகாரியின் ஒத்துழைப்புடன்தான் அனைத்து முறைகேடுகளும் நடந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். இதையடுத்து, தற்போது வேறொரு துறையில் பணியாற்றும் அந்த அதிகாரியை விசாரிக்க முடிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. தனக்குச் சிக்கல் வரப்போவதை அறிந்த அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, கோட்டையிலிருக்கும் முதன்மை அதிகாரியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதற்கு, ‘என்னை மீறி எதுவும் நடக்காது’ என்று அருள் பாலித்துவிட்டாராம் அந்த முதன்மை அதிகாரி. தொடர்ந்து, அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிமீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டிருக்கிறதாம்.’’

‘‘சரிதான்… அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப்பிலும் பிரச்னை என்கிறார்களே..?’’

‘‘அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசு இலவச லேப்டாப்களை வழங்கிவருகிறது. இதற்கான 2,000 கோடி ரூபாய் டெண்டரை எடுத்திருக்கும் சீன நிறுவனம் ஒன்று, அனைத்து சிறப்பம்சங்களுடன்கூடிய லேப்டாப்பை தமிழக அரசு கோட் செய்த விலைக்கு வழங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், விநியோகம் செய்யப்பட்ட லேப்டாப்களில் அந்த சிறப்பம்சங்கள் ஏதும் இல்லையாம். டெண்டருக்கான கமிஷன் கைமாறிவிட்டதால், ஆளும் தரப்பும் சிறப்பம்சங்களைக் கண்டுகொள்ளாமல் முதற்கட்டமாக 1,550 கோடி ரூபாய் பணத்தை விடுவித்துவிட்டது. அதேசமயம், தகவல் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ‘குறிப்பிட்ட சிறப்பம்சங்களைச் சேர்க்காமல், சீன நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய மீதி 450 கோடி ரூபாயைத் தர முடியாது’ என்று சொல்லிவிட்டாராம். ஆளும் தரப்பு அழுத்தம் கொடுத்துப் பார்த்தும் அதிகாரி மசியவில்லை என்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.’’

‘‘ம்ம்…’’

‘‘தமிழகத்தில் சுமார் ஏழாயிரம் அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வசதிகளை ஏற்படுத்த, டிஜிட்டல் கேபிள் பதிக்கும் பணி தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் தரமற்ற கேபிள்களைப் பதித்ததால், பல இடங்களில் இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லையாம். இதனால், கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளே நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்காக அரசுத் தரப்பில் ஒதுக்கப்பட்ட 650 கோடி ரூபாயில் கோல்மால் நடந்திருக்கிறது என்று கொதிக்கிறார்கள் அரசு ஆசிரியர்கள்!”

‘‘வழக்கம்போல் கேபிளுடன் சேர்த்து ஊழலையும் புதைத்துவிட்டார்கள்போல. சரி, நடிகர் விஜய் – முதல்வர் பழனிசாமி சந்திப்பின் பின்னணி என்ன?’’

‘‘விஜய் தரப்பு ‘மாஸ்டர்’ திரைப்படத்தை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டது. ஆனால், திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், அந்தக் கெடுபிடியைத் தளர்த்த விஜய் தரப்பில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அமைச்சர் ஒருவரிடம் விஜய் தரப்பு அணுகியபோது, தனக்கும் மேலிடத்துக்கும் சேர்த்து பத்து விரலை அவர் காட்டினாராம். அதிர்ந்துபோன விஜய் தரப்பு பல்வேறு வழிகளில் எடப்பாடியை நெருங்க முயன்றிருக்கிறது. அங்கிருந்தும் பதில் எதுவும் வரவில்லை. ஒருவழியாக, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மூலமாக வேலுமணியை அணுகியிருக்கிறது விஜய் தரப்பு. வேலுமணிதான் முதல்வரிடம் பக்குவமாகப் பேசி, விஜய்க்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொடுத்தாராம். டிசம்பர் 27-ம் தேதி இரவு தன்னுடைய கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு வந்த விஜய்யை, காரில் அழைத்துக்கொண்டு முதல்வர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் வேலுமணி. அரை மணி நேரம் பேசியிருக்கிறார்கள்.’’

‘‘என்ன பேசினார்களாம்?’’

‘‘தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி என்கிற கட்டுப்பாட்டால் வசூல் பாதிக்கப்படும் என்று விஜய் தரப்பில் பேசப்பட்டிருக்கிறது. ‘மத்திய அரசின் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசு தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது’ என்று முதல்வர் தரப்பில் விளக்கமளித்தார்களாம். முடிவில், ‘ `மாஸ்டர்’ படம் வெளியாகும்போது முதல் மூன்று நாள்களுக்குக் கண்டுக்காதீங்க. வசூல் போயிடுச்சுன்னா மார்க்கெட் போயிடும்’ என்று முதல்வரிடம் கதறியதாம் விஜய் தரப்பு. இதற்கு முதல்வர் தரப்பிலும் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது என்கிறார்கள். இதற்கிடையே தலைமைச் செயலாளர் தரப்பிலிருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘தொய்வில்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் கொரோனா இரண்டாம் அலை வந்துவிடும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சூழலில் விஜய்க்காக விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றனவா, கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றனவா என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவிலிருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் விஜய், பட வசூலுக்காக தன் ரசிகர்களின் உயிரோடு விளையாடுவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.’’

‘‘ம்ம்… எடப்பாடியும் இதற்கு முன்னோட்டமாகத்தான் டாஸ்மாக் பார்களையும் 50 சதவிகித இருக்கைகளுடன் அனுமதி அளித்திருக்கிறாரோ… கொடுமை! சரி, அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?’’

‘‘கழகத்தின் அமைப்புச் செயலாளராக கம்பம் எம்.எல்.ஏ-வான ஜக்கையனை நியமித்திருப்பதற்குப் பின்னணியில் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். தேனி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சையதுகானுக்கு உடல்நிலை சரியில்லை. அவரால் தேர்தல் நேரத்தில் கட்சிப் பணிகளில் முன்புபோல சுறுசுறுப்பாக ஈடுபட முடியுமா என்பது சந்தேகம்தானாம். இதனால், தேர்தல் நேரத்தில் புதியவர் ஒருவரை நியமிக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி, தன் இளைய மகன் ஜெயபிரதீப்பை மாவட்டச் செயலாளர் ஆக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் பன்னீர். இதற்கு ஜக்கையன் இடையூறாக இருக்கக் கூடாது என்பதால்தான், அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவியைத் தந்து பன்னீர் ஓரங்கட்டிவிட்டார் என்கிறார்கள்.’’

‘‘அமைச்சர் சி.வி.சண்முகத்தின் எந்தக் குற்றச்சாட்டுக்கும் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி வாயே திறப்பதில்லையே..?’’

‘‘சி.வி.சண்முகம் சுறுசுறுப்பாக அரசியல் செய்துவரும் நிலையில்… எதுவுமே சொல்லாமல் அமைதிகாக்கிறார் பொன்முடி என்பதுதான் உடன்பிறப்புகளின் புலம்பலாக இருக்கிறது. தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தன் மருமகள் பெயரில் இரண்டு குவாரிகளுக்கு உரிமம் பெற்றதை சி.வி.சண்முகம் போட்டு உடைத்ததிலிருந்தே பொன்முடி வாயைத் திறப்பதில்லை. தன் தரப்பு மீதிருக்கும் செம்மண் குவாரி தொடர்பான விவகாரத்தை சண்முகம் கிளறிவிடுவாரோ என்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். ‘கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்துகொண்டு அமைச்சரை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் இருக்கிறாரே…’ என்று விழுப்புரம் தி.மு.க-வினர் கொந்தளிக்கிறார்கள்’’ என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘ஜனவரி 3-ம் தேதி மதுரையில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார் மு.க.அழகிரி. அதற்கு முன்பாக ரஜினியையும் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக ரஜினியிடம் நேரமும் கேட்கப்பட்டிருக்கிறது’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: