என்னையும் இப்படித்தான் தூண்டிவிட்டார்கள்! – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…

‘‘முதல்வர் அலுவலகத்தின்மீது அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாமே?’’ – கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘நீண்டநாள்களாகவே அந்த அதிருப்தி நிலவுகிறது. 50 சி-க்கு மேற்பட்ட எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், முதல்வர் அலுவலகம்தான் நேரடியாக டீல் செய்வதாகச் சொல்கிறார்கள்’’

என்றபடி கழுகாருக்கு நேந்திரம் பழ சிப்ஸ் அளித்தோம். சிப்ஸ்களைச் சுவைத்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘தூத்துக்குடியில் 49,000 கோடி ரூபாய் முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, குவைத் நாட்டைச் சேர்ந்த ‘அல் க்யுப்லா அல் வட்யா’ என்ற நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த ஜனவரி 20-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தமிழகப் பிரதிநிதியாக கோவையைச் சேர்ந்த சக்தி ஃபைனான்ஸ் நிறுவனம்தான் செயல்படுகிறதாம். இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்தது முதல்வர் அலுவலகம்தான் என்பதால், தொழில்துறை அமைச்சரான எம்.சி.சம்பத் அப்செட்டில் இருக்கிறாராம். இந்த ஒப்பந்தத்தின் பின்னால், பெரும் டீல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் இந்தத் திட்டத்தில் இப்போது புதிய சிக்கல் ஒன்றும் எழுந்திருக்கிறது.’’

‘‘என்ன சிக்கல்?’’

‘‘இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையைவிட, கூடுதலாக பத்து சதவிகிதம் சேர்த்து 110 சதவிகிதம் தொகையை மானியமாக அளிக்கத் தமிழக அரசு உறுதி கொடுத்திருக்கிறதாம். `அவ்வளவு பெரிய தொகையை நிதித்துறை யிலிருந்து எப்படிக் கொடுக்க முடியும்? யாரைக் கேட்டு மானியம் தர அரசு ஒப்புக்கொண்டது?’ என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி நோட் போட்டிருக்கிறார் நிதித்துறை அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம். திட்டத்துக்கான ஃபைலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கெனவே பழனிசாமி – பன்னீர் இடையே பனிப்போர் நடந்துவரும் நிலையில், இந்த விவகாரத்தை வைத்து புதிய பூகம்பம் கிளம்பும் என்கிறார்கள்.’’

‘‘சரிதான்… 2,500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் களைகட்டுகிறதே?’’

‘‘டோக்கன் வழங்குவதைவைத்து ஆளுங்கட்சி ஆதாயம் தேடப் பார்ப்பதாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறது தி.மு.க. ஆனால், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல், டோக்கன் வழங்குவதில் கர்ம சிரத்தையாக அ.தி.மு.க-வினர் ஈடுபட்டிருக்கிறார்கள். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், ‘நிதி நெருக்கடி நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கத்தான் வேண்டுமா?’ என்று ஆளும்தரப்பிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ‘இதுல பாதித்தொகை டாஸ்மாக் மூலமா நமக்குத் திரும்பி வந்துடும். அதனாலதானே வங்கியில பணத்தைப் போடாம கையில காசைக் கொடுக்குறோம். டாஸ்மாக் பாரைத் திறந்ததே அதுக்குதான்’ என்று வெடியை வீசியதாம் ஆளும்தரப்பு மேலிடம். கேள்வி கேட்ட அதிகாரிகள் வாயடைத்துப்போனார்களாம்.’’

‘‘பெரிய திட்டம்தான்… தமிழக அரசின்மீது புதிய ஊழல் புகார் ஒன்றை தி.மு.க எடுத்திருக்கிறதாமே?’’

‘‘ஆமாம்… கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மாஸ்க், பி.பி.இ கிட் உள்ளிட்டவை தமிழக சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை சார்பில் தனித்தனியாகக் கொள்முதல் செய்யப்பட்டன. இந்தக் கொள்முதல் விலையில் பெரும் வேறுபாடு இருக்கிறதாம். சுகாதாரத்துறை கொள்முதல் செய்த அதே மாஸ்க்கை, உள்ளாட்சித்துறை கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்திருக்கிறது என்கிறார்கள். அதேபோல, பி.பி.இ கிட்களையும் சுகாதாரத்துறை கொள்முதல் செய்த விலையைவிட உள்ளாட்சித்துறை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறதாம். இதன் பின்னால் பெரும் கமிஷன் கைமாறியிருப்பதாகக் கருதும் தி.மு.க., அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறதாம். விரைவில் விவகாரம் நீதிமன்றப் படியேறலாம்.’’

‘‘ம்ம்… லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஜெயந்த் முரளியை அடக்கிவாசிக்கச் சொல்லிவிட்டார்களாமே?”

‘‘உமக்கும் செய்தி வந்துவிட்டதா! கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளிக்கு தலைமைச் செயலகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ‘யாரைக் கேட்டு இத்தனை ரெய்டுகளை நடத்துகிறீர்கள்?’ என்று சீறியிருக்கிறார் அந்த அதிகாரி. அதற்கு, ‘யாரிடமும் அனுமதி வாங்கிவிட்டு ரெய்டு நடத்த வேண்டிய வழிகாட்டு முறை ஏதும் எனக்கில்லை’ என்று பதிலடி கொடுத்தாராம் ஜெயந்த் முரளி. இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாள்களில், கிரீன்வேஸ் சாலையிலுள்ள முக்கிய அமைச்சர் வீட்டிலிருந்து ஜெயந்த் முரளிக்கு அழைப்பு வந்திருக்கிறது. சந்திக்க வந்த முரளியிடம் அந்த அமைச்சர், ‘நீங்கள் நடவடிக்கை எடுப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. தேர்தல் வரையாவது கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியும் சளைக்காமல், ‘புகார்கள் வந்தால் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும்?’ என்று கேட்டிருக்கிறார் ஜெயந்த் முரளி. ‘எதிர்க்கட்சிகள் இதையே சாக்காகவைத்து பிரசாரம் செய்வார்கள். பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அமைச்சர். ஆளுந்தரப்புடன் மல்லுக்கட்ட ஆரம்பித் திருப்பதால், லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து விரைவில் ஜெயந்த் முரளி தூக்கியடிக்கப்படலாம் என்கிறது காக்கிகள் வட்டாரம்’’ என்ற கழுகாருக்கு, சூடாக வெங்காய பஜ்ஜிகளை நீட்டினோம். சட்னியுடன் பஜ்ஜியைச் சுவைத்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார்.

‘‘ஹைதராபாத்தில் ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சமயத்தில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ரஜினியுடன் பேசியிருக்கிறார். ‘என்னையும் இப்படித் தூண்டிவிட்டுத்தான் கட்சி ஆரம்பிக்கவைத்தார்கள். தேவையான உதவிகளைச் செய்து தருவதாகவும் சொன்னார்கள். கடைசியில் நான் நட்டாற்றில் விடப்பட்டதுதான் மிச்சம். முதலில் உங்கள் உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான், ரஜினியிடமிருந்து ‘அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தனது முடிவை ட்விட்டரில் வெளியிடும் முன்பாக, டெல்லிக்குச் சொல்லியிருக்கிறார் ரஜினி. செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மேலிடம், தமிழக அரசியல் களத்தில் வேறு எந்த மாதிரியான ஆட்டத்தைத் தொடங்குவது என்று புரியாமல் இருக்கிறதாம். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மூலமாக, ‘எடப்பாடியை இப்போதைக்கு ஆதரிக்க வேண்டாம்’ என்று தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவிக்கு முதற்கட்டமாக உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்துத்தான், ‘முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்’ என்று ரவியும் கூறியிருக்கிறார்.’’

‘‘ஓஹோ… தி.மு.க தரப்பிடம் பிரசாந்த் கிஷோர் காட்டமாகப் பேசினாராமே?’’

“ஐபேக் நிறுவனத்தால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று தி.மு.க நிர்வாகிகள் ஸ்டாலினிடம் புலம்பியிருக் கிறார்கள். இந்தத் தகவல் பிரசாந்த் கிஷோருக்குச் சென்றதும், ‘என்னை என்ன விளையாட்டுப் பையன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா? என் கம்பெனியைக் குறை சொல்றதை விட்டுட்டு உட்கட்சிப் பிரச்னைகளுக்கு முடிவு கட்டுங்க’ என்று தி.மு.க தரப்பிடம் காட்டமாகக் கூறினாராம்.’’

‘‘இதே சவுண்ட் சன் டி.வி விவகாரத்திலும் ஒலித்ததாமே?’’

‘‘அப்படித்தான் தகவல். எடப்பாடியின் ஆட்சி குறித்து, ‘வெற்றியின் பாதையில் தமிழகம்’ என்ற வீடியோ விளம்பரம் சன் டி.வி-யில் ஒளிபரப்பானது. இது தொடர்பாக தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் தருமபுரி தி.மு.கழக எம்.பி செந்தில்குமார் வெளிப்படுத்தினார். கடுப்பான மாறன் தரப்பு, ‘செந்தில்குமாரைக் கண்டித்துவையுங்கள்’ என்று ஸ்டாலினிடம் சொன்னார்களாம். அதற்கு அருகிலிருந்த வாரிசு, ‘செந்தில்குமார் சொன்னதில் என்ன தவறு?’ என்று கேட்க, மாறன் தரப்பு அப்செட். ‘இந்த விவகாரத்தை அமைதியாக விட்டுவிடுங்கள்’ என்று முற்றுப்புள்ளிவைத்திருக்கிறார் ஸ்டாலின்.’’

‘‘ஓ… தமிழக அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்., மத்திய அரசுப் பணிக்குச் செல்கிறாராமே?’’

‘‘ம்ம்… கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட பிரபாகர் பல அதிரடிகளை அரங்கேற்றினார். ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கவும், கோயில்களில் நடந்த முறைகேடுகளைக் களையவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், அரசுத் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லையாம். நிலைமை மாறாமல் தொடரவே மத்திய அரசுப் பணிக்குக் கிளம்பிவிட்டார் என்கிறார்கள். பெங்களூரிலுள்ள ஆதார் நிறுவனத்துக்குச் செல்கிறாராம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: