எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு!

அ.தி.மு.க., கூட்டணியில், கட்சிகள் இடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக, ரகசிய பேச்சு நடந்து வருகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,- – பா.ம.க.,- – தே.மு.தி.க.,- – த.மா.கா., கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள், தொகுதி பங்கீடு நிறைவடையாததால், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சை இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரஜினி கட்சி துவக்கினால், கூட்டணியில் மாற்றம் ஏற்படும் சூழல் இருந்தது. தற்போது, ரஜினி, கட்சி துவங்குவதில் இருந்து பின் வாங்கியதால், அ.தி.மு.க., கூட்டணியில், தற்போதுள்ள கட்சிகள் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்ப, அ.தி.மு.க., கூட்டணியில் இருப்பதை, பா.ஜ., தலைவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கும் முன், கூட்டணி கட்சிகளிடம், தொகுதி பங்கீட்டை முடிக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.எனவே, கூட்டணி கட்சிகளுடன், தொகுதி பங்கீடு குறித்து, ரகசிய பேச்சு நடந்து வருகிறது.மொத்தம் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், பா.ஜ.,விற்கு, 30; பா.ம.க.,விற்கு, 25; தே.மு.தி.க.,விற்கு, 15 தொகுதிகள் வழங்கவும், மற்ற தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடவும் முடிவு செய்துள்ளது.
மேலும், த.மா.கா., மற்றும் சிறிய கட்சிகளுக்கு, சில தொகுதிகளை ஒதுக்கி, அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட வைக்கவும், முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், பா.ஜ., தரப்பில், 40; பா.ம.க., தரப்பில், 35 தொகுதிகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. தே.மு.தி.க.,வும், பா.ம.க.,விற்கு இணையாக தொகுதிகளை தர வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது. இதற்கு, அ.தி.மு.க., தலைமை ஒப்புக் கொள்ளாததால், தொகுதி பங்கீடு பேச்சில் இழுபறி நீட்டிக்கிறது.
சுமூக தீர்வு கண்ட பின், முறைப்படி அந்தந்த கட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள, கூட்டணி தொகுதி பங்கீடு குழுக்கள், பெயரளவிற்கு அமர்ந்து பேசுவர். பின், கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு விபரம் அறிவிக்கப்படும்.சட்டசபை தேர்தலில், 150 தொகுதிகளுக்கு குறையாமல், அ.தி.மு.க., களம் இறங்கும் என, அ.தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஆனால், கூட்டணி கட்சி நிர்வாகிகளோ, ‘அரசியலில் எப்போது வேண்டுமானாலும் சூழ்நிலை மாறும். எனவே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், உறுதியான முடிவுகள் எடுக்கப்படும்’ என்கின்றனர்.

%d bloggers like this: