ரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா?

`அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த பிறகு, தங்களுக்கு ரஜினி ஆதரவளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் விருப்பம் தெரிவித்துவருகிறார்கள்.

தன் உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியலுக்கு வர மாட்டேன் என்று உறுதியாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட பிறகும், மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக ரஜினியைவைத்து பல்வேறு விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. `அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று ரஜினி

அறிவித்தாலும், அரசியலுக்கு அவர் வந்தே தீர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள். ரஜினிகாந்த் நேரடியாக அரசியலுக்கு வரவில்லையென்றாலும், தமிழக அரசியலில் அவர் தாக்கம் செலுத்துவார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறுகிறார். அரசியலுக்கு வரவில்லையென்று அறிவித்துவிட்டதால், தங்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளாக திரைத்துறையில் ஒன்றாகப் பயணிக்கும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கமல்ஹாசன் ஆரம்பித்த பிறகு, `ரஜினியும் கமலும் அரசியலில் கைகோப்பார்கள்’ என்று மக்கள் நீதி மய்யம் தரப்பில் அவ்வப்போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவந்தன. 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ரஜினியின் ஆதரவை கமல் கேட்டார். ஆனால், ரஜினியின் ஆதரவு கமலுக்குக் கிடைக்கவில்லை.

தற்போது அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினி அறிவித்த சூழலில், `நண்பர் என்கிற முறையில் ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன்’ என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார். “ரஜினி ஆதரவு என்று கொடுத்தால், அ.தி.மு.க-வுக்குத்தான் கொடுப்பார். ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் தங்களின் நேரடி எதிரி என்று பிரகடனம் செய்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்தவுடன், அதை வரவேற்றார். மேலும், நாம் தமிழர் கட்சியை ரஜினி ஆதரிக்க வேண்டும் என்றும் சீமான் கூறினார். “ஒரு நேர்மையான அரசியலுக்காக பத்தாண்டுகளாகக் களத்தில் நிற்கிறோம். எங்கள் கொள்கைகள், போராட்டங்கள், கருத்துகளை ரஜினி பார்க்கட்டும். அவருக்குப் பிடித்திருந்தால் எங்களுக்கு வாழ்த்து சொல்லட்டும்” என்று சீமான் கூறியிருக்கிறார்.

ரஜினியை ஆதரித்தவர்கள், ரஜினியை எதிர்த்தவர்கள் எனப் பலரும் ரஜினியின் ஆதரவுக்காகக் காத்திருக்கிறார்கள். அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டிய அழுத்தத்துக்கு ஆளாகியிருந்த நடிகர் ரஜினி, தற்போது கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய அழுத்தத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்காவது ஆதரவு குரல் கொடுப்பாரா அல்லது மௌனத்தைக் கடைப்பிடிப்பாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எஸ்.மகேஸ்வரியிடம் பேசினோம். “எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கொடுப்பேன் என்று ரஜினி கூறினார். அப்படியென்றால், எம்.ஜி.ஆர் மீது அந்த அளவுக்கு அபிமானம் வைத்திருக்கும் ஒருவர், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கத்துக்குத்தான் அவர் ஆதரவு அளிக்க வேண்டும். அதுதான் இயல்பானதாக இருக்கும். அவர் சொன்ன ஒரு வார்த்தைக்கு அவர் மதிப்பளிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர் அ.தி.மு.க-வுக்குத்தான் ஆதரவு அளிப்பார்.

கமல்ஹாசனும் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசுகிறார். `எம்.ஜி.ஆரின் நீட்சி’ என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறார். அது வெறும் தேர்தலுக்காக என்பது அனைவருக்கும் தெரியும். எந்தச் சூழலிலும், எந்த நிலையிலும், எந்தக் காலகட்டத்திலும், எம்.ஜி.ஆர்தான் என் முன்னோடி என்றோ, என் வழிகாட்டி என்றோ, என் தலைவர் என்றோ கமல் சொன்னதே கிடையாது. கமலைப் பொறுத்தவரையில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்ததோ, நினைவு நாளன்று அவரது சமாதிக்கு சென்றதோகூட கிடையாது.

எந்தக் கூட்டத்திலும் எம்.ஜி.ஆர் புகழ் பற்றிப் பேசியதே கிடையாது. `எம்.ஜி.ஆரின் நீட்சி’ என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட அவர் சொல்லவில்லை. கட்சியைத் தொடங்கியபோதுகூட எம்.ஜி.ஆரைப் பற்றி கமல் பேசவில்லை. ஆனால், கட்சியைத் தொடங்காமலேயே எம்.ஜி.ஆர் பற்றி ரஜினி பேசினார். எனவே, எம்.ஜி.ஆரின் இயக்கமான அ.தி.மு.க-வுக்குத்தான் ரஜினி ஆதரவு கொடுப்பார். அதற்காக, ரஜினியின் ஆதரவை அதிகாரபூர்வமாக அ.தி.மு.க கோருமா என்பதையெல்லாம் கட்சித் தலைமைதான் முடிவுசெய்யும்” என்றார் ஏ.எஸ்.மகேஸ்வரி.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம். “நடிகர் ரஜினிகாந்த்தின் ஆதரவு என்பதைப் பொறுத்தவரையில், அமைச்சர் ஜெயக்குமாரைப்போலவோ, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்போலவோ நாங்கள் பார்க்கவில்லை. ரஜினி சொன்னால் தங்களுக்கு வாக்குகள் விழும் அன்று அவர்கள் பார்க்கிறார்கள். சிஸ்டம் சரியில்லை, அதை மாற்ற வேண்டும் என்று ரஜினி சொன்னார். அதாவது, அமைப்பை மாற்ற வேண்டும் என்று அவர் மேம்போக்காகச் சொல்கிறார்.

எங்களைப் பொறுத்தவரை அமைப்புமுறை மாற்றம், ஆட்சிமுறை மாற்றம், அரசியல் மாற்றம் வேண்டும் என்று மாற்றத்தை ஆழமாக முன்வைக்கிறோம். அமைப்பு மாற வேண்டும் என்ற எண்ணம் உண்மையானதாக இருந்தால், இந்த மண்ணின் பிள்ளைகளான தமிழ்த் தேசியப் பிள்ளைகள் முன்னெடுக்கிற அரசியலை வாழ்த்துங்கள் என்று சொல்கிறோம். அமைப்பை மாற்ற வேண்டும் என்கிற உணர்வு அவருக்கு உண்மையில் இருக்குமானால், எங்களை அவர் ஆதரிப்பார்.

இன்னொரு முக்கியமான ஓர் உண்மையையும் நாம் பார்க்க வேண்டும். ரஜினி குரல் கொடுத்தால் களச்சூழல் மாறும் என்பதெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. குருமூர்த்தி உட்பட பலரும் சொல்வது என்னவென்றால், 1996 சட்டமன்றத் தேர்தலில் ரஜினி குரல் கொடுத்ததால் அ.தி.மு.க தோற்றது என்பதுதான். 1991 தேர்தலைப் பொறுத்தவரை அசுர பலத்துடன் வென்று ஆட்சியமைத்த ஜெயலலிதா, அடுத்ததாக வந்த 1996 தேர்தலில் படுதோல்வியடைந்தார். பர்கூர் தொகுதியில் அவரே தோற்றுப்போனார்.

அதற்குக் காரணம், ஜெயலலிதாவின் ஐந்தாண்டுகால ஆட்சிமுறை படுமோசமாக இருந்தது. அனைத்துத் தரப்பினர் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டு, ஒரு பாசிச ஆட்சிபோல ஜெயலலிதாவின் அரசு செயல்பட்டது. அந்தக் கோபம் தேர்தலில் எதிரொலித்தது. எனவே, தி.மு.க – த.மா.கா கூட்டணி வெற்றிபெற்றது. அந்த நேரத்தில் ரஜினியும் குரல் கொடுத்தார். அவர் குரல் கொடுத்தார் என்பதற்காக மட்டுமே அப்போது அ.தி.மு.க தோற்கடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

அப்படிப் பார்த்தால், 1998-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க – த.மா.கா கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தும், அந்த கூட்டணி ஏன் தோற்றது… 2019-ல் `எல்லோரும் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால், எதிர்க்கப்படுபவர்தான் பலசாலி’ என்று பா.ஜ.க-வை ரஜினி சொன்னார். ஆனால், பா.ஜ.க தோற்றுப்போய்விட்டது. ரஜினி குரல் கொடுத்த வரலாறு இவ்வளவுதான். ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், அவரது வாக்குவங்கி எவ்வளவு என்பது தெரிந்திருக்கும். ஆனால், அவர் வரவில்லை.

ஜெயக்குமாராக இருக்கட்டும், கமல்ஹாசனாக இருக்கட்டும்… அவர்கள் ரஜினியின் ஆதரவைக் கோருகிறார்கள் என்றால், அது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தளவில் நாங்கள் யாரை நம்பியும் இல்லை. நாங்கள் மக்களை மட்டுமே நம்பியிருக்கிறோம்” என்றார் இடும்பாவனம் கார்த்தி.

தனது உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் அரசியலுக்கு வருவதை ரஜினி விரும்பாத சூழலில், சில சக்திகளின் அழுத்தம் காரணமாகவே அவர் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, பா.ஜ.க-வின் அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது. தற்போது, அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்துவிட்டநிலையில், அவர் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கமல் உள்ளிட்டோர் வெளிப்படையாகப் பேசியிருக்கும் நிலையில், ரஜினியின் முடிவு குறித்து பா.ஜ.க மௌனம் காத்துவருகிறது. அந்த மௌனத்தின் பின்னால் என்ன கணக்கு இருக்குமோ?!

%d bloggers like this: