`ஃபிட்னஸூக்கும் மாரடைப்புக்கும் தொடர்பில்லை?!’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன?

தந்தைக்கு 50 வயதில் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் மகனுக்கு 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, தலைமுறை தலைமுறையாக இதய நோய் பிரச்னை இருப்பவர்கள் 40 வயது முதலே மருத்துவரைச் சந்தித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும்

சௌரவ் கங்குலிக்கு ஏற்பட்ட மாரடைப்பு பிரச்னை குறித்து தன் கருத்தைப் பதிவு செய்கிறார் இருதய மருத்துவரான திலீபன் செல்வராஜன்.

“சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரரும் பி.சி.சி.ஐயின் தலைவருமான சௌரவ் கங்குலி நெஞ்சு வலி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்து பார்த்ததில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் உடனே அவருக்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விளையாட்டு வீரர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக இருப்பவர், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இல்லாதவர், 48 வயதுதான் ஆகிறது. இருந்தாலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது ஏன் என்பதுதான் பலருக்கும் எழுந்த கேள்வி.

கங்குலி ஒரு விளையாட்டு வீரரென்றாலும் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதிலிருந்து அவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டாரா என்பது கேள்விக்குறி. மேலும் அவரின் குடும்பத்தில் மாரடைப்பு வரலாறு உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

உடற்பயிற்சி மற்றும் வயதையும் தாண்டி வேறு சில காரணிகள் மாரடைப்பு ஏற்படுவதற்கு உந்துதலாக இருக்கலாம். மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மரபியல் காரணம். குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதில் மாரடைப்பு வந்திருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இளம் வயது மாரடைப்புக்கான காரணங்கள்!

45 வயதுக்குள் மாரடைப்பு ஏற்படுவதைத்தான் மருத்துவர்களாகிய நாங்கள் குறிக்கிறோம். ஆனால் தற்போது 25 முதல் 30 வயதினரிடையே கூட மாரடைப்பு ஏற்படுவதைக் காண முடிகிறது. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் சராசரியான மாரடைப்பின் வயது 65 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத்தில் நெருங்கிய உறவினரான தாய், தந்தை யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்படும் விகிதம் இரண்டு மடங்கு ஆகிறது.

இது பெரும்பாலும் மரபியல் காரணங்கள்தான். சிலருக்கு ரத்த நாள ரணம் அதிகமாக இருக்கலாம். அதன் காரணமாக இதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு எளிதாகப் படிந்துவிடும். இதற்கான அனைத்து வகையான காரணிகளும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மரபியல் காரணங்கள் அல்லாமல் இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு உடல் பருமன், உயர் ரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரால், உடற்பயிற்சி செய்யாமை, மனஅழுத்தம், இதய ரத்தக் குழாய்களில் பிறவியிலேயே உள்ள மாறுபாடுகள், சர்க்கரை நோய், புகை, மதுப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்.” என்கிறார் மருத்துவர் திலீபன் செல்வராஜன்.

4 தலைமுறையை பாதிக்கலாம்!

குடும்ப பின்னணி இருந்தால் நான்கு தலைமுறையாகக் கூட மாரடைப்பு ஏற்படலாம் என்கிறார் மூத்த இதய மருத்துவரும் பேராசிரியருமான தணிகாசலம். இதுபற்றி அவர் கூறுகையில், “மாரடைப்புக்கும் குடும்ப வரலாறுக்கும் வலுவான தொடர்பு இருக்கிறது.

எனக்குத் தெரிந்து சுமார் 12 குடும்பங்களில் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என தலைமுறை தலைமுறையாக இதய நோய் பாதிப்பு ஏற்பட்டது. வாழ்வியல் மாற்ற நோய்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் பெற்றோருக்கு இருந்தால் குழந்தைகளுக்கு எப்படி இந்தப் பிரச்னைகள் வருகின்றனவோ அதே போன்று இதய நோயும் வருவதற்கான சாத்தியங்கள் மிகவும் அதிகம்.

குடும்ப மாரடைப்பு வரலாறு உள்ள கங்குலி போன்றவர்கள் குறைந்தது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையாவது டிரெட்மில் பரிசோதனையை செய்து பார்க்க வேண்டும். தந்தைக்கு 50 வயதில் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் மகனுக்கு 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, தலைமுறை தலைமுறையாக இதய நோய் பிரச்னை இருப்பவர்கள் 40 வயது முதலே மருத்துவரைச் சந்தித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.

 

இந்தியர்களுக்கு அதிகம்!

இந்நிலையில் கங்குலிக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவின் முக்கிய நபரான இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தேவி ஷெட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஃபிட்னெஸ்ஸுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்திருக்கிறார். அவர் பேசுகையில், “கங்குலிக்கு இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்ததால் சிறிய அசௌகர்யம் ஏற்பட்டிருக்கிறது.

சரியான நேரத்தில் மருத்துவமனையை அணுகியதால் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவருடைய இதயம் 20 வயதில் இருந்ததைப் போல வலிமையானதாகிவிட்டது.

ஒருவர் எத்தனை ஃபிட்டாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறையோ இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ளாவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது. பெரும்பாலான இந்தியர்கள் இதுபோன்ற நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர்.

கங்குலிக்கு ஏற்பட்ட பாதிப்பு உலகத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும் உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக இருந்தாலும், தகுந்த முன்னெச்சரிக்கை பரிசோதனைகளைச் செய்யாவிட்டால் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்” என்று எச்சரித்திருக்கிறார்.

 

தடுக்கும் வழிகள்!

மாரடைப்பு வருவதைத் தவிர்க்க தினமும் சுமார் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். புகை பிடிப்பதை முழுமையாகக் கைவிடவேண்டும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கொழுப்பு உணவுகளையும், அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவேண்டும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களில் யாருக்கேனும் மாரடைப்பு வந்திருந்தால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

%d bloggers like this: