அப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா?

த்திரப் பதிவு குறித்து பலராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம்.

சொத்து பத்திரம் பதிவுசெய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?

‘‘பத்திரம் பதிவு செய்ய அதற்குரிய ஆவணத்தைப் பொறுத்து தேவைகள் மாறுபடும். பொதுவாக, பத்திரம் பதிவு செய்வதற்கு அதற்கு முந்திய ஆவணம் அதாவது, தாய்ப் பத்திரம் தேவைப்படும். தாய் பத்திரம் வங்கியில் அடமானத்தில் இருந்தால் வங்கியின் கடிதம், தொலைந்து போய் இருந்தால் காவல்துறையின் சான்று, அந்தச் சொத்தின் உரிமையாளர் மறைந்து, அவரின் வாரிசுகள் இருந்தால் உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பட்டா நிலமாக இருந்தால், அந்தச் சொத்துக்கு வருவாய்த்துறை வழங்கிய பட்டா தேவைப்படும். அந்தச் சொத்தை எழுதிக் கொடுப்பவர்கள், சொத்தை வாங்குபவர்கள், சாட்சிக் கையெழுத் திடுபவர்கள் ஆகியோரின் அரசு வழங்கியுள்ள புகைப்பட அடையாள அட்டை (ஆதார் கார்டு) போன்றவை இருக்க வேண்டும். இவைதான் பத்திரம் பதிவு செய்வதற்கு அவசியம் தேவைப் படும் முக்கிய ஆவணங்களாகும்.’’

ஒன்றுக்கு மேற்பட்ட இருவர் பெயரில், அதற்கு மேற்பட்டோர் பெயர்களில் சொத்தைப் பதிவு செய்ய முடியுமா?

‘‘கணவன் மனைவி, அண்ணன் தம்பி, அக்காள் தங்கை – இப்படிப் பட்ட உறவுமுறைகளில் சாதாரண மாக இருவர் பெயரில் சொத்து பதிவு நடக்கிறது. இது தவிர, நண்பர்கள், தொழில்முறைக் கூட்டாளிகள் என எத்தனை பேர் பெயரிலும் ஒரு சொத்தைப் பதிவு செய்ய முடியும்.’’
பத்திரப் பதிவுக்கு என்னென்ன கட்டணங்கள் செலுத்த வேண்டும்?

‘‘பத்திரம் பதிவு செய்யும் ஆவணங்களைப் பொறுத்து இந்தக் கட்டணங்கள் மாறுபடும். உதாரணமாக, கிரய ஆவணம் என்று வைத்துக் கொண்டால், அதற்குரிய முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டும். அதற்குப் பின்னர் பதிவுக் கட்டணம், பட்டா மாறுதலுக்கான படிவம் கொடுத்து, பட்டா மாறுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக அந்தக் கணினிப் பிரிவுக்குத் தனியே கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இப்போது கணினியில் பதிவு நடக்கும்போது அதை வீடியோவாக ஒளிக்காட்சியாகவும் எடுத்துத் தருகின்றனர். ஒரு தடயம் வேண்டும் என்பதற்காக ஒளிக்காட்சியைப் பதிவு செய்து தருகிறார்கள். அந்த சிடி (குறுந்தகடு) உங்களுக்குத் தேவைப்பட்டால் அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.’’

எந்த மதிப்புக்கு பத்திரம் பதிவு செய்ய வேண்டும்?

‘‘இதுவும் ஆவணங்களைப் பொறுத்தே மாறுபடும். உதாரணமாக, சொந்தக்காரர் களுக்கு, குடும்பத்துக்குள்ளாகவே எழுதிக் கொடுக்கும் விடுதலை மற்றும் செட்டில்மென்ட், தான பத்திரங்கள் போன்றவற்றுக்கு நாம் கொடுக்கும் மதிப்பே போதுமானது. சார்பதிவாளர் கேள்வி கேட்க மாட்டார். ‘இந்த மதிப்பு சரியில்லை’ என்றெல்லாம் சொல்ல மாட்டார்.
குடும்பத்துக்குள்ளாக எழுதப் படும் சொத்துக்கு நீங்கள் உங்களுக்குத் தோன்றுகிற மதிப்பைப் போட்டால் போதும். வெளி நிறுவனங்கள், வேறு ஏதாவது மூன்றாம் நபருக்குத் தருவதாக இருந்தால் அதாவது, குடும்பத்துக்கு வெளியே கொடுக்கப்படும் சொத்தாக இருந்தால், கிரய ஆவணமாக பாவிக்கப் படும். இந்த ஆவணங்களுக்கு உரிய மதிப்பு கட்டாயம் போட வேண்டும்.
இதில் ‘வழிகாட்டி மதிப்பு’ என்ற அரசு வெளியிட்டுள்ள மதிப்பு நடைமுறைப் படுத்தப்படும். இந்த வழிகாட்டி மதிப்பும் நீங்கள் குறிப்பிடும் மதிப்பும் எந்தவிதமான வேறுபாடும் இன்றி இருந்தால் ஆவணம் பதிவு செய்து வழங்கப்படும். வழிகாட்டி மதிப்பைவிட அதிகமாக நீங்கள் போட்டிருந்தால் கேள்வி கேட்க மாட்டார்கள்.
வழிகாட்டி மதிப்புக்குக் குறைவாக நீங்கள் கிரயம் தருதாகவோ, வாங்கு வதாகவோ இருந்தால், அப்போது உங்கள் ஆவணத்தை கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இதை 47A1 (மதிப்பு குறைவு) நடவடிக்கை என்பார்கள்.
துணை ஆட்சியர் நீங்கள் போட்டுள்ள மதிப்பு சரியாக உள்ளதா, வழிகாட்டி மதிப்புக்குக் குறைவாக உள்ளதா என்று ஆய்வு செய்து அவர் ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து கொடுப்பார். அந்த மதிப்புகான முத்திரை தீர்வை நீங்கள் ஏற்கெனவே செலுத்திய முத்திரைத் தீர்வைக்கு அதிகமாக இருந்தால், அதற்கு உண்டான வித்தியாசத்தைச் செலுத்த வேண்டும்.
அதேபோல, பதிவுக் கட்டண வித்தியாசத்தையும் செலுத்த வேண்டும். ஒருவேளை, துணை ஆட்சியர், நீங்கள் மதிப்பு குறைவாகப் போட்டிருந்தாலும், ‘அது சரியாக உள்ளது. சந்தை மதிப்பு தற்போது அவ்வளவுதான்’ என்று அவர் முடிவு செய்தால், நீங்கள் கூடுதலாக எந்த விதமான கட்டணமும் செலுத்தாமல் ஆவணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.’’

எந்த மதிப்புக்கு மேற்படும் சொத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்?

‘‘பதிவு சட்டத்தைப் பொறுத்த வரை, 100 ரூபாய்க்கு அதிகமான மதிப்பில் உள்ள அசையாத சொத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 100 ரூபாய் என்பது 1908 – ல் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு. இப்போது சொத்தின் மதிப்பு பல மடங்குகள் அதிகரித்து விட்டபோதிலும் இந்த மதிப்பு இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. நூறு ரூபாய்க்கு மேல் அசையாச் சொத்தை ஒருவர் வாங்கினால், அது கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்ட நிலைதான் இப்போதும் நிலவுகிறது.’’
பெண்கள், மூத்த குடிமக்கள் பெயரில் சொத்து வாங்கினால் ஏதாவது சலுகை உண்டா?

‘‘நமது மாநிலத்தில் இது போன்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் சலுகை உண்டு. ஆனால், நமது மாநிலத்தில் அதுபோன்ற சலுகைகள் எதுவும் இல்லை.’’
பாகப்பிரிவினை சொத்தைத் தனியாகப் பதிவு செய்ய என்ன கட்டணம் செலுத்த வேண்டும்?

‘‘பாகப்பிரிவினை ஆவணத்தைப் பொறுத்தவரை, இரண்டு வகைகளாகப் பிரித்து வைத்துள்ளனர். ஒன்று, குடும்பத்தில் நிகழும் பாகப் பிரிவினை; இன்னொன்று வேறு உறவினர் அல்லாத இருவர் சேர்ந்து ஒரு சொத்தை வாங்கியிருப்பார்கள். அது போன்ற சொத்துகளைப் பாகப் பிரிவினை செய்துகொள்வது. குடும்பத்துக்குள் என்றால், எத்தனை பகுதிகளாக அந்தச் சொத்து பிரிக்கப்படுகிறது,
அந்தந்த ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, பதிவுக் கட்டணம் ஒரு சதவிகிதமும் முத்திரைத் தீர்வை ஒரு சதவிகி தமும் செலுத்த வேண்டும். இதில் பதிவுக் கட்டணத்துக்கும் முத்திரைத் தீர்வைக்கும் உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளனர்.
ஒரு பாகத்தின் முத்திரைக் கட்டணம் எவ்வளவு வந்தாலும், ரூ.25,000 என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பதிவுக் கட்டணம் எவ்வளவு வந்தாலும் அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுதான் குடும்ப பாகப்பிரிவினையில் உள்ள சலுகை.
குடும்ப உறவாக இல்லாத இரண்டு நண்பர்கள் அல்லது வேறு யாராவது கூட்டாகச் சேர்ந்து சொத்தை வாங்கி இருப்பார்கள். அப்படிப்பட்ட பாகப் பிரிவினை செய்யப்படும்போது அதில் பெரிய பாகத்தை விட்டுவிட்டு, மீதி உள்ள பாகத்துக்கு 4% முத்திரைத் தீர்வையும் 1% பதிவுக் கட்டணமும் வசூலிப்பார்கள். இதுதான் பாகப்பிரிவினைக்கான முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம்.’’
சந்தை விலையைவிட அரசு வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால், சந்தை மதிப்பில் சொத்தைப் பதிவு செய்ய முடியுமா?

‘‘முடியும். அதாவது, நீங்கள் வாங்குவது உண்மையான சந்தை மதிப்பாக இருந்து, அந்த மதிப்புக்குத்தான் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் சார்பதிவாளரிடம் சொல்லி, நீங்கள் வாங்கும் மதிப்பை ஆவணத்தில் குறிப்பிட்டு, அந்தத் தொகைக்குப் பதிவு செய்ய முடியும்.
இதற்கு முத்திரைச் சட்டத்தில் 47A1 நடவடிக்கை என்று சொல்வார்கள். அப்போது சார்பதிவாளர் உங்கள் சொத்தைப் பதிவு செய்து மாவட்ட துணை வருவாய் ஆட்சியருக்கு (டி.ஆர்.ஓ) அனுப்பி ஒப்புதல் பெறுவார்கள்.
‘இந்தச் சொத்துக்கு சரியான மதிப்பைக் குறித்துக் கொடுங்கள்’ என்று அவருக்கு இந்த ஆவணங்களை அனுப்பி வைப்பார்கள். அவர் ‘இந்த சொத்துக்கு சரியான சந்தை மதிப்பு இதுதான்’ என்று சார்பதிவாளருக்குத் தெரிவிப்பார்.
அது நீங்கள் போட்ட மதிப்பைவிட அதிகமாக இருந்தால், அதற்கு உண்டான குறை மதிப்பு முத்திரைத் தீர்வு மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தி ஆவணத்தில் அத்தாட்சி செய்து,நீங்கள் ஆவணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதிலும் உங்களுக்கு உடன்பாடு இல்லை; நீங்கள் போட்டி ருப்பதுதான் உண்மையான சந்தை மதிப்பு என நினைத்தீர்கள் எனில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அந்தச் சந்தை மதிப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அரசு வழிகாட்டி மதிப்பைவிடக் குறைவாக சந்தை மதிப்புப் போட்டிருந்தாலும் அந்த ஆவணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.’’
சொத்துப் பதிவின்போது சொத்து தொடர்பான என்னென்ன ஆவணங்களை சார்பதிவாளர் சரி பார்ப்பார்?

‘‘தாய்ப் பத்திரம், சொத்தை எழுதிக் கொடுப்பவர், எழுதிப் பெறுபவர் இவர்களின் புகைப்பட அடையாள அட்டை (அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை), சாட்சிகளின் அடையாள அட்டை ஆகியவற்றை சரிபார்ப்பார். வருவாய்த்துறையில் பட்டா வழங்கப்பட்டிருந்தால், பட்டாவை சரிபார்ப்பார். பாகப் பிரிவினை ஆவணம் பதிவு செய்யப் படும்போது, சொத்துக்குச் சொந்தக் காரர் மறைந்திருந்தால், அவர் மரணம் அடைந்ததுக்கான சான்றிதழ், அவருடைய வாரிசு வந்திருந்தால் வாரிசுச் சான்றிதழ், அதாவது மறைந்தவரின் வாரிசுகள்தானா என்பதற்கான சான்றிதழ் ஆகியவை இருக்க வேண்டும்.
ஒருவேளை, அசல் ஆவணம் கையில் இல்லாமல் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்று பெற்று வர வேண்டும். இவற்றையெல்லாம் சார்பதிவாளர் சரிபார்த்த பின்னரே பத்திரம் பதிவு செய்யப்படும்.’’

அப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா?

‘‘‘இப்போது முடியாது’ என்பதுதான் பதில். ஆனால், அந்த அப்ரூவல் இல்லாத மனைகள் ஏற்கெனவே 2016 அக்டோபர் 20-ம் தேதிக்குமுன் மனையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது, முன்பு விவசாய நிலமாக இருந்து ஏதோ ஓர் இடத்தில் அவற்றை பிளாட்டுகளாகப் பிரித்து, தனிப்பட்ட பிளாட்டுகள் பதிவாகி, எல்லைகள் போட்டு பிளாட்டுகளாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட மனைகளை இப்போது அப்ரூவல் இல்லாமலே பதிவுசெய்துகொள்ள முடியும்.
ஆனால், நீங்கள் வீடு கட்டும்போது கண்டிப்பாக அது ஒரு தடைக்கல்லாக இருக்கும். அப்போது நீங்கள் அப்ரூவல் வாங்குவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.’’

பிட்ஸ்

றக்குறைய 10 கோடி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விவரங்கள் திருடப்பட்டு டார்க் வெப் நிறுவனம் விற்பனைக்கு வந்திருக்கிறது. ஜஸ்பே என்கிற பெங்களூரு நிறுவனத்தில் இருந்து இந்த விவரங்கள் திருடப்பட்டு உள்ளதாம்!

பத்திரம்

நீங்கள் வாங்குவது உண்மையான சந்தை மதிப்பாக இருந்து, அந்த மதிப்புக்குத் தான் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் சார்பதிவாள ரிடம் சொல்லி, வாங்கும் மதிப்பை ஆவணத்தில் குறிப்பிட்டு, அந்தத் தொகைக்குப் பதிவு செய்ய முடியும்.

%d bloggers like this: