பா.ஜ.க-வை விமர்சிக்க வேண்டாம்! – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…

சத்தமில்லாமல் வந்து அமைதியாக அமர்ந்திருந்தார் கழுகார். சூடாக முந்திரி பக்கோடாவை நீட்டியபடி, “அ.தி.மு.க பொதுக்குழு அமைதியாக நடந்து முடிந்துவிட்டதே?” என்றோம். பக்கோடாவைக் கொறித்தபடி அர்த்தப் புன்னகை பூத்த கழுகார், “அதுதான், ‘புயலுக்கு முந்தைய அமைதி’ என்று கவர் ஸ்டோரியிலும் குறிப்பிட்டிருந்தீர்களே… கவனித்தேன். கூடுதலாக நானும் சில தகவல்களைச் சொல்கிறேன்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

“ஜனவரி 9-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவை அன்றைய தினம் காலை 9-10:30 ராகு காலத்துக்கு முன்பாகவே தொடங்க முடிவெடுத்திருந்தனர். இதற்காகத்தான், ‘காலை 8:50 மணிக்கெல்லாம் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மண்டபத்தில் இருக்க வேண்டும்’ என்று அழைப்பிதழிலும் குறிப்பிட்டிருந்தனர். காலை 9 மணிக்கெல்லாம் நிர்வாகிகளால் மண்டபம் நிறைந்திருந்தும், கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வரவில்லை. இரண்டு மணி நேரம் தாமதமாகவே வந்தனர். இதற்குப் பின்னால் பஞ்சாயத்து ஒன்றும் நடந்திருக்கிறதாம்.”

“பஞ்சாயத்து இல்லாமல் பொதுக்குழு என்றால்தானே ஆச்சர்யம்… சொல்லும், சொல்லும்!”

“பொதுக்குழுவில் நிறைவேற்ற 16 தீர்மானங்களை முன்பே தயார் செய்து பன்னீர் தரப்புக்கு அனுப்பிய எடப்பாடி தரப்பு, அதன் பிறகு பன்னீருக்கு ஒரு தகவலை அனுப்பியிருக்கிறது. ‘உங்கள் வசமுள்ள அ.தி.மு.க பொருளாளர் பதவியை தங்கமணிக்கும், எடப்பாடி வசமுள்ள தலைமை நிலையச் செயலாளர் பதவியை வேலுமணிக்கும் மாற்றிக் கொடுக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டு கொதித்தேபோனாராம் பன்னீர். ‘உங்களுக்கு வேண்டியவர்களுக்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். அதற்காக என்னிடமுள்ள பதவியைக் கேட்க வேண்டாம். பிறகு நடப்பதே வேறு’ என்று மிரட்டல் தோரணையில் கர்ஜித்தாராம். இந்தப் பஞ்சாயத்தால்தான் இருவரும் கூட்டத்துக்கு வர தாமதமாகியிருக்கிறது.”

“இவ்வளவு நடந்திருக்கிறதா… சரி, பா.ம.க நிறுவனர் ராமதாஸை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி சந்தித்திருக்கிறார்களே..?”

“இதையும் கவர் ஸ்டோரியில் எழுதியிருந்தார்களே உமது நிருபர்கள்… பின்னணித் தகவல்கள் சிலவற்றைச் சொல்கிறேன். இப்போதே பா.ம.க-வை கூட்டணிக்குள் தக்கவைத்து உறுதிப்படுத்தவில்லையென்றால், பா.ம.க-வும் பா.ஜ.க-வும் கைகோத்துக்கொண்டு சீட் பேரத்தில் எண்ணிக்கையை உயர்த்திக் கேட்பார்கள்; இதைத் தவிர்க்கவே முந்திக்கொண்டு பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி. இதற்காக ஜனவரி 9-ம் தேதி இரவு தனது வீட்டில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்திருக்கிறார். அப்போது, ‘அவர்களை எப்படியேனும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்று எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டதாம். இதையடுத்துதான் அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் ஜனவரி 11-ம் தேதி தைலாபுரம் சென்றிருக்கிறார்கள்.”

“பா.ம.க ரியாக்‌ஷன் என்னவோ?”

“அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பது அன்புமணிக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள். பெரிய மருத்துவரிடம், ‘நாம் அ.தி.மு.க கூட்டணிக்குச் சென்றால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது. தனியாகவே நின்று பலத்தைக் காட்டலாம். இல்லையென்றால், மீண்டும் தி.மு.க கூட்டணிக்குத் தூது விடலாம்’ என்று சொல்லிவருகிறாராம். ஆனால், தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க பெரிய மருத்துவர் விரும்பவில்லையாம். தைலாபுரம் குடும்பத்துக்குள் நடக்கும் மோதல் முடிவுக்கு வந்தால் மட்டுமே, கூட்டணி குறித்து பா.ம.க முடிவெடுக்கும் என்கிறது மாம்பழ வட்டாரம்.”

“காங்கிரஸைக் கழற்றிவிடச் சொல்கிறதாமே ஐபேக்…”

“ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் சொல்லிவருகிறார்களாம் அவர்கள். சமீபத்தில் தி.மு.க நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது,

‘தி.மு.க தனியாகவே 160 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும்’ என்று சில தரவுகளை மேற்கோள் காட்டிப் பேசினாராம். ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களை ஐபேக் நிறுவனம் அடையாளப்படுத்தியிருக்கிறதாம். இந்தக் கூட்டத்திலும், ‘காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கேட்டால் கழற்றிவிடலாம்’ என்றும் ஐபேக் ஐடியா கொடுத்திருக்கிறதாம்.”

“இதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா?”

“எப்படி ஏற்பார்கள்… ஜனவரி 10-ம் தேதி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அதில் பேசிய பலரும், ‘நாம்

35 தொகுதிகளுக்குக் குறைவாக வாங்கக் கூடாது’ என்று குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ‘காங்கிரஸ் கட்சிக்கு 20 முதல் 25 தொகுதிகள் வரை அளிக்கலாம்’ என்று அறிவாலயம் நினைக்கிறது. மேலும், காங்கிரஸைத் தனியாக விட்டுவிட்டால், மைனாரிட்டி வாக்குகள் சிதறிவிடும் என்கிற அச்சமும் அறிவாலயத்துக்கு இருக்கிறது. அதேபோல, ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும்’ என்பதையும் அறிவாலயம் தெளிவுப்படுத்திவிட்டதாம். இந்த சீட் ஒதுக்கீடு பஞ்சாயத்துகளை ஜனவரி மாதத்துக்குள்ளேயே முடிவுசெய்துவிட்டு, பிப்ரவரியிலிருந்து தீவிர பிரசாரத்தில் கவனம் செலுத்த நினைக்கிறாராம் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.”

“அவர் நினைப்பதெல்லாம் எங்கே நடக்கிறது… சரி, உதயநிதியின் விழுப்புரம் சுற்றுப்பயணம் சர்ச்சையாகியிருக்கிறதே?”

“உமக்கும் தகவல் வந்துவிட்டதா… விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள்கள் உதயநிதி சுற்றுப்பயணம் செய்தபோது, பொன்முடியும், அவரின் மகன் கௌதம சிகாமணியும் மட்டுமே ஆல் இன் ஆலாக உதயநிதியுடன் வலம் வந்திருக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளரான புகழேந்திக்கு இருக்கைகூட ஒதுக்காமல் ஓரமாக நிற்கவைத்துவிட்டார்களாம். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க மாநிலப் பொறுப்பாளர்கள் ஏ.ஜி.சம்பத், லெட்சுமணன், அன்னியூர் சிவா ஆகியோரை மேடைக்குக்கூட அழைக்கவில்லையாம். ‘விழுப்புரம் மாவட்டத்தில் தங்கள் குடும்பக் கொடி மட்டும்தான் பறக்க வேண்டுமென்று பொன்முடி நினைக்கிறார். இதைக் கட்சித் தலைமையும் மெளனமாக வேடிக்கை பார்க்கிறது’ என்று கொந்தளிக்கிறது விழுப்புரம் தி.மு.க.”

“சரிதான்…” என்றபடி, கழுகாருக்குச் சூடாக பனங்கற்கண்டு பாலை நீட்டினோம். “தி.மு.க தலைமையிலிருந்து அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்று சமீபத்தில் சென்றிருக்கிறது. ‘இனி பொது இடங்களிலோ, சமூக வலைதளங்களிலோ பா.ஜ.க-வைக் காட்டமாக விமர்சிக்க வேண்டாம். அ.தி.மு.க-வுக்கு எதிராக மட்டுமே நமது கவனம் இருக்கட்டும்’ என்றதாம் அந்த உத்தரவு. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், டெல்லியின் அனுசரணை தேவைப்படும் என்று நினைக்கிறதாம் தி.மு.க. அதுவே இந்த உத்தரவுக்குக் காரணம் என்று கிசுகிசுக்கிறார்கள் உடன்பிறப்புகள்” என்றபடி பாலைப் பருகிய கழுகார், அடுத்த செய்திக்குத் தாவினார்.

“ஜனவரி 10-ம் தேதி, ரஜினியை மீண்டும் அரசியலுக்கு வரச்சொல்லி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி மன்றத்தினர் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் சில நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தை நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டும் கூட்டம் கூடிவிட்டது. இதற்கு மறுநாளே, ‘என்னை வேதனைப்படுத்தாதீர்கள். நான் அரசியலுக்கு வரப்போவதில்லை’ என்று மீண்டும் தெளிவுபடுத்திவிட்டார் ரஜினி. இப்போது, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பட்டியல் தயாராகிறதாம். விரைவில் அவர்களை மன்றத்திலிருந்து ஓரங்கட்டவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால், ரஜினி மக்கள் மன்றம் இரண்டாகப் பிளவுபட்டாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள். தேர்தல் நேரம் என்பதால், இந்தப் பிளவை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள இப்போதே சில கட்சிகள் தயாராகின்றன” என்றபடி சிறகுகளைப் படபடத்த கழுகார்,

“தமிழக ஆளுநராக யார் வந்தாலும், ‘இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி’யின் தமிழகப் பிரிவு தலைவர் என்கிற கௌரவப் பதவியையும் சேர்த்தே கவனிப்பது மரபு. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த சொசைட்டியில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தவுடன், கணக்கு வழக்குகளை முந்தைய ஆளுநர்கள் ரோசய்யா, வித்யாசாகர் இருவரும் நிலுவையில் வைத்தனர். ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வந்த பிறகு, அந்தக் கணக்கு வழக்குகள் விஷயத்தில் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சொசைட்டி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். உடனே ஆளுநரின் துணைச் செயலாளர் சி.பி.ஐ-யிடம் புகார் கொடுத்தாராம். கடந்த டிசம்பர் மாதம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்த சி.பி.ஐ., சொசைட்டி நிர்வாகிகள் ஆறு பேர்மீது வழக்கு பதிவு செய்தது. எழும்பூரிலுள்ள சொசைட்டியின் அலுவலகத்திலும் ஜனவரி 7-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் ஆளுநர் நடந்துகொண்டது சரியா, தவறா என்கிற கோணத்தில் சொசைட்டி நிர்வாகிகளில் இரண்டு கோஷ்டியினர் தனித்தனியாக சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் கொடுக்கவுள்ளனராம். இதனால் டென்ஷனில் இருக்கிறது ராஜ்பவன்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: