நல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..!

கடன் வாங்கும்போது, அது நல்ல கடனா அல்லது மோசமான கடனா என்பதைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

நல்ல கடன்கள்…

மதிப்பை வளர்க்கக்கூடிய ஒரு பொருளுக்காக நீங்கள் கடன் வாங்கினால் அது நல்ல கடன். இதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

வீட்டுக் கடன்: வீடு வாங்குவதற்கு உங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவை. மேலும், கையிருப்பில் இருக்கும் பணத்தைக் கொண்டு வீட்டை வாங்க முடியாது. இதற்கு இயல்பான தேர்வு, வங்கி அல்லது நிதி நிறுவனம் மூலம் அதற்கான கடனைப் பெறுவதுதான். வங்கி கடனுக்கு உரிய வட்டியை வசூலிக்கும். வீட்டின் மதிப்பு ஒரு காலகட்டத்தில் வளர்ந்துவிடும். இது வீட்டுக்காகச் செலவிட்ட முன்பணம், கடன் தொகை, கடனுக்கான வட்டியைவிட அதிகமாக இருக்கக்கூடும். எனவே, வீடு வாங்குவதற்காகக் கடன் வாங்குவது ஒரு நல்ல தேர்வு.

வணிகக் கடன்: தொழில் தொடங்குவதற்குப் பணம் தேவை. முதலீட்டுக்கு மேல் லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் வணிகம் இயங்குகிறது. வங்கிக்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகையை வணிகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்து செலுத் தலாம். வணிகத்தின் மூலம் பணத்தின் மதிப்பு கூடுகிறது.
கல்விக் கடன்: கல்விக்காகப் பணம் செலவிடுவது செலவு அல்ல, அது ஒரு முதலீடு. உயர்படிப்புகளுக்கும் தொழில்முறைப் படிப்புகளுக்கும் கல்விக் கடன்கள் பெறப்படுகின்றன. இந்தக் கல்வி மூலம் கிட்டும் வேலையால் கிடைக்கும் வருமானம் லாபகர மானது. உதாரணமாக, பல்கலைக் கழகம் ஒன்றில் எம்.பி.ஏ படிக்க ரூ.63,000 கல்விக் கடன் பெற்று சர்வதேச வணிகத்தில் பட்டம் பெற்றவுடன் வங்கியில் வேலை கிடைத்தது, இதன் மூலம் நிரந்தரமான வருமானம் கிடைக்கக்கூடிய வகையில் வாய்ப்பு அமைந்தது எனில், லாபம்தானே. எனது கருத்துப்படி கல்விக் கடன், நல்ல கடனாகும்.

 

கடன்

மோசமான கடன்கள்…

மதிப்பு குறையும் ஒரு பொருளுக்கு கடன் வாங்கினால் அது மோசமான கடன். எடுத்துக்காட்டாக, வீட்டு உபகரணங்கள், மொபைல்போன்கள், கார்கள் போன்றவை.
வீட்டு உபகரணங்கள்: வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், தொலைக்காட்சிப் பெட்டி போன்றவை. உதாரணமாக, நீங்கள் ஒரு ரெப்ரிஜிரேட்டரை 10,000 ரூபாய்க்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். ஏதோ சில காரணத் துக்காக அதை விற்க விரும்பினால், உங்களால் 10,000 ரூபாய்க்குக் கூடுதலாகவோ, அதே 10,000 ரூபாய்க்கோ உங்களால் கண்டிப்பாக விற்க முடியாது. காரணம், தேய்மானம். இதனால் மதிப்பு குறைகிறது. எனவே, இந்த வகை பொருள்கள் வாங்கு வதற்காக கடன் வாங்குவது மோசமான கடன் என்பதுடன், தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றாகும்.
0% இ.எம்.ஐ: 0% இ.எம்.ஐ மூலம் கடன் வாங்கினால் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். இதுபோன்ற விளம்பரங்கள் எல்லாம் நம்மை அந்தப் பொருளை வாங்குவதற்கான உந்துசக்தியாகும். இதுபோன்ற திட்டங்கள், மக்கள் தங்களால் வாங்க முடியாத பொருள்களை எல்லாம் வாங்க வைக்கிறது. பல மாதங்கள் மாதத் தவணை (EMI) செலுத்துவதுடன், தங்களது சம்பளத்தில் பெரும்பகுதியை இழக்கிறார்கள். மேலும், 0% இ.எம்.ஐ என்கிற திட்டத்தை ரிசர்வ் வங்கி 2013-ம் ஆண்டிலேயே தடை செய்திருக் கிறது. பிறகு, எப்படி செயல்படுகிறது என்று கேட்கிறீர்களா?
வாடிக்கையாளர்களிடம் பிராசஸ் கட்டணம் அல்லது கொடுக்க வேண்டிய சலுகை/ தள்ளுபடியைத் தராமல் இருப்பதன் மூலம் கூடுதல் லாபம் பெறு கிறார்கள். ரொக்கமாகப் பணத்தைக் கொடுத்து பொருள் வாங்கி னால் நம்மால் பேரம் பேசி குறைந்த விலைக்கு பொருளை வாங்க முடியும். வங்கி மற்றும் நிதி நிறுவனத்தின் முக்கிய வணிகத்துக்கு கடன் கொடுத்து வட்டியை சம்பாதிப்பதாகும். நிதி நிறுவனங்களுக்கு ஆதாரமே வட்டிதான். ஒருபோதும் அவர் களால் தங்களது வருமானத்தைக் கைவிட முடியாது. வட்டியின் பெயர்தான் மாறுகிறதே தவிர, அதன் விளைவு ஒருபோதும் மாறுவதில்லை.
மொபைல் போன்கள்: வாடிக்கையாளர்களைக் கவர் வதற்காக நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மொபைல் போன்கள் புதிய மாடலில் வந்துகொண்டே இருக்கின்றன. நமது வாழ்க்கை முறையில் ஒன்றிப்போய்விட்ட சாதனங்களில் மொபைல் போன் ஒன்றாகிவிட்டது. புதிய மொபைல் போன் வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய்கூட செலவிடு வதற்காக மக்கள் தயாராக இருக்கின்றனர். பணம் இல்லா விட்டாலும் கடன் மூலம் மொபைல் போன்கள் வாங்கப் படுகின்றன.
இப்படி வாங்கும் போன்களை நாம் சரியாகப் பயன்படுத்துவது இல்லை. பின் எதற்காக அவ்வளவு செலவழித்து அவற்றை வாங்க வேண்டும்? மேலும், மொபைல் போனும் தேய்மானம் கொண்டவைதான். நாளடைவில் அவற்றின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. மொபைல் போன்கள் வாங்குவதற்காகக் கடன் வாங்குவது மோசமான கடன், தவிர்க்க வேண்டியதாகும்.
கார்கள்: கார் வாங்குவதற்கு கடன் வாங்க வேண்டாமா என்று நீங்கள் கேட்கலாம். கூடாது என்பதே இதற்கான பதில். இது அபத்தமானது எனப் பலர் கருதக் கூடும். இன்று பிரபலமான கடன் என்றால், கார் கடன்தான்.
ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பார்ப்போம். உதாரணமாக, நீங்கள் ரூ.5 லட்சத்துக்கு கார் கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். கடனுக் கான சராசரி வட்டி விகிதம் 9.25%. கடனைத் திருப்பி செலுத்தக்கூடிய அதிகபட்ச காலம் ஏழு ஆண்டுகள் என்றால், மாதத் தவணை 8,108 ஆக இருக்கும். இதன்மூலம் ஏழு ஆண்டுகளில் நீங்கள் செலுத்தக் கூடிய தொகை ரூ.6.8 லட்சம்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள்… இதில் ரூபாய் 1.8 லட்சத்தை வட்டியாகச் செலுத்து கிறோம். இது காரின் மதிப்பில் சுமார் 35%. ஆனால், ஏழு ஆண்டு கால முடிவில் உங்களது காரின் மதிப்பு 6.8 லட்சமாக இருக்கப் போவதில்லை. இப்போது சொல்லுங்கள், கார் கடன் வாங்குவது புத்திசாலித்தனமா?

கடன் வாங்காமல் கார் வாங்க முடியாதா?

சரி, கடன் வாங்காமல் கார் வாங்குவது எப்படி என்ற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
சரியாக கார் ஓட்ட தெரியாத என் நண்பர், புதியதாக கார் வாங்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, மாருதி 800 பழைய காரை 50,000 ரூபாய்க்கு வாங்கினார். ஓரளவுக்கு நன்கு கார் ஓட்ட தெரிந்தவுடன் புதிய கார் வாங்க வேண்டும் என நினைத்தார். அவரிடம் கைவசம் இருந்தது ரூ.2.5 லட்சம்தான். அதன் மூலம் புதிய காரை வாங்க முடியாது. எனவே, மேலும் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து அதற்கான பணத்தைச் சேமிக்கும் வரை தனது பழைய மாருதி காரையே ஓட்டிக்கொண்டிருந் தார். இரண்டு வருட கால முடிவில் அவரிடம் ரூ.5 லட்சம் சேமிப்பு இருந்தது. அதன்பிறகு. அவர் தனது ரூ.5 லட்சம் பட்ஜெட்டுக்குள் வருகிற மாதிரி காரைத் தேட ஆரம்பித்தார்.
விநாயகர் சதுர்த்தி சமயத்தில் எக்ஸ்சேஞ்ச் மேளா வந்தபோது அவரது பழைய மாருதி காரை எக்ஸ்சேஞ்சில் அளித்தார். அவருக்கு ரூ.65,000 கிடைத்த துடன், எக்ஸ்சேஞ்ச் போனசாக 40,000 ரூபாய் கிடைத்தது .
தன்னிடம் இருந்த பணம் ஐந்து லட்சம் மற்றும் தனது பழைய மாருதி 800, எக்ஸ்சேஞ்ச் செய்ததன் மூலம் கிடைத்த ரூ.65,000 ஆகியவற்றுடன் ஒரு புதிய கிராண்ட் ஐ10-ஐ ரூ.5,65,000-க்கு வாங்கினார். இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், அடுத்த மாதத்திலிருந்து அவர் எந்தக் கடன் தொகையையும் செலுத்த வேண்டிய தில்லை.
இந்தக் கதையைக் கேட்டபிறகும் நம்மால் காத்திருக்க முடியவில்லை. காரணம் நாம் இப்போது உடனடி மன நிறைவின் சகாப்தத்தில் இருக்கிறோம்.ஃபேஸ்புக் பதிவுகள், இன்ஸ்டாகிராம் கதைகளுக்கு உடனடியாகப் பதில் தர விரும்பும் காலத்தில் நாம் காத்திருப்பதை விரும்பவில்லை. ஏனென்றால், உடனடியான மனநிறைவு உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மகிழ்ச்சியைத் தருகிறது.
எனவே, நல்ல கடன் மற்றும் மோசமான கடன்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மதிப்பில் வளரும் முதலீட்டுக்கு நீங்கள் கடன் வாங்கினால், அது நல்ல கடன். வளர்ச்சி இல்லாத எந்த தேவைக்கும் பொருளுக்கும் கடன் வாங்கினால், அது மோசமான கடன் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இனி கடன் வாங்கலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவை எடுங்கள்.

%d bloggers like this: