சசிகலா விதித்த 7 நிபந்தனைகள்! – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி.

அ.தி.மு.க-வில் இப்போது மூணு சீட்டு விவகாரம் மிகப் பிரபலம்! அமைச்சர்கள் பலரும் கோயில் கோயிலாகச் சென்று சுவாமி முன்பாக மூன்று சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு எடுத்து வருகிறார்களாம். சனிப்பெயர்ச்சிக்கே ஜோதிடம், பரிகாரம் என்று ரணகளப்படுத்திவிடுபவர்கள், ‘சசிப்பெயர்ச்சி’க்கு சும்மா இருப்பார்களா? சசிகலா, எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் பெயர்களை எழுதிப் போட்டு யார் பக்கம் செல்வது என்று குறி கேட்டுவருகிறார்கள்! இன்னொரு பக்கம்…

சசிகலாவின் நிபந்தனைகள், தினகரனின் சீக்ரெட் விசிட், முதல்வர் பழனிசாமியின் டெல்லி பயணம் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் சதுரங்கத்தில் வேக வேகமாக நகர்த்தப்படுகின்றன காய்கள்.
சசிகலாவின் நிபந்தனைகள்!
ஜனவரி 27-ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா விடுதலையாவது உறுதியாகிவிட்டதால், அதன் தாக்கம் அ.தி.மு.க-வில் இப்போதே தகிக்கத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க அமைப்புச் செயலாளரான கோகுல இந்திரா, ‘‘ஜெயலலிதாவுக்குத் துணையாக தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா’’ என்று புகழாரம் சூட்டியதும், சமீபத்தில் ஜூனியர் விகடனுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், ‘‘அ.தி.மு.க – அ.ம.மு.க-வுக்கு இடையே நடப்பது பங்காளிச் சண்டை. இருவரும் இணையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன’’ என்றதும், சசிகலாவின் ரிலீஸுக்கு முன்பாக ஏற்பட்ட அதிர்வுகள்தான் என்கிறது அ.தி.மு.க முகாம்.

சசிகலாவுடன் பா.ஜ.க பேசி முடித்து விட்டதாகவும், அ.ம.மு.க – அ.தி.மு.க ஒன்றிணையும் என்றும் கடந்த சில நாள்களாக செய்திகள் றெக்கை கட்டும் சூழலில், ‘சசிகலா வட்டத்தில் என்ன நடக்கிறது?’ என்பதை அறிய மன்னார்குடி குடும்ப நண்பர்கள் சிலரிடம் பேசினோம்.

“அ.தி.மு.க – அ.ம.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பம். கடந்த 49 வருடங்களாகத் தமிழர்களுக்காக உழைத்த இயக்கம் உடையக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், அதற்காகத் தன் பிடியை விட்டுத்தரவும் அவர் தயாராக இல்லை. கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று சசிகலா தரப்பிடம் சிலர் பேசியபோது, அதற்கு ஏழு நிபந்தனைகளை அவர் விதித்திருக்கிறார். அந்த நிபந்தனைகளை வரிசையாகச் சொல்கிறோம்…

சசிகலா விதித்த 7 நிபந்தனைகள்! – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி…
பொதுச்செயலாளர் சசிகலா!
* அ.தி.மு.க-வில் முன்பு இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டும்.

* பழையபடி, ஒற்றைத் தலைமையாக பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவர வேண்டும்; அதுவும் கட்சித் தேர்தலை நடத்தி, தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும்.

* இப்போது அ.ம.மு.க-வில் இருப்பவர்களுக்கு, அவர்கள் ஏற்கெனவே அ.தி.மு.க-வில் என்ன கட்சிப் பதவியில் இருந்தார்களோ அதே பதவியை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

* வழிகாட்டுதல்குழு உள்ளிட்ட புதிய குழுக்களைக் கலைக்க வேண்டும்.

* முதல்வர் வேட்பாளரைக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுதான் கூடி முடிவு செய்யும். கூட்டணியையும் அப்படித்தான் முடிவு செய்ய வேண்டும்.

* அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-வுக்குச் சென்று பதவி இழந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.

* அ.ம.மு.க., அ.தி.மு.க என இரு தரப்பிலும் யாராக இருந்தாலும் சின்னம் உள்ளிட்ட கட்சி தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்க வேண்டும்.

இவைதான் சசிகலா சொன்ன ஏழு நிபந்தனைகள்… இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்” என்றார்கள் விளக்கமாக!

அதிர்ந்த பன்னீர்… பணிந்த எடப்பாடி
சசிகலாவின் இந்த ஏழு நிபந்தனைகளால் ஆடிப்போயிருப்பது பன்னீர்செல்வம்தான் என்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், ‘‘சசிகலா மீண்டும் கட்சிக்குள் வந்தால், எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு, தான் முதல்வர் வேட்பாளராகிவிடலாம் என்ற நினைப்பிலிருந்தார் பன்னீர். இதற்காக தினகரன் தரப்புக்கும் தூதுவிட்டிருந்தார். இந்த நம்பிக்கையில்தான், ‘அண்ணன் தம்பி பிரச்னையைப் பேசித் தீர்ப்போம்’ என்று மறைமுக அழைப்பும் விடுத்தார். இப்போது, பன்னீர் பெரிதும் நம்பிய ஒருங்கிணைப்பாளர் பதவியையே ஒழிக்கும்படி சசிகலா கட்டளையிட்டிருப்பது, பன்னீரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன்படி பார்த்தால் 2017 பிப்ரவரியில் சசிகலாவால் அளிக்கப்பட்ட பொருளாளர் பொறுப்பு திண்டுக்கல் சீனிவாசனுக்கும், அவைத்தலைவர் பொறுப்பு செங்கோட்டையனுக்கும் மீண்டும் வரும். பன்னீருக்கு எதுவும் மிஞ்சுமா என்று தெரியவில்லை’’ என்றார்.

ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, தனக்கெதிராக பன்னீர்செல்வம் யுத்தம் நடத்தியதை இன்றும் மறக்கவில்லையாம் சசிகலா. அவர் சிறை செல்வதற்கு முன்னதாக ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்த சத்தியத்தோடு பன்னீரின் தொடர்பும் முறிந்துபோனதாகக் கூறுகிறார்கள் சசிக்கு நெருக்கமானவர்கள். அதேசமயம், எடப்பாடியை சசிகலா விட்டுக்கொடுத்ததில்லை என்கிறார்கள். முன்னர் ஒருமுறை தன்னைச் சந்தித்த மன்னார்குடி நண்பர் ஒருவரிடம், ‘‘அக்காகிட்ட 33 வருஷம் அரசியல் பாடம் படிச்சவ நான். என்னையே இந்த இந்தப் பாடு படுத்துறாங்களே… பாவம், எடப்பாடியை என்னவெல்லாம் செஞ்சிருப்பாங்க. டெல்லிக்கு எடப்பாடி அடிபணியலைன்னா, அவரின் அரசியல் வாழ்க்கை முடிஞ்சிருக்கும்… கட்சியும் சின்னாபின்னமாகியிருக்கும். இதுல அவரைக் குத்தம் சொல்றதுல எந்த நியாயமும் இல்லை’’ என்றாராம் சசி. இதையடுத்துத்தான், தனக்கான நேரம் வரும் வரை காத்திருப்பது என்பதில் தீர்மானமாக இருக்கும் சசிகலா, முதலில் அதிகாரத்தைக் கைப்பற்ற காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டாராம்.

அரசியல் சூறாவளிக்குத் தயாராகும் பா.ஜ.க
‘‘சசிகலாவைக் கையிலெடுக்க வேண்டுமென்றால், அவரைச் சிறையில் தள்ளி, அ.தி.மு.க-வை உடைத்து, மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்வியை பா.ஜ.க சீனியர் தலைவர் ஒருவரிடம் கேட்டோம். ‘‘தி.மு.க-வின் வெற்றி விகிதாசாரத்தைக் குறைப்பதற்கு சசிகலா, பன்னீர், எடப்பாடி மூவருமே அவசியம். சமீபத்தில் மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில், ‘சசிகலா இருந்தால் மட்டுமே டெல்டாவிலும் தென்மாவட்டத்திலும் அ.தி.மு.க-வுக்கு பலம். அ.ம.மு.க பிரிந்து நிற்பதால், சுமார் 124 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை பெற்றிருக்கிறது’ என்று கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துவி ட்டால், அதன் பிறகு பா.ஜ.க இங்கு வெற்றிக் கணக்கைத் தொடங்குவது மிகக் கடினம். அதனால், முடிந்தவரை தி.மு.க மெஜாரிட்டி பெறுவதை டெல்லி தடுக்கப் பார்க்கிறது. மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா என்று எங்குமே ஒரு மாநிலக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற பா.ஜ.க விடவில்லை. தமிழ்நாட்டிலும் அதைச் செய்ய முற்படுகிறார்கள். இதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூறாவளியை ஏற்படுத்தி, தி.மு.க ஆட்சிக்கு வருவதைக்கூடத் தடுக்க முடியும். கோவா, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. சிறு கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடித்தது. அது தமிழகத்திலும் அரங்கேறலாம்” என்றார்.

சசிகலா விதித்த 7 நிபந்தனைகள்! – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி…
பதறும் தி.மு.க… திணறும் தினகரன்
டெல்லியின் அடுத்தடுத்த மூவ்களால் பதற்றமாகியிருப்பது அறிவாலயம்தான். ஜனவரி 21-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கும் தி.மு.க., பா.ஜ.க-வின் மூவ்கள் மற்றும் சசியின் விடுதலையையொட்டி மாறிவரும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப் போகிறதாம். அ.தி.மு.க – அ.ம.மு.க இணையும் பட்சத்தில், தென்மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பதற்றத்தில் இருக்கிறது அறிவாலயம். அதேநேரத்தில், தன் பிடி விலகுவதால் டி.டி.வி.தினகரனும் திணறிப் போயிருக்கிறாராம்.

சசிகலா விதித்த 7 நிபந்தனைகள்! – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி…
இது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க மூத்த நிர்வாகிகள் சிலர், ‘‘கட்சிக்குள் சசிகலாவின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் ஓரங்கட்டப்பட்டு, தினகரன் ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டது. இந்தக் கடுப்பில்தான் தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க-வுக்குச் சென்றார். தனக்கென்று ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கும் தினகரன், அ.தி.மு.க-வில் தனது கட்சி இணைவதை விரும்பவில்லை. மேம்போக்காக, சசிகலாவின் விடுதலைக்கு, தான் பாடுபடுவதைப்போல டெல்லியில் சில சந்திப்புகளை அவர் நடத்தினாலும், கட்சியை விட்டுத்தர அவர் தயாராக இல்லை. அதேசமயம், சசிகலாவைப் பற்றிய குருமூர்த்தியின் கடுமையான விமர்சனத்துக்கும் மயிலிறகால் வருடியதைப்போல பதில் கொடுத்திருக்கிறார் தினகரன். ஆனால், சசிகலா உத்தரவிடும்பட்சத்தில் அவரால் அதை மீற முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார் தினகரன்’’ என்றார்கள்.

கட்சிகள் இணையுமா, இணையாதா என்பதையெல்லாம் அடுத்தடுத்த நாள்களின் அரசியல் சூழலே முடிவு செய்யும். ஆனாலும், அரசியல் சதுரங்கத்தில் இப்போது சசிகலாவின் முறை. எதிராளிகளுக்கு ‘செக்’ வைக்கும் வாய்ப்பு இம்முறை அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவரது காய்நகர்த்தலைப் பொறுத்தே ஆட்டத்தின் போக்கு மாறும். இன்னும் ஏழு நாள்களில் அவரது அரசியல் ஆட்டம் ஆரம்பமாகுமா… அல்லது பதுங்கிப் பம்மிவிடுமா என்பது தெரிந்துவிடும்.

சசிகலா விதித்த 7 நிபந்தனைகள்! – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி…
கைகோக்கும் சேகர் ரெட்டி!
சசிகலா – அ.தி.மு.க இணைப்பு நடந்துவிடக் கூடாது என்பதில் சிலர் தீவிரமாக இருக்கிறார்கள் என்கிறார்கள் இரண்டு தரப்புக்கும் நெருக்கமானவர்கள். குறிப்பாக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் அ.தி.மு.க-வுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறாராம். தினகரனுக்கும் வேலுமணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால்தான், தினகரனை அ.தி.மு.க-விலிருந்து நீக்கும் முடிவுக்கு வந்தார் எடப்பாடி. அதேபோல, சட்டமன்றத்தில் தினகரன் எழுப்பிய கேள்விக்கு தங்கமணி பதில் அளித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ‘தங்கமணி அமைச்சராக இருக்கும்வரை சட்டமன்றத்தில் நான் அமர மாட்டேன்’ என்று தினகரன் விடாப்பிடியாக இருக்கிறாராம். சில லாபிகளை முன்வைத்து எடப்பாடியிடம் பேசிய சேகர் ரெட்டி தரப்பு, ‘அவர் கட்சிக்குள் வந்தால், அடுத்த சில மாதங்களிலேயே அவர் குடும்பத்தினர் கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்’ என்று எச்சரித்ததாம்.

சசிகலா விதித்த 7 நிபந்தனைகள்! – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி…
குருமூர்த்தி ஏற்படுத்தும் பிம்பம்!
சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் கொண்டு வராமல் தடுக்கும் வேலையை நீண்டகாலமாகச் செய்துவந்தார் குருமூர்த்தி. இணைப்பு பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை அடைந்த தகவல் குருமூர்த்திக்குத் தெரிந்த பிறகே துக்ளக் விழாவில், ‘‘சாக்கடை நீரைக்கொண்டுகூட தீயை அணைக்கலாம்’’ என்று மறைமுகமாக அ.தி.மு.க-வில் சசிகலாவை இணைக்கலாம் என்று குறிப்பிட்டார். அதாவது, இந்த இணைப்பு நடந்தால், அதுவும் தன்னால்தான் நடந்தது என்கிற பிம்பத்தை இப்போதே ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டாராம் குருமூர்த்தி. ஆனால், கொடுத்த எந்த வாக்குறுதியையும் குருமூர்த்தி முழுமையாக நிறைவேற்றாததால் கடுப்பில் இருக்கிறதாம் டெல்லி. இதற்கிடையே, சமீபத்தில் டெல்லி சென்ற தினகரன், சுப்பிரமணியன் சுவாமியைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருப்பது அரசியல் அனலைக் கூட்டியிருக்கிறது.

%d bloggers like this: