அந்தர்பல்டி அறிவாலயம்! – ஸ்டாலின் சரண்டர் பின்னணி…

தமிழகமே பெங்களூரை உற்று கவனித்துவருகிறது!” என்றபடி என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், ‘‘சசிகலா, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், மன்னார்குடி உறவுகள் பதறிப் போயிருக்கிறார்கள். என்னதான் நடக்கிறது?” என்று கேட்டோம்.
“சசிகலா அதிகாலை 4 மணிக்கு நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். பெங்களூருவில் கடும் பனி. அதனால், கடுமையான ஜலதோஷம் ஏற்பட்டு, மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதாம். இதையடுத்து, தனக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று சசிகலாவே சிறைத்துறையிடம்

கேட்டுக்கொண்டதால், ஜனவரி 20-ம் தேதி மாலை 5:45 மணிக்கு பெங்களூரு, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். தொடர்ந்து மறுநாள் காலை மேல்சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கு அவருக்கு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், நுரையீரலில் தீவிரத் தொற்று இருப்பது தெரியவந்தது. சசிகலாவுக்கு 66 வயதாகிவிட்டதாலும், சர்க்கரைநோய் இருப்பதாலும் பதற்றத்தில் இருக்கிறார்கள் உறவினர்கள். ஆனாலும், அன்றைய தினம் சசிகலாவைச் சந்திக்க அவர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையாம்.”

“ஏனாம்?”
“இதே கேள்வியைத்தான் சசிகலாவின் உறவினர்களும் ஆவேசமாகக் கேட்கிறார்கள். ‘ஜனவரி 20-ம் தேதியிலிருந்தே மருத்துவமனைகளின் வாசலில் பதற்றத்துடன் காத்துக்கிடக்கிறோம். எங்களை உள்ளேவிட மறுக்கிறார்கள். `தனியார் மருத்துவமனையில் அனுமதியுங்கள்’ என்கிறோம். அதற்கும் பதில் இல்லை. எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும், இது போன்ற அவசர மருத்துவச் சிகிச்சையின்போது நெருங்கிய உறவினர் ஒருவரையாவது உடனிருக்க அனுமதிப்பார்கள். இத்தனை நாள்கள் சிறைக்குள் பாதுகாப்பாக இருந்தவருக்கு இப்போது எப்படி திடீரென கொரோனா தொற்று வந்தது? இதையெல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு பலத்த சந்தேகங்கள் எழுகின்றன’ என்று கொந்தளிக்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான உறவினர்கள்.”
‘‘தற்போதைய அரசியல் சூழலில் அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது…”
“ஆமாம். உமது நிருபரை பெங்களூரு மருத்துவமனை வட்டாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கச் சொல்லும்… சரி, தி.மு.க – காங்கிரஸ் பஞ்சாயத்து இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறதே?’’

‘‘ஓயாதா… அது இப்போதுதான் உச்சம் தொட்டிருக்கிறது. புதுச்சேரியில் தி.மு.க கொடுக்கும் குடைச்சல்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமே அம்மாநில முதல்வர் நாராயணசாமி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். கொதித்துப்போன ராகுல், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு போன் போட்டு, ‘புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை விரும்புகிறீர்களா?’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டாராம். இதன் பிறகுதான் ஜெகத்ரட்சகன் மூலமாக, ‘புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும். கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன. இந்தியாவிலேயே கூட்டணி தர்மத்தை மதிக்கும் ஒரே கட்சி தி.மு.க-தான்’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது அறிவாலயம்.’’
‘‘ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘கமல்ஹாசன் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறாரே… கதர்கள் புதிய கூட்டணிக்குத் தயாராகிறார்களோ?’’

‘‘இதுவும் தி.மு.க-வுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ‘மூன்றாவது அணி அமைவதை காங்கிரஸ் விரும்பவில்லை. வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்துவிடக் கூடாது’ என்று மறைமுகமாக தி.மு.க-வுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தி.மு.க-வின் இந்தக் குடைச்சலுக்குக் காரணமே ஐபேக்தான் என்கிறார்கள். அவர்கள் தரப்பினர்தான், ‘புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுத்தால்தான், தமிழகத்தில் அந்தக் கட்சிக்கு சீட் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வின் மூத்த தலைவர்களே இதில் முரண்படுகிறார்களாம்…”
“ஓஹோ… என்ன சொல்கிறார்களாம்?”
“எல்லாம் சிறுபான்மை ஓட்டுக் கணக்குதான். ஸ்டாலினிடம் அவர்கள், ‘காங்கிரஸ் கட்சி நம்முடன் இருப்பதால்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் நமது கூட்டணிக்கு வாக்களித்தனர்’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். மேலும், ‘உங்கள் மருமகன் சபரீசன் அடிக்கடி டெல்லிக்குப் பயணம் செய்கிறார்… அங்கு சில சந்திப்புகளை நடத்துகிறார். இதை முன்வைத்து, பா.ஜ.க-வுடன் தி.மு.க மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் செய்திகள் வந்தன. ஆனால், காங்கிரஸ் நம்முடன் இருப்பதால்தான் இந்தச் செய்திகளை நாம் மறுக்க முடிகிறது. பிரசாந்த் கிஷோர் பேச்சைக் கேட்டுக்கொண்டு கதர்களைக் கழற்றிவிட்டால் சேதாரம் நமக்குத்தான்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.’’
‘‘சரிதான்…’’
‘‘இன்னும் இருக்கிறது கேளும்… அடுத்ததாக அவர்கள் சொன்னதுதான் ஸ்டாலினை ஒரேயடியாக கதிகலங்கவைத்திருக்கிறது. ‘சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., பா.ம.க என்று ஒரு புதிய அணி உருவானால், 20 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகளை அந்த அணி சுருட்டிவிடும். நாம் ஆட்சிக்கு வருவது கனவாகவே போய்விடும் என்று அந்த சீனியர்கள் எச்சரித்த பிறகே, ஜெகத்ரட்சகனை அழைத்துக் கடிந்துகொண்ட ஸ்டாலின், உடனடியாக விளக்க அறிக்கை விடச் சொன்னாராம். ‘இவர்களை நம்பி புதுச்சேரிக்கு வண்டியேறியது தப்பாகிப்போச்சே’ என்று புலம்பியிருக்கிறார் ஜெகத்.’’
‘‘முதல்வர் கனவிலிருக்கும் ஸ்டாலினை நிம்மதியாகத் தூங்கவிட மாட்டார்கள் போலிருக்கிறது!”
‘‘உண்மைதான். காங்கிரஸ் பஞ்சாயத்து மட்டுமல்ல… உட்கட்சி பிரச்னைகளுமே அவரை உண்டு இல்லை என்று ஆக்குகின்றனவாம்.
திருச்சியை அடுத்த சிறுகனூரில் பிப்ரவரி 21-ம் தேதி தி.மு.க மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்துவருகிறார். ஜனவரி 18-ம் தேதி மாநாடு நடக்கும் இடத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் வரவில்லையாம். பயிர்ச் சேதங்களைப் பார்வையிட மகேஷ் சென்றுவிட்டதாக விளக்கமளிக்கப்பட்டாலும், இதைப் பெரிய விவகாரமாக்கி, அறிவாலயம் வரை அனலைக் கக்கியிருக்கிறது நேரு தரப்பு. ஆனால், எதிர்க் கோஷ்டியினரோ, ‘கழகக் கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான திருச்சி சிவாவை முக்கிய நிகழ்ச்சிகள் எதற்கும் நேரு அழைப்பதில்லை. மகேஷ் ஆப்சென்ட் என்றவுடன் இவ்வளவு பரபரப்பு கிளப்புகிறார்களே… திருச்சி சிவாவைப் புறக்கணிக்கும் நேருவைப் பற்றி ஏன் யாரும் வாய் திறப்பதில்லை’ என்கிறார்கள். இவையெல்லாம் ஸ்டாலினுக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கின்றன” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை அளித்தோம். டீயைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரின் வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை செய்தார்கள். இதன் பின்னணியில் கமிஷன் அரசியல் விளையாடி யிருக்கிறதாம். பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. தி.மு.க-வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் விவகாரத்தை முடித்துக் கொடுக்கும்படி பெட்ரோல் பங்க் தரப்பில் அணுகியிருக்கிறார்கள். 15 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு, நகராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது தி.மு.க மக்கள் பிரதிநிதி தரப்பு. இதில் பேச்சுவார்த்தை இழுத்தடித்ததால், டேக் டைவர்ஷன் எடுத்து அமைச்சர் ஒருவரின் ‘மன்னர்’ உறவினரைத் தொடர்புகொண்ட பெட்ரோல் பங்க் தரப்பு, அனுமதியைப் பெற்றுக்கொண்டதாம். தி.மு.க பிரமுகருக்குக் கொடுப்பதாகப் பேசப்பட்ட தொகை, அமைச்சரின் உறவினருக்குக் கை மாறிவிட்டது. இதில் கடுப்பான தி.மு.க மக்கள் பிரதிநிதி, நகராட்சி அதிகாரியைப் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் போட்டுக் கொடுத்து, ரெய்டுக்கு வழிவகுத்தாராம்.’’

‘‘சரிதான்… மனிதநேய மக்கள் கட்சிக்கும், முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஏதோ முட்டல் மோதலாமே?’’
‘‘எல்லாம் ராமநாதபுரம் தொகுதிக்காக நடக்கும் பஞ்சாயத்துதான். தி.மு.க கூட்டணியிலுள்ள இருவருமே இந்தத் தொகுதிக்காக முட்டி மோதுகிறார்கள். தி.மு.க தலைமையிடம், ‘ராமநாதபுரம் எம்.பி தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கினீர்கள். எஸ்.டி கூரியர் உரிமையாளர் நவாஸ் கனியும் அங்கே வெற்றிபெற்றுவிட்டார். அதனால், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியையாவது எனக்கு ஒதுக்க வேண்டும்’ என்று ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா போர்க்கொடித் தூக்கியிருக்கிறார். அதேநேரத்தில், ம.ம.க மாநில நிர்வாகி சலிமுல்லா கானும், நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரியும் சீட்டுக்காக முட்டி மோதுவதால், முஸ்லிம் இயக்கங்கள் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: