அனைவரையும் அழகாக்கும் காஸ்மெடிக் சிகிச்சை..!

ஒருவர் எப்போது கண்ணாடியைப் பார்க்கத் தொடங்கினரோ அப்போதே அவர்களது தோற்றம் குறித்த கவலைகளும் தொடங்கியிருக்க வேண்டும். உடலின் நிறம், தோற்றம், உறுப்புகளின் வடிவம், அளவு என ‘அழகு’ குறித்து எத்தனையோ நம்பிக்கைகளும் கருத்துகளும் நம்மிடையே காலகாலமாகப் புழங்கிவருகின்றன. மனிதர்கள் தங்கள் உடல் தோற்றத்தில் உணரும் ‘அழகின்மை’, ‘குறைபாட்டை’ சரிசெய்வதற்கான முயற்சிதான் பிளாஸ்டிக் சர்ஜரி, காஸ்மெட்டிக் சர்ஜரி என்று

சொல்லப்படும் அறுவை சிகிச்சை. இந்த சிகிச்சைகள் மூலம் பலரது உடலமைப்பை அவர்களுக்குப் பிடித்ததுபோல மாற்றி அமைத்துக் கொடுக்கும் டாக்டர் கிருத்திகா ரவீந்தரன் (MS., M,ch.), இந்த சிகிச்சைகள் பற்றியும் இதிலுள்ள தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாகச் சொல்கிறார்.
“காஸ்மெட்டிக்கில் அதிகம் ஆர்வம் இருப்பதால் படிப்பை முடித்த பின், அந்தத் துறையில் வல்லுநர்களான சில லண்டன் மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ‘LIPOS Cosmetic Clinic’ என்ற பெயரில் சென்னையில் ஒரு கிளினிக் ஆரம்பித்தேன். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை அகற்றவும் அல்லது உடல் எடையை கூட்டுவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். நம் உடலில் உள்ள கொழுப்புகளிலேயே நிறைய ஸ்டெம் செல்கள் இருக்கிறது. அதையும் சிகிச்சைகளுக்காக பயன்படுத்துகிறோம்.
ஒருவர் உடல் எடையை கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ வருகிறார் என்றால் முதலில் எதற்காக? என்ற கேள்வியினை முன் வைக்கிறோம். அடுத்து எடை அதிகமாகதான் இருக்கிறார்களா என்பதை சரிபார்ப்பதோடு, குறிப்பிட்ட பாகத்தில் மட்டும் எடை அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என பார்ப்போம். அதிக எடையாக இருக்கையில்; எதனால், அவர்களின் வாழ்க்கை முறை, ஸ்ட்ரஸில் இருக்காங்களா, எந்தெந்த ஆக்டிவிட்டிஸ் கம்மியா பண்றாங்க… போன்றவைகளின் அடிப்படையில் உடல், ரத்த பரிசோதனைகள் செய்தபின் அதில் விட்டமின் குறைபாடு அல்லது வேறு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை எல்லாம் அடிப்படையாக வைத்து சிகிச்சை ஆரம்பிக்கிறோம்.
இதை உடல் எடை கூட்டுவது அல்லது குறைக்கும் சிகிச்சை என்று சொல்லாமல் ‘ஷேப்’ கொடுப்பது என்கிறோம். சிகிச்சைக்கு பிறகு அவர்களுக்கான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளையும் பின்பற்ற வேண்டும். ஆனால், சிலர் அதை முழுமையாக கடைப்பிடிப்பதில்லை. முகத்தில் டபுள் சின், ஆம் ஷேப் இல்லாதவர்கள், மார்பகம், வயிற்று பகுதி, பின் பகுதி, தொடை போன்ற பகுதிகள் வழக்கமாக பண்ணக் கூடியது” என்று கூறும் கிருத்திகா, இந்த சிகிச்சை மேற்கொள்ள வருபவர்கள் பற்றி கூறினார்.
“நிறைய பேர் சினிமா துறையிலும், ஊடகத்துறையிலும் உள்ளவர்கள் மட்டும்தான் இதுபோன்ற சிகிச்சை எல்லாம் எடுத்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை… இன்றைய தலைமுறையில் எல்லோருமே எடுக்கிறார்கள். அவர்கள் மனதில் இருக்கும் பாதுகாப்பின்மை, தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களால் வருகிறார்கள். இதையெல்லாம் பண்ணலாமா, பண்ணக் கூடாதா என முன்பு ஒரு பயம் இருந்தது. ஆனால், இன்றைய அறிவியல்  தொழில்நுட்ப வளர்ச்சி அந்த பயங்களை போக்கியுள்ளது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இந்த சிகிச்சைகள் எடுத்துக் கொள்கிறார்கள்” என்றவர் இந்த சிகிச்சைகளில் உள்ள பின் விளைவுகள் பற்றி பேசினார்.
“எல்லா புரொசிஜருக்கும் ஏதாவது ஒரு சைட் எபெக்ட் இருக்கும். அது வராமல் பார்த்துக்கொள்வதுத்தான் எங்களின் முக்கிய வேலை. சிகிச்சைக்காக வருபவர்களிடம் முதலிலேயே இந்த சிகிச்சை பற்றியும், அதில் உள்ள சைட் எபெக்ட் பற்றியும் விளக்கித்தான் ஆரம்பிக்கிறோம். பொதுவாக எல்லா மருத்துவர்
களுமே சொல்லிடுவாங்க. சிலர் பணம் குறைவாக இருக்கிறது என்று சரியான இடத்தை தேர்வு செய்யாத போது பின் விளைவுகளை சந்திக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் இந்த சிகிச்சைகளுக்கு ஆகும் செலவு அதிகமானதல்ல.
சிலர் இணையத்தளத்தில் வெளியாகும் வீடியோக்களைப் பார்த்து, தானாகவே கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஒருவரின் சருமம் பற்றியும், தங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று தெளிவு இருப்பவர்கள் இதை செய்யலாம். ஆனால், நான் வெள்ளையாகணும், கலர் கூட்டணும் என்று கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுகிறதா என்பதை கவனிப்பதோடு சைட் எபெக்ட் வந்துள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.
காரணம், ஒரு க்ரீமை தொடர்ச்சியாக போட்டு கொண்டிருக்கையில், அதை உடனடியாக நிறுத்தும்போது அதற்கு எதிர்வினை ஏற்படலாம். எனவே நம்முடைய சருமத்தைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. சிலர் இயற்கை சார்ந்த அழகு பொருட்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் இரண்டையும் சேர்த்து பயன்படுத்துகிறார்கள். அது தவறில்லை. ஆனால் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்திவிட்டு அதன் மேல் மற்றொரு பொருட்களை பயன்படுத்தக்கூடாது. முகத்தை நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்தலாம். நம் முகத்தில் நிறைய தசைகள் உள்ளது.
அவை சுருங்காமல் இருக்க சிறப்பு சிகிச்சை காஸ்மெட்டிக் துறையில் உள்ளது. இதன் மூலம் ஒருவரின் முகத்திற்கு ஏற்றாற் போல், அவரின் கன்னங்கள்
மற்றும் உதட்டினை சீர் செய்யலாம். மேலும் குழந்தை பெற்ற பின் பெண்களின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படும். அவர்களின் உடலமைப்பு எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கவும் சிகிச்சையுள்ளது. அதே போல், அறுவை சிகிச்சை, விபத்துகள் மூலமாக ஏற்பட்டிருக்கும் தழும்புகளை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்கிறோம். உடல், சருமம் சம்பந்தமான சிகிச்சைகளோடு முடி உதிர்வு மற்றும் அதற்கான சிகிச்சைகளும் மேற்கொள்கிறோம்” என்கிறார் மருத்துவர் கிருத்திகா.

%d bloggers like this: