திமுக கூட்டணியில் மதிமுக, விசிகவுக்கு 2 சீட் : கடும் அதிர்ச்சியில் வைகோ, திருமா.,!!!

திமுக கூட்டணியில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, வரும் சட்டப் பேரவை தேர்தலுக்காக ஆதரவு கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, SDPI, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்று கண்ணுக்குத் தெரிந்து 10 கட்சிகள் கூட்டணியில் தெரிகின்றன.

இவ்வளவு கட்சிகளையும் சுமுகமாக அரவணைத்துச் சென்றால் கூட்டணி பலம் ஒன்றையே மூலதனமாக வைத்து குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றியை எளிதில் அறுவடை செய்துவிடலாம் என்பது திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் கணக்கு. அதேநேரம் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் திமுக போட்டியிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

10 வருடங்களாக ஆட்சியில் இல்லாததால் இம்முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற பெரும் நெருக்கடியில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு சம்மதித்து விட்டார், என்கின்றனர். அதனால் மீதமுள்ள 34 தொகுதிகளைத்தான் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு போட்டு பரிமாற வேண்டும் என்கிற பெரும் தலைவலியும் திமுகவுக்கு உள்ளது.

ஏற்கனவே காங்கிரசுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானதில் ராகுல்காந்தி கடும் கோபத்தில் இருக்கிறார், என்கின்றனர். இந்த நிலையில் காங்கிரசுக்கு 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று மிக சமீபத்தில் இன்னொரு செய்தி வெளியாகி காங்கிரசை கதிகலங்க வைத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, திமுக கூட்டணியில் ஏற்கனவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கும் மதிமுகவும், விசிகவும் அரண்டு போகும் விதமாக இன்னொரு தகவல் இன்று காலை முதல் உலா வரத் தொடங்கி இருக்கிறது. அதாவது திமுக கூட்டணியில் மதிமுக, விசிக ஆகிய இரு கட்சிகளுக்கும் இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கப்பட மாட்டாது என்ற தகவல்தான், அது. இந்த இரு தொகுதிகளிலும் கூட இக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

இது தவிர, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா மூன்று சீட்டுகள் வழங்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மூன்று கட்சிகளும் தங்களுடைய சின்னத்தில் போட்டியிடவும் அனுமதியளிக்கப்பட்டு இருக்கிறது. கூட்டணியில் உள்ள இதர சிறு கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டு கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கும்.

இதையெல்லாம் கணக்குப்போட்டு பார்த்துத்தான் பிரசாந்த் கிஷோர் 200 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும், மதிமுக, விசிக மற்றும் உதிரிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறாராம். ஆனால் ஆரம்பம் முதலே திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டு போராடி வரும் மதிமுகவும், விசிகவும் இதற்கு தங்களுடைய அதிருப்தியை மிகக் கடுமையான முறையில் வெளிப்படுத்தி உள்ளனவாம்.

இதுதொடர்பாக ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் இக்கட்சியின் இரு தலைவர்களும் தங்களுடைய ஆதங்கத்தையும், மனக் கசப்பையும் தங்களுக்கு நெருக்கமான செய்தியாளர்களிடம் கொட்டி இருக்கின்றனர்.

இது பற்றி திருமாவளவன் அவர்களிடம் கூறும்போது, “தமிழ்நாட்டில் பட்டியல் இன சமூகத்தினர் சிதறுண்டு சிறு சிறு அணிகளாகத்தான் இதுவரை இருந்து வந்தனர். அவைகளையெல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு ஒருங்கிணைத்து இன்று விசிக பக்கம் கொண்டு வந்து இருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு வட மாவட்டங்களில் மட்டுமே இருந்த எங்கள் கட்சியின் செல்வாக்கு இன்று தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. பட்டியல் இன மக்களின் 65 சதவீத ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது. இன்னும் புரியும் படியாக ஓட்டு சதவீத கணக்கில் சொல்லப்போனால் குறைந்தபட்சம் 7 சதவீத ஆதரவு எங்களுக்கு இருக்கிறது.

அதனால்தான் விசிக மாநிலம் முழுவதும் பரந்து விரிந்த கட்சியாக இருக்கிறது என்று கூறுகிறேன். இதற்காக நாங்கள் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் நடத்திய முற்றுகை, சாலை மறியல், உண்ணாநிலை மற்றும் அறவழி போராட்டங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். மேலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு திமுகவுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறோம். அதற்கு பரிசாக இரண்டு தொகுதிகள் தருகிறோம் என்று கூறுவது வேதனையிலும் வேதனை.

இதைவிடக் கொடுமை அதற்கு அவர்கள் கூறும் இன்னொரு காரணம். கடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணியை உருவாக்காமல் இருந்திருந்தால் திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி இருக்கும். கலைஞரும் முதல்வர் ஆக இருந்து மறைந்து இருப்பார். அவருக்கு மெரினா கடற்கரையில் தனி நினைவிடம் எழுப்பி இருப்போம். கலைஞருடைய அந்த ஆசை நிறைவேறாமல் போனதற்கு நீங்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நாங்கள் 10 கேட்டோம். அவர்கள் இரண்டே அதிகம் என்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலின்போது போட்டியிட உங்களுக்கு 2 தொகுதிகள் கொடுத்தோம். அது 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சமம் என்று 2 சீட்டு கொடுப்பதற்கு சமாதானம் சொல்கின்றனர்” என்று மனம் விட்டு புலம்பித் தள்ளி இருக்கிறார், திருமாவளவன்.

அவரை ஸ்டாலின் குறி வைப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். அண்மைக்காலமாக தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று திருமாவளவனுக்கு முக்கியத்துவம் அளிக்கு வகையில் தொடர்ந்து பெரிய அளவில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் அரை பக்க அளவிற்கு திருமாவளவனின் பேட்டியை அந்த நாளிதழ் விரிவாக வெளியிட்டிருந்தது. இதை திமுக தலைவர் ஸ்டாலினும், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் ரசிக்கவில்லை என்கிறார்கள்.

“இவர்களுக்கு அதிக சீட் கொடுத்தால்தானே பரபரப்பாக பேசப்படுவார்கள். மற்ற சிறு சிறு கட்சிகளுக்கு ஒதுக்குவதுபோல் ஓரிரு தொகுதிகளை கொடுத்தால் போதும். அதிகம் பேசமாட்டார்கள்” என்று பிரசாந்த் கிஷோர் கூறி விட்டாராம்.

அதேநேரம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் வேறொரு ஒரு காரணத்தை சற்று காட்டமாகவே திமுக தரப்பில் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. “நீங்கள் மதிமுகவை 1994-ல் தொடங்கியதே எதிர் காலத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆகி விடக்கூடாது என தடுப்பதற்குத் தானே? கடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைவதற்கு நீங்களும் ஒரு காரணம். அந்த நேரத்தில் நீங்கள் எங்களுடன் இருந்திருந்தால் வெற்றி எளிதாகி இருக்கும்.
கலைஞரை முதல்வராகி விடாமல் தடுத்தது, ஸ்டாலினுக்கு கிடைக்க வேண்டிய முதல்வர் வாய்ப்பை தடுத்தது எல்லாமே உங்கள் கைங்கரியம் தான். இப்போது மதிமுக கிட்டத்தட்ட திமுக போலவே ஆகிவிட்டது. அதனால் உங்களுக்கும் விசிக போலவே 2 தொகுதிகள் ஒதுக்கப்படும். கொடுக்கிற இரண்டு சீட்டுகளை வாங்கிக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள்” என்று கட்டளையிட்டதுபோல் திமுக மேலிடத்தில் சொல்லிவிட்டார்களாம்.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சி களுக்கு தலா மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கு காரணம் அவை எஜமான விசுவாசத்துடன் நடந்துகொள்வதுதான் என்கிறார்கள். அதாவது இந்த கட்சிகளுக்கு கொடுக்கும் மரியாதை மதிமுகவுக்கும், விசிகவுக்கும் தரப்படுவதில்லை என்பது வெளிப்படை.

அதாவது “மதிமுக, விசிக கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் இல்லை என்றால் வெளியேறட்டும்” என்கிற முடிவோடு திமுக தலைவர் ஸ்டாலினும், பிரசாந்த் கிஷோரும் இருப்பதாக இதனை அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதனால் திமுக கூட்டணியில் ஆரம்பத்திலேயே போய் ஒட்டிக்கொண்ட மதிமுகவும், விசிகவும் தர்மசங்கடத்தில் நெளிகின்றன. விழி பிதுங்கி நிற்கின்றன.

“அழைக்காமல் செல்லாதே அடிமையை விட கேவலமாக மதிக்கப்படுவாய்” என்று நம் முன்னோர்கள் சொன்னது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ அரசியல்வாதிகளுக்கு 100 சதவீதம் பொருந்தும் போல் தோன்றுகிறது.

%d bloggers like this: