தி.மு.க-வுக்கு செக் வைக்கும் எடப்பாடியின் மூவ்! – பிப்ரவரியில் பிரமாண்ட அறிவிப்பா?

தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்கிற உத்வேகத்தில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் பிரசாரத்தின் நடுவில் பல அறிவிப்புகளையும் தொடர்ந்து வெளியிட உள்ளார். கடைசி நேரத்தில் எடப்பாடி அறிவிக்கப்போகும் அறிவிப்பு அ.தி.மு.க இமேஜ்க்கு பெரும் பலமாக அமையப்போகிறது என்கிறார்கள் அ.தி.மு.க வினர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்கிற உத்வேகத்தில் தீவிரமாக உள்ளது.

பத்து ஆண்டுகளாகப் பறிகொடுத்த ஆட்சியைக் கைப்பற்றிவிடவேண்டும் என எதிர்க்கட்சியான தி.மு.க-வும் களம் இறங்கியுள்ளது. இரண்டு திராவிட கட்சிகளுமே வெறும் கட்சி பலத்தை மட்டும் இந்த தேர்தலில் நம்பாமல் தேர்தல் வியூக நிபுணர்களையும் களத்தில் இறக்கியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
தி.மு.கவின் தேர்தல் வியூகத்தை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான டீம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை `ஒன்றிணைவோம் வா’, `ஸ்டாலின் வராரு விடியல் தர போறாரு’ போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகிறது. அதே போல் சுனில் தலைமையில் அ.தி.மு.க விற்கு செயல்படும் டீம், `வெற்றிநடை போடும் தமிழகம்’ என்கிற அடைமொழியோடு எடப்பாடியின் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த பிரசார யுக்திகளைத் தாண்டி மக்களிடம் தங்கள் செல்வாக்கை நிரூபணம் செய்ய இரண்டு கட்சிகளிலும் கடும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்தல் களத்தில் கூட்டணி பலம், கட்சிகளின் பலத்தைத் தாண்டி இரண்டு கட்சிகளினாலும் மக்களுக்குச் சொல்லப்படும் வாக்குறுதிகள் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அறிவித்த தேர்தல் அறிக்கை இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. அதன்பிறகு அதே யுக்தியை அ.தி.மு.கவும் பின்பற்ற ஆரம்பித்தது.

வரும் தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுமே பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்று ஸ்டாலின் சில வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். அந்த வாக்குறுதிகள் தி.மு.கவிற்கு ப்ளசாக மாறும் என்ற ஆளும் தரப்புக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரம் தமிழகச் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மக்களைக் கவரும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட எடப்பாடி தலைமையிலான அரசு திட்டமிட்டுவருகிறது. இதற்கான தயாரிப்புகளை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டீம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு முக்கிய வாக்குவங்கிகளைக் குறிவைத்து தனது அறிவிப்புகள் இருக்கவேண்டும் என்று எடப்பாடி திட்டமிட்டுள்ளார். அதன்படி மகளிர் வாக்குகளைக் குறிவைத்து அவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இரண்டாவதாகக் கிராமப்புற வாக்குகளைக் குறிவைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றையும் எடப்பாடி வெளியிட உள்ளதாக இப்போது தகவல் கசிந்துள்ளது.

ஸ்டாலின்
அதாவது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக்கடன்களை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் சொல்லியுள்ளார். இதைக் கையில் எடுக்க உள்ள எடப்பாடி. வரும் பிப்ரவரி மாதம் தமிழக கூட்டுறவு வங்கிகளில் உள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பைத் தனது தேர்தல் வெற்றிக்கான பிரமாஸ்திரமாகப் பயன்படுத்த நினைக்கிறார் எடப்பாடி. இதைத் தவிரத் தேர்தல் அறிக்கையிலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு தி.மு.க-வை திக்குமுக்காடச் செய்யவேண்டும் என்று எடப்பாடி தரப்பு திட்டத்தில் உள்ளது.

இது தி.மு.க தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள் அ.தி.மு.க தரப்பினர். விவசாயக் கடன்களை உடனடியாக ரத்து செய்வதற்குத் தமிழகத்தின் நிதி ஆதாரம் ஒத்துழைக்குமா? என்கிற கேள்வி அதிகாரிகள் மத்தியில் உள்ளது. ஆனால் எந்த விலைகொடுத்தேனும் இந்த அறிவிப்பை வரும் மாதத்திற்குள் செயல்படுத்திட முடிவெடுத்துள்ளாராம் எடப்பாடி.

%d bloggers like this: