பாமகவை சிதைக்க தீவிரம் காட்டும் திமுக : டாக்டர் ராமதாஸ் ‘ஷாக்’

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையேதான் மிகப் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் பக்கம் எத்தனை கட்சிகள் சேர்கின்றன என்பதைப் பொறுத்துத்தான் அவருடைய மூன்றாவது அணி வலுவாக இருக்குமா, இருக்காதா? என்பதைக் கூற இயலும். நான்காவது அணிகளாக நாம் தமிழர் கட்சி, அமமுக போன்றவை தென்பட்டாலும் கூட, இந்தக் கட்சிகளுடன் யார் கூட்டணி வைப்பார்கள் என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இதுவரை தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்கவில்லை.

வன்னியருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத உள் இட ஒதுக்கீடுவேண்டும் என்கிற நிபந்தனையை அக்கட்சி அதிமுகவிடம் முன்வைத்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அதிமுகவுடன் கூட்டணி சேர்வதில் விருப்பம் உள்ளது. ஆனால் அவருடைய மகனும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், அவர் திமுகவுடன் கூட்டணி அமைக்க அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து திரைமறைவு பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு துளிகூட விருப்பம் இல்லை என்று சொல்கிறார்கள். அதேநேரம் எப்படியும் பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கு இதுவரை எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.

பாமகவை வளைத்துவிட்டால் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகி விடும் என்பது ஸ்டாலினின் கணக்கு. அதற்கு அன்புமணியின் தந்தை டாக்டர் ராமதாஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதை ஸ்டாலினின் அண்மைக்கால பேச்சுகளின் மூலம் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

ஏற்கனவே பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த காடுவெட்டி குருவின் மகனை உதயநிதியின் மூலம் தனது அணிக்கு கொண்டு வந்துவிட்டார், ஸ்டாலின். பாமகவை இரண்டாக பிளக்கும் முயற்சியாகவே இதை டாக்டர் ராமதாஸ் பார்த்தார். தொடர்ந்து இதுபோன்ற குட்டையை குழப்பும் சித்து விளையாட்டுகளில் திமுக இறங்கும் என்பதும் அவருடைய கணிப்பாக இருந்தது.

அதை உண்மையாக்கும் வகையில் பாமக தொண்டர்களை திமுகவில் இணைக்கும் முயற்சியில் தற்போது ஸ்டாலின் தீவிரமாக இறங்கி விட்டார்.

“எங்களுக்கு பணிந்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் கட்சியை சிதற வைப்போம்” என்பதுபோல திமுகவின் இந்த நடவடிக்கை உள்ளதாக பார்க்கப்படுகிறது.

நேற்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் விழா நடந்தது.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி தாவினர்.
இதை காணொலி மூலம் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் குஷியாகி விட்டார். குறிப்பாக, பாமக தொண்டர்கள் அதிக அளவில் திமுகவில் இணைந்தது அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஸ்டாலின் பேசும்போது, “திமுகவை நீங்கள் விமர்சிக்க விமர்சிக்க உங்கள் கட்சியிலிருந்து திமுகவுக்கு வருகிறவர்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள்” என்று கேலி பேசுவதுபோல் டாக்டர் ராமதாசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

ஸ்டாலின் இப்படி கூறியதன் உட்பொருள் வட மாவட்டங்களில் பாமகவை நிர்மூலமாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம் எனத் தெரியவருகிறது.

இந்த நிலையில், ஸ்டாலின் வட மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார பயணத்தை முடிப்பதற்குள் பாமக, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களை ஆயிரக்கணக்கில் திமுகவில் இணைத்துவிடவேண்டும் என்கிற ‘அசைன்மென்ட்’ திமுக மாவட்ட, வட்ட செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி கட்சியில் சேர்கிறவர்களை உண்மையிலேயே அவர்கள் பாமக, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்தவர்கள்தானா? என்பதை அவர்களின் அடையாள அட்டையை வைத்து உறுதிப்படுத்தி பின்னரே சேர்க்க வேண்டும் என்றும் திமுக தலைமை கட்டளையிட்டும் இருக்கிறது.

குறிப்பாக பாமக, ரஜினி மக்கள் மன்றத்தினரைத் திமுகவில் இணைப்பதுதான் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்படி ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் குறைந்தபட்சம் பாமக, ரஜினி மக்கள் மன்றம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் என 4 ஆயிரம் பேரை திமுகவில் இணைக்கத் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

இந்த வேலையை கச்சித்தமாக செய்து முடிக்கும் மாவட்ட, வட்டச் செயலாளர்கள், உள்ளூர் நிர்வாகிகளுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கி சிறப்பு செய்யப்படும் என்றும் இவர்களிடம் வாக்குறுதி தரப்பட்டிருக்கிறதாம். இதற்காக மட்டும் திமுகவில் ரூபாய் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

இந்த கணக்கின்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும்
2019 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்ததைவிட சுமார்
4 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக திமுக பெறவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேர்தல் முடிந்த பின்னர் இந்த ஊக்கத்தொகை கிடைக்கும்.

அதாவது, தேர்தல் வெற்றி விழா நடத்தும்போது இந்த தொகையை ஸ்டாலின், அவருடைய கைகளாலேயே கொடுப்பாராம்.
குறிப்பாக வட மாவட்டங்களில் பாமகவில் இருந்து அதிக தொண்டர்களை இழுத்து திமுகவில் சேர்ப்பவர்களுக்கு இத்தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் திமுக தலைமை உறுதி அளித்துள்ளது என்கின்றனர்.

திமுக கூட்டணிக்கு வராத ஆத்திரத்தில்தான் பாமகவை இப்படி சின்னாபின்னமாக்கி சிதைக்கும் ஒரு முடிவோடு ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு கட்சியின் மேலிடம் பரிசுகளையும், ஊக்கத்தொகைகளையும் வழங்கி கௌரவப்படுத்தும்.

ஆனால், அதற்கு மாறாக ஆள் பிடிப்பதற்காக மட்டும் திமுக பெருமளவில் ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் இந்த தில்லாங்கடி வேலையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதைக்கேட்டு ராமதாஸ் ‘அப்செட்’ ஆகிப் போனார், என்கிறார்கள். வடமாவட்டங்களில் பாமகவை குறிவைத்து நடத்தப்படும் இந்த ஆள் பிடிக்கும் வேலை பற்றி மகன் அன்புமணியிடம் மனம் நொந்து குமுறி இருக்கிறார், டாக்டர் ராமதாஸ்.

இதனால் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். என்றபோதிலும், டாக்டர் ராமதாஸ் 31-ம் தேதி கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்கும்போது இதற்கு தெளிவான விடை கிடைத்துவிடும்

%d bloggers like this: