“முதல்வர் அருகில் நிற்க வைக்கிறோம்!” – தூள் கிளப்பும் வசூல் வேட்டை…

அரக்கோணத்துக்கு அர்ச்சனை பலமாமே?’’ – கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடாக மிளகாய் பஜ்ஜிகளைத் தட்டில் நிரப்பிவிட்டு, ‘‘அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகனைத்தானே குறிப்பிடுகிறீர்கள்…’’ என்றோம். பஜ்ஜியைச் சுவைத்த கழுகார், ‘‘அவரைத்தான் சொல்கிறேன். புதுச்சேரி காங்கிரஸ் – தி.மு.க மோதல் விவகாரத்தில், தன்னையே ஜெகத்ரட்சகன் சுற்றலில் விட்டுவிட்டதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் சீறிவிட்டாராம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தி.மு.க-வினர் கொடிபிடிப்பதைப் பார்த்துவிட்டு, விவகாரத்தைச் சுமுகமாக முடிக்கும்படி ஜெகத்திடம் கூறியிருந்தார் ஸ்டாலின். ஆனால், ‘தி.மு.க ஆட்சியமைக்கும் சூழல் புதுச்சேரியில் நிலவுகிறது. அங்கு நம் கை ஓங்கினால், தமிழகத்தில் காங்கிரஸின் டிமாண்ட் குறைந்துவிடும்’ என்றெல்லாம் ஏற்றிவிட்டு, ஸ்டாலினின் ஒப்புதலுடன் புதுச்சேரிக்கு விஜயமானார் ஜெகத். அங்கு நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில்,

‘30 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறும். அப்படி வெற்றி பெறாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்றெல்லாம் ஜெகத் பேசியது அறிவாலயத்தையே அலறச் செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜெகத்தை வைத்து விளக்கம் விட வேண்டிய நெருக்கடிக்கு தி.மு.க தள்ளப்பட்டது.’’

‘‘கடந்த இதழிலேயே ‘அந்தர்பல்டி அறிவாலயம்’ என்று நீர் கூறியிருந்தீரே?’’

‘‘அந்த அந்தர்பல்டிக்குக் காரணமே ஜெகத் தானாம். இதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது என்பது அறிவாலயத்துக்கு லேட்டஸ்ட்டாகக் கிடைத்த தகவல். ஏற்கெனவே, அமலாக்கத்துறை வழக்குகள் காலைச் சுற்றுவதால், அவற்றிலிருந்து தப்பிக்க பா.ஜ.க பிரமுகர் ஒருவருடன் மத்திய சென்னையிலுள்ள ஒரு ஹோட்டலில் ஜெகத் தரப்பு மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் கசிந்தன. அந்தத் தொடர்பை, புதுச்சேரி விவகாரத்துடன் முடிச்சுப்போட்டு சில விஷயங்கள் தி.மு.க தலைமைக்கு வந்துள்ளன. இதையடுத்தே, ‘பா.ஜ.க தந்த அழுத்தத்தாலேயே இப்படியொரு யோசனையைச் சொல்லி, தன்னைச் சுற்றலில் விட்டுவிட்டாரோ?’ என்ற சந்தேகத்தில் ஜெகத்தை இடிபோல கடிந்துகொண்டாராம் ஸ்டாலின்.’’

“சரி இதனால், பா.ஜ.க-வுக்கு என்ன லாபம்?”

“லாபம் இல்லாமலா… புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியை உடைக்கலாம். புதுச்சேரி காங்கிரஸிலிருந்து அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜ.க பர்ச்சேஸ் செய்துவிட்ட நிலையில், காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி இல்லை என்கிற பிம்பத்தை ஏற்படுத்தி, கூடுதலாக சிலபல தலைகளை இழுக்கலாம் என்பதே அந்தக் கட்சியின் கணக்கு.”

‘‘சரிதான்… தேனி தி.மு.க-வில் பஞ்சாயத்து பலமாக இருக்கிறதுபோல!’’

“தேனி மாவட்ட தி.மு.க-வைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் கழக துணைப் பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. தற்போது, தேனி வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ஐ.பெரியசாமிக்கும் போடி, பெரியகுளம் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் மோதல் வெடித்துள்ளது. தன் மகன் செந்தில்குமாரைவைத்து பெரியகுளம் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஆயத்தமாகிறாராம் பெரியசாமி. எல்லை தாண்டிய தீவிர பாலிடிக்ஸால் அப்செட்டான தங்க தமிழ்ச்செல்வன், ‘என் மாவட்டத்துக்குள்ள யாருக்கு சீட் கொடுக்கணும்னு நான்தான் தீர்மானிக்கணும்’ என்று மல்லுக்கட்டுகிறார்.”

மிஸ்டர் கழுகு:  “முதல்வர் அருகில் நிற்க வைக்கிறோம்!” - தூள் கிளப்பும் வசூல் வேட்டை...

“கொங்கு மண்டலத்தில் ராகுல் விசிட் ரகளையாகக் களைகட்டியிருக்கிறதே!”

“ஆமாம். உண்மையிலேயே ரகளைதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில், இந்தமுறை ராகுலின் பயணத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணித் தலைவர்கள் மரியாதை நிமித்தமாகக்கூட கண்டுகொள்ளவில்லை. ராகுலும் அதற்கெல்லாம் அசரவில்லை… கேஷுவலாக டீ ஷர்ட், ஜீன்ஸ் சகிதம் வந்தவர் படுகர் இன மக்களுடன் நடனமாடுவது, குழந்தைகளைக் கொஞ்சுவது, பாட்டிமார்களை அரவணைப்பது, மக்களுடன் செல்ஃபி எடுப்பது என்று அடித்து ஆடினார். அவிநாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே திடீரென்று டீக்கடை ஒன்றில் காரை ஓரங்கட்டச் சொல்லிவிட்டாராம் ராகுல். பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமல்லாமல், யாருமில்லாத டீக்கடையில் போனை நோண்டிக்கொண்டிருந்த டீக்கடை ஓனரும் திணறிவிட்டாராம். ராகுல் டீக்கடைக்குள் நுழைந்ததும், அதிர்ச்சியில் உறைந்த டீக்கடைக்காரருக்கு கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை. ராகுல் வந்ததும் கடைக்கு கூட்டம் வந்துவிட்டது. ஒருவழியாக அங்கிருந்த அனைவரிடம் சகஜமாகப் பேசிவிட்டே கிளம்பினார் ராகுல்.”

மிஸ்டர் கழுகு:  “முதல்வர் அருகில் நிற்க வைக்கிறோம்!” - தூள் கிளப்பும் வசூல் வேட்டை...

“ராகுல் பேச்சை மொழிபெயர்ப்பதில் வழக்கம்போல சொதப்பிவிட்டார்கள்போல…”

“அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள்… கடந்த காலங்களில் கட்சிக்காரர்கள் சொதப்பிவிட்டார்கள் என்று இந்தமுறை ஈரோடு கூட்டத்துக்கு கல்லூரிப் பேராசிரியரான முகமது இம்ரான் என்பவரை அழைத்து வந்தார்கள். ராகுல் பேசியபோது பல இடங்களில், ‘என்ன, என்ன?’ என்பதுபோலக் கேட்டவர், ஒருகட்டத்தில் மயக்கம்போட்டு மேடையிலேயே விழுந்துவிட்டார். கட்சிக்காரர்கள் அவரைக் தூக்கிக்கொண்டு போனார்கள். தாராபுரம் கூட்டத்தில் ராகுல், ‘நாக்பூர் நிக்கர் வாலாக்கள்’ என்று சொல்ல… பீட்டர் அல்போன்ஸோ, அதை ‘லிக்கர்’ என்று நினைத்து, ‘நாக்பூர் சாராய வியாபாரிகள்’ என்று மொழிபெயர்க்க… கூட்டத்திலிருந்தவர்கள் விழிபிதுங்கியதுதான் மிச்சம்… அதேசமயம், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அண்ணா, பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செய்து, திராவிடக் கட்சிகளுக்கு ஜெர்க் ஏற்படுத்தவும் தவறவில்லை ராகுல்.”

“சரிதான்… நடிகர் கருணாஸ் ரத யாத்திரையை போலீஸ் தடுத்து விட்டதாமே?’’

‘‘வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்பதால், அவருக்குப் போட்டியாக பல்வேறு அமைப்பினரும் அவரவர் சமூகம் சார்ந்து கோரிக்கைவைக்க ஆரம்பித்துள்ளார்கள். சுபாஷ் பண்ணையார் தலைமையில் நடந்த பனங்காட்டு மக்கள் கழகத்தின் விழாவில், ‘நாடார் சமூகத்தினருக்கு 15 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று தீர்மானம் இயற்றியுள்ளனர். இந்தநிலையிலதான், முக்குலத்தோர் சமுதாயத்துக்கு 25 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, சென்னையிலிருந்து பசும்பொன் வரை ஜனவரி 24-ம் தேதி ரத யாத்திரையை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனர் நடிகர் கருணாஸ் தொடங்கினார். இந்த யாத்திரையைத்தான் திண்டிவனம் அருகே போலீஸ் தடுத்துவிட்டது’’ என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘முதல்வர் பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தில் கரைவேட்டிகள் கல்லாகட்டுவதைப் போல, அதிகாரிகளும் கல்லாகட்டுகிறார்களாம். முதல்வர் பாதுகாப்புக்காக அவருடன் செல்லும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர், முதல்வர் பிரசாரம் செய்யும் ஒவ்வொரு பாயின்ட்டையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்கிறார்களாம். பிறகு, ஒவ்வொரு பாயின்ட்டுக்கும் மாவட்டச் செயலாளர், தொகுதி எம்.எல்.ஏ., கட்சி சீனியர்கள் என்று பலதரப்பினரிடமும் ஒரு தொகையை ‘அன்பாக’ப் பேசியே கறந்துவிடுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. கோவையில் சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறார். பதிலுக்கு, ‘உங்களை சி.எம் பக்கத்துல போட்டோவுக்கு ஏத்த மாதிரி எவ்வளவு கஷ்டப்பட்டு நிக்க வெச்சிருக்கோம். நாங்க 36 பேர் இருக்கோம், இதெல்லாம் பத்தாது’ என்று வம்படியாகப் பேசி மேற்கொண்டு தொகையைக் கறந்திருக்கிறார்கள். அதேபோல, எம்.எல்.ஏ சீட்டுக்கு முயலும்

அ.தி.மு.க சீனியர் ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கறந்திருக்கிறது இந்தக் கும்பல்’’ என்றபடி சிறகை விரித்தார்.

குட்கா வழக்கு… விரைவில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை?

குட்கா வழக்கில் சட்டவிரோத பணபரிவர்த்தனைகளை விசாரித்துவந்த மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், தங்கள் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை ஜனவரி 19-ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். அதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவின் பெயரும் இருந்தது. இன்னொரு பக்கம், சி.பி.ஐ ரெய்டில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் சி.பி.ஐ தாக்கல் செய்யும் இறுதி குற்றப்பத்திரிக்கையில் இடம்பெறும் என்கிறார்கள். பா.ஜ.க-வுடன் சீட் பேரத்தில் அ.தி.மு.க முரண்டு பிடித்தால், சி.பி.ஐ-யின் இந்தக் குற்றப்பத்திரிகை மிகவும் சீரியஸாக இருக்கும் என்கிறது டெல்லி வட்டாரம்!

%d bloggers like this: