அமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்!

விஷ்ஷ்க்க்…” என்ற சத்தம். சிறகுகளைப் படபடத்தபடி வந்தமர்ந்தார் கழுகார். நெய்முறுக்கைக் கைநிறைய நீட்டினோம். “ஸ்பெஷலாக எதுவும் இல்லையா?” என்று பொய்க்கோபம் காட்டிய கழுகார், முறுக்கை நொறுக்கியபடியே சசிகலாவின் அரசியல் நகர்வுகள் தொடர்பான கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “கச்சிதமாக இருக்கிறது… ஆனாலும், இதில் சொல்லப்படாத சில விவகாரங்களைச் சொல்லட்டுமா?” என்றபடி கெத்தாக செய்திகளுக்குள் நுழைந்தார்.

“கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே பல அமைச்சர்களின் துறைகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் முதல்வர் பழனிசாமி. குறிப்பிட்ட தொகைக்கு அதிகமான ஒப்பந்தங்கள், முதல்வரின் கண்ணசைவு இல்லாமல் கடுகளவும் நகரவில்லை. அதிகாரம் பறிபோவதால் ஆத்திரத்திலிருந்த சில அமைச்சர்கள், சமீபத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் புலம்பித் தீர்த்துவிட்டார்களாம். குறிப்பாக, தென்மாவட்ட அமைச்சர்கள் சிலர், ‘சசிகலா வெளியே வந்தால் நாம் வேறு மாதிரியான முடிவுகளை எடுத்தாக வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருப்பவர்களுக்குச் சிக்கல் இல்லை… நம் நிலையை யோசித்துப் பாருங்கள்’ என்று கவலையுடன் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பன்னீர், ‘அமைதியாக இருங்கள். நடப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். தேவையான நேரத்தில் நல்ல முடிவை எடுக்கலாம்’ என்று அனுப்பிவைத்தாராம். இந்தத் தகவல் எடப்பாடிக்கும் எட்டியதால், அமைச்சர்களைச் சரிக்கட்டும் வேலையை அவர் ஆரம்பித்திருக்கிறாராம்.”

“ம்ம்ம்… அவரும் எத்தனை பேரைத்தான் சரிக்கட்டுவார்… பெங்களூரில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரனை, பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தரப்பினர் சந்தித்ததாக ஒரு தகவல் கசிகிறதே?”
“என் காதுக்கும் அந்தத் தகவல் வந்தது. கடந்த வாரம் பெங்களூரில் சி.டி.ரவியின் ஆட்களைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் தினகரன் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அ.தி.மு.க – அ.ம.மு.க இணைப்பு தொடர்பாகத்தான் பேசப்பட்டது என்கிறார்கள். தினகரன் தரப்பில், ‘எடப்பாடி தனது சுயநலத்துக்காகக் கட்சிகளின் இணைப்பைத் தடுக்கிறார்’ என்று கொந்தளித்தார்களாம். அதற்கு சி.டி.ரவி தரப்பினர், ‘இரண்டு கட்சிகளும் தனித்தனியாக நின்றால், அது தி.மு.க-வுக்குச் சாதகம் என்றே ஐ.பி ரிப்போர்ட் அளித்திருக்கிறது. இதனால்தான், டெல்லி மேலிடம் இரண்டு கட்சிகளும் இணைவதை விரும்பி, சில மூவ்களை மேற்கொண்டது. சசிகலா தமிழகம் திரும்பிய பிறகு நடக்கும் அரசியல் மாற்றங்களைப் பொறுத்து அடுத்த முடிவுகளை டெல்லி மேலிடம் எடுக்கும். அதுவரை பொறுமையாக இருங்கள்’ என்று சொன்னார்களாம். ‘இரு கட்சிகளின் இணைப்புக்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றால், அவரை எப்படி வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்கிறது பா.ஜ.க.”
“சசிகலா மீது டெல்லிக்கு அதிருப்தி இருப்பதாகச் சொல்லப்பட்டாலும்… ஓட்டுக்காக இறங்கிவரத்தானே வேண்டும்… தி.மு.க-வில் தேர்தல் பணிகள் களைக்கட்டிவிட்டன போலவே…”

“பணிகளை ஜரூராக ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலரது தொகுதிகளைக் குறிவைத்து வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறதாம். வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக தயாநிதி மாறனை நியமித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். கரன்சி விஷயத்தில் வேலுமணிக்கு நெருக்கடி கொடுக்க தயாநிதிதான் சரியான நபர் என்பதால் இந்த ஏற்பாடாம். பழனிசாமியைத் தோற்கடிக்க எடப்பாடி தொகுதியின் வியூகப் பொறுப்பு, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விராலி மலை தொகுதியில் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி கொடுக்க பசையான பார்ட்டியைக் களத்தில் இறக்கவும் தயாராகிவருகிறது அறிவாலயம். தி.மு.க-வினருடன் ஐபேக் நிறுவனமும் களப்பணியை வேகப்படுத்தியிருப்பதால், அமைச்சர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது. இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த அமைச்சர் ஒருவர், தி.மு.க-வுக்குத் தூதுவிட்டிருக்கிறார்.”
“அடேங்கப்பா… யார் அந்த அமைச்சர்?”
“டெல்லிவரை சர்ச்சைக்குப் பெயர்போனவர்தான். அவர்மீது பல வழக்குகள் காலைச் சுற்றிய பாம்பாக இறுக்குகின்றன. சில தினங்களுக்கு முன்பாக அவரின் உதவியாளர் ஒருவர், அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்து தற்போது தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கும் ஒரு பிரமுகரைச் சந்தித்தாராம். ‘போகிற போக்கைப் பார்த்தால் அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது சந்தேகம்தான். அமைச்சர் தி.மு.க பக்கம் வரத் தயார். அப்படி வந்தால் என்ன தருவார்கள்?’ என்று பேரத்தை நடத்தியிருக்கிறார். அதற்கு, ‘தலைவர்கிட்ட பேசிட்டுத்தான் சொல்ல முடியும்’ என்று கூறிய அந்த முன்னாள் அமைச்சர், தகவலை தி.மு.க தலைமைக்கும் பாஸ் செய்தாராம்… ஆனாலும் அசராத அறிவாலயம், ‘அ.தி.மு.க அமைச்சருக்கு எப்படி இப்படியோர் எண்ணம் வந்தது?’ என்று சந்தேகத்துடன் இந்த விவகாரத்தின் பின்னணியை ஆராய்ந்துவருகிறதாம். பேச்சுவார்த்தை முற்றுப் பெறவில்லை… கிடப்பில் போட்டிருக் கிறார்கள்” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை அளித்தோம். டீயைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.
“அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் மகன் திருமண வரவேற்பு கோயம்புத்தூரில் ஜனவரி 26-ம் தேதி நடைபெற்றது. விழாவில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டது பலரையும் புருவம் உயர்த்தவைத்திருக்கிறது. கே.சி.பழனிசாமியிடம், ‘அ.தி.மு.க தலைமை உங்களைத் தொடர்ந்து புறக்கணிக்கிறது. நீங்கள் எங்கள் பக்கம் வந்தால், வேலுமணிக்கு எதிராக டஃப் ஃபைட் கொடுக்கலாமே… அவருக்கு எதிராகவும் உங்களையே களமிறக்குறோம்’ என்று ஸ்டாலின் தரப்பில் வலை வீசப்பட்டதாம். அதற்கு, ‘ஆரம்பத்திலிருந்து அ.தி.மு.க-வில் இருந்துவிட்டேன். இந்தக் கட்சித் தலைமையுடன் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு முடிவு கிடைக்காமல் எங்கும் நகர்வதாக இல்லை’ என்று மரியாதையுடன் மறுத்துவிட்டாராம் கே.சி.பி. இன்னொரு பக்கம் தங்களை விமர்சித்தவர் என்றும் பார்க்காமல், கே.சி.பி இல்ல விழாவுக்கு ஸ்டாலின் வந்ததே, கவுண்டர் சமுதாய மக்களிடம் தனது இமேஜை உயர்த்திக்கொள்ளும் யுக்திதான் என்றும் சொல்கிறார்கள்.”
“ஓஹோ… தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்படலாம் என்கிறார்கள். ஹன்ஸ் ராஜ் வர்மா ஜகா வாங்கிவிட்டாரோ?”
“கடைசி நேரத்தில் ஹன்ஸ் ராஜ் வர்மா பின்வாங்கிவிட்டார் என்கிறார்கள். ‘பதவிக்கே வந்தாலும் நான்கு மாதங்கள்தான் இருக்க முடியும். அதற்குள் எதற்காக தி.மு.க-வை பகைத்துக்கொள்ள வேண்டும்’ என்று சுதாரித்துவிட்டதாகத் தகவல். ராஜீவ் ரஞ்சன் ஏற்கெனவே பழனிசாமியின் செயலாளராகப் பணியாற்றியவர். நெடுஞ்சாலைத்துறையில் நடந்த சில வில்லங்க விவகாரங்களில் பழனிசாமியுடன் சேர்த்து இவரது பெயரும் அடிபட்டது. இந்தத் தொல்லையே வேண்டாம் என்றுதான் அவர் டெல்லிக்குச் சென்றார். இப்போது தேர்தல் நேரத்தில் தனக்கு நம்பிக்கையான ஒருவர் வேண்டும் என்பதற்காக, ராஜீவ் ரஞ்சனை தலைமைச் செயலாளர் பதவிக்கு முதல்வர் தரப்பு கொண்டு வந்திருக்கிறதாம்.”
“ம்ம்… ரஜினி அப்டேட்ஸ் ஏதாவது?”
“12 நாள்கள் பெங்களூருவில் நண்பர்களுடன் நேரம் கழித்துவிட்டு, சமீபத்தில்தான் சென்னை திரும்பியிருக்கிறார் ரஜினி. அடுத்த இரண்டு மாதங்களில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, உடல்நிலை பரிசோதனைக்காக ஏப்ரலில் அமெரிக்கா பறக்கவிருக்கிறாராம். இதனால், தேர்தல் நேரத்தில் ரஜினி தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை.”
“லதா ரஜினிகாந்த், தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக ரஜினி மன்ற பிரமுகர்கள் மத்தியில் பேச்சு கிளம்பியிருக்கிறதே?”

”அர்ஜுனமூர்த்தியின் தனிக்கட்சி அறிவிப்புக்குப் பின்னால் லதா இருப்பதாக ஒரு தகவல் ஓடுகிறது. தமிழகத்தில் ரஜினிக்கென்று 10 சதவிகிதம் வாக்குகள் இப்போதும்கூட இருப்பதாக லதா நம்புகிறாராம். இதற்காக அரசியலில் ரஜினிவிட்ட இடத்தை லதா நிரப்ப வேண்டுமென்று சிலர் அவருக்கு தூபமிட்டுள்ளனர். லேசான தயக்கம் இருந்தாலும்கூட… லதாவின் மனதில் கட்சி ஆரம்பிக்கும் ஆசை துளிர்விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக ரஜினி தடைபோட மாட்டார் என்கிற தைரியத்தில், சில மூவ்கள் ஆரம்பித்துள்ளன” என்று கிளம்பத் தயாரான கழுகார்,
“இரண்டு விஷயங்களைச் சொல்லிவிட்டு கிளம்புகிறேன். ஒன்று, மதுரை திருமங்கலம் அடுத்த டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டியிருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இந்தக் கோயிலை ஜனவரி 30-ம் தேதி பழனிசாமியும் பன்னீரும் திறந்து வைக்கிறார்கள். ‘இவர் நம்மையெல்லாம் மிஞ்சிவிடுவாரோ!’ என்று ஜெர்க் ஆன முதல்வரும் துணை முதல்வரும் உதயகுமார் மீது ஒரு கண் வைத்திருப்பதாகத் தகவல். இரண்டாவது, பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் கூடுகிறது. மகளிர் மனதைக் குளிர்விக்கும் சில முக்கிய அறிவிப்புகள் இந்தக் கூட்டத்தொடரில் இடம்பெறலாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: