பஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதி மற்றும் அதற்குமுன் பஞ்சாயத்து அப்ரூவல் என்கிற பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்ட மனைகள் மற்றும் மனைப் பிரிவுகள் மற்றும் அந்த மனைப் பிரிவுகளில் பதிவு செய்யப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்த 2017 நவம்பர் 3–ம் தேதி வரை அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டப்பட்டது. இந்த ஆணை 2018 நவம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டது. அப்படியும் பல லே அவுட்களில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு அங்கீகாரம் கேட்டு யாரும் விண்ணப்பிக்கவில்லை.

அதன் பிறகு, எந்த ஒரு அனுமதியற்ற மனைப்பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு மனையை வரன்முறை செய்வதற்கான விண்ணப்பம், மேலே குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்தக் குறிப்பிட்ட மனைப் பிரிவில் அமையும் எஞ்சிய விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனைகள் அனைத்தையும் எப்போது வேண்டுமானாலும் தனியாக விண்ணப்பம் செய்து கால தாமதத்துக்கான உரிய கட்டணம் செலுத்தி வரன்முறை செய்துகொள்ளலாம் என அரசு ஆணை வெளியிடப்பட்டது.

பஞ்சாயத்து மனை

இந்த நிலையில், வரன்முறைத் திட்டத்தின் கீழ் ஒரு மனைக்குக்கூட ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய தவறிய பல அனுமதியற்ற மனைப்பிரிவு உரிமையாளர்கள் மற்றும் கிரெடாய் உள்ளிட்ட வெவ்வெறு அமைப்புகள், பொதுமக்கள் நகர் ஊரமைப்பு இயக்குநரகத்திடம், கால அவசாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இது குறித்து டி.டி.சி.பி அதிகாரிகள் பலரிடம் கருத்துக் கேட்டார்கள்.
அதில், திட்டகால அவகாசம் முடிவுறுவது பற்றிய விழிப்புணர்வு பஞ்சாயத்து மனைகளை வாங்கிப் போட்டவர்களுக்கு இல்லை. மேலும், இந்தக் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் எனப் பலரும் இருந்ததால், விண்ணப் பிக்கத் தவறிவிட்டனர் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, 2021 ஜனவரி 25-ம் தேதி அன்று, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ‘‘அங்கீகாரமற்ற மனை மற்றும் மனைப் பிரிவுகளை விவரம் தெரியாமல் வாங்கியவர்களுக்காகவும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைப்படி தங்களுடைய அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறை செய்ய தவறியவர்களுக்காகவும் மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில், 2016 அக்டோபர் 20-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த மனைப்பிரிவில் அமைந்த விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த, அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு எந்தவித மாற்றமும் இல்லாமல் 2021 பிப்ரவரி 28-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கூறும்போது, “இந்த அரசு ஆணை 2021 ஜனவரி 25-ம் தேதி வெளியாகி இருக்கிறது. ஆனால், 28-ம் தேதி வரைக்கும் ஆன்லைன் மூலம் பணம் கட்டும் வசதி செயல் பாட்டுக்கு வரவில்லை. தமிழ்நாடு முழுக்க பல லட்சக்கணக்கான அனுமதியற்ற மனைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், லே அவுட்களில் விற்பனையாகாமல், பத்திரம் பதிவு செய்யப்படாமல் லட்சக் கணக்கான மனைகள் கிடக் கின்றன. இவற்றையெல்லாம் வரன்முறை செய்ய இந்த ஒரு மாத கால அவகாசம் போதாது என்றே சொல்ல வேண்டும்.
மேலும், பல அரசு அலுவலகங்களில் ஆள் பற்றாக் குறை தலைவிரித்தாடுகிறது. அரசுப் பணியாளர்கள் எவ்வளவு வேகமாக வேலை பார்ப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இது போன்ற ரியல் எஸ்டேட் அப்ரூவல் விஷயங்களுக்கான ‘சிறப்பு நடைமுறைகள்’ பற்றி அனைவருக்கும் தெரியும். இந்த அப்ரூவலைப் பெறுவதற்குள் எத்தனை நாள்கள் மெனக்கெட வேண்டும், எவ்வளவு பணம் செலவாகும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும்” எனப் புலம்பி தீர்த்தார்.
சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், “பஞ்சாயத்து அப்ரூவல் என்கிற பெயரில் பலரும் லே அவுட் போட்டு, அந்த மனைகளைப் பத்திரம் பதிவு செய்யும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு, பலரும் சம்பாதிக்க வழிவகை செய்துவிட்டு, இப்போது பொதுமக்களை அனுமதி வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? பத்திரம் பதிவு செய்யும் போதே இதைச் செய்திருந்தால், இந்தச் சிக்கல் வந்திருக்காது. அரசு அதன் வருமானத்தைப் (பத்திரப் பதிவுக் கட்டணம்) பார்த்ததே தவிர, பொது மக்களின் கஷ்டத்தைப் பார்க்க வில்லை” என்றார்.
அனுமதியற்ற பஞ்சாயத்து மனைகளைத் தமிழகம் முழுக்க கிராமப்புறங்களில் வாங்கிப் போட்டிருப்பவர்களில் பலர் இப்போது பெரிய நகரங்களில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். ஏராளமானவர்கள் வெளி நாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் இந்த அப்ரூவல் வேலையைச் செய்வதில் நிச்சயம் சிக்கலைச் சந்திப்பார்கள். எனவே, அரசு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். அல்லது இந்தத் திட்டத்தை நிரந்தரத் திட்டமாக்கிவிட்டு, விற்கும்போது அல்லது வீடு கட்டும்போது கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என விதிமுறை கொண்டு வர வேண்டும்.
அனுமதி அளிக்கும் நடைமுறையில் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள். இதையெல்லாம் தீர்க்கும் விதமாக விதிமுறைகளை எளிதாக்குவதோடு, நியாயமான குறை தீர்வு அமைப்பு ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்பது பெரும்பாலான பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இருந்தாலும், இது போன்ற வாய்ப்பை மீண்டும் அரசு அளிக்குமா என உறுதியாக தெரியாது. லே அவுட் போட்டவர்களும் அனுமதியற்ற மனைகளைப் பத்திரப் பதிவு செய்திருப்பவர்களும், தங்கள் மனைகளுக்கு ரூ.500 செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவு செய்து வைப்பதே நல்லது.

எதன் அதிகாரத்துக்குக் கீழ் வருகிறது?

தமிழ்நாட்டில் மனைப் பிரிவுகளுக்கு சி.எம்.டி.ஏ (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) மற்றும் டி.டி.சி.பி (நகர் ஊரமைப்பு இயக்குநரகம்) அங்கீகாரம் வழங்கி வருகின்றன. இவை தவிர, பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தலைவர்களின் ஒப்புதல் பேரில் பஞ்சாயத்து அப்ரூவல் என்கிற பெயரிலும் வீட்டு மனைகள் போடப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இந்த பஞ்சாயத்து அப்ரூவல் செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உங்களின் அனுமதியற்ற மனை மற்றும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் வீட்டுடன் இருந்தாலும், உங்கள் மனை சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி எதன் எல்லைக்குள் வருவது என்பதைக் கவனித்து அதற்கு ஏற்ப விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். இதுபோக வரன்முறைப்படுத்தும் கட்டணம் தனியே செலுத்த வேண்டும். ரூ.500 பணம் கட்ட வேண்டிய ஆன்லைன் லிங்க்: http://www.tnlayoutreg.in/

%d bloggers like this: