சண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி?

குடும்பத்தின் ஆரோக்கியம் தொடங்கும் இடம் சமையலறை. அதைச் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் வைத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். சுத்தமான சமையலறையில் சமைக்கும்போது சுவையும் கூடும். சமையல் வேலை ரசனையானதாக மாறும்.

அதற்கு பாத்திரங்களைப் பராமரிப்பதும் அவசியம் என்று சென்ற சண்டே ஸ்பெஷலில் பாத்திரங்களும் பராமரிப்பும் குறித்து பேசியிருந்தோம். அடுத்து, சமையல் செய்யும்போது தேவைக்கு உதவும் பாத்திரங்களைச் சரியான முறையில் அடுக்கிவைத்து பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

* தேய்த்து வைத்த பாத்திரங்களை ஈரம் போக காய்ந்த பிறகே, எடுத்து அதற்காக நீங்கள் ஒதுக்கிய இடத்தில் அடுக்க வேண்டும்.

* பாத்திரங்கள், கண்ணாடி – பீங்கான் பாத்திரங்கள், டீ கப்ஸ், ஸ்நாக்ஸ் போட்டு வைக்கும் டப்பாக்களுக்கு எனத் தனியே இடம் ஒதுக்கிவைத்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

* சமையலறையில் அதிகமான பாத்திரங்கள் இருக்கக் கூடாது. தேவையான பாத்திரங்களும், அவற்றுக்குப் பொருத்தமான மூடிகளும் இருந்தால் சிறிய கிச்சனாக இருந்தாலும், பார்க்க விஸ்தாரமாகத் தெரியும்.

* உப்பு கொட்டி வைக்கும் டப்பாக்கள் மற்றும் ஜாடிகளைக் கீழ் தட்டில் வைக்கலாம். பொடி வகைகளை ஒரு தட்டிலும், மளிகை சாமான்களை நடு மற்றும் மேல்தட்டுகளிலும் வைக்கலாம்.

* நறுக்கத் தேவையான கட்டர், பலகை, கத்தி, கத்தரிக்கோல், சீவும் கருவி, துருவும் கருவி இவற்றை சமையலறையின் ஓரத்தில் வைக்க வேண்டும். சில நேரம் இவற்றை எடுக்கும்போது, தவறுதலாக கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டியது முக்கியம்.

* ஸ்பூன், கரண்டி, பிளாஸ்டிக் ஸ்பூன்ஸ் போன்றவற்றைத் தனியாகவும், தட்டுகள், கிண்ணங்களைத் தனியாகவும் அளவுக்கு ஏற்ப அடுக்கலாம். அந்த ஸ்டாண்டு நம் கைக்கு எட்டும் இடத்தில் இருப்பது நல்லது. மாடுலர் கிச்சன் எனில், தேய்த்து, துடைத்த பிறகே அடுக்குவது சிறப்பு.

* சாதத்துக்கு, பால் காய்ச்சுவதற்கு, சாம்பார் – ரசம், பொரியல் என நான்கு கரண்டிகள் மற்றும் தோசை திருப்பி ஒன்று போதும். கண்ணை மூடிக்கொண்டு உபயோகிக்காத, தேவையில்லாத பாத்திரங்களை கொலு பொம்மைகளை பேக் பண்ணி மேலே போட்டு வைப்பதுபோல் இல்லாமல், தேவையானவர்களுக்குக் கொடுத்துவிடுவது நல்லது. அதிக பாத்திரங்களைத் தேய்க்கும் வேலை மிச்சமாகும்.

* பழைமை மாறாத வீடுகளில் சாமான்களைப் போட்டு வைத்துக் கொள்ள எவர்சில்வர் டப்பா (சம்படம்)கள் வைத்திருப்பர். சிறிய குடும்பம், அவ்வப்போது சாமான்களை வாங்குபவர்கள் எனில், பெரிய டப்பாக்களைத் தவிர்த்து, ஒரு மாதத்துக்குத் தேவையான அளவுள்ள டப்பாக்கள் இருந்தால் போதும். குறைந்த அளவு பாத்திரங்களுடன்கூடிய நல்ல விஸ்தாரமான சமையலறை நாம் நேசிக்கும் இடமாகிவிடும்.

%d bloggers like this: