வாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக ! ரசிக்கும் பாஜக !!

இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் தங்களுக்கு “பிரகாசமான எதிர்காலம்” என்பதால், அதிமுக – திமுக இடையே இதுவரை இல்லாத அரசியல் மரண யுத்தம் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. அதிமுக-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி அன்று, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய சோரகையில் உள்ள அருள்மிகு சென்றாயப் பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து தனது சொந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். இதற்காக அவருக்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளார். இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் அதிமுக உள்ளதாலும், மத்திய அரசின் தயவு உள்ளதாலும் இப்போது வெற்றி பெறுவது எளிது. இந்த முறை கோட்டை விட்டால், இனி எப்போது ஆட்சிக்கு வருவோம் என தெரியாது என்பதால், அதிமுகவும், முதல்வர் எடப்பாடியும் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டனர். மேலும், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது அப்போது கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், அதிமுக அமைச்சர்களை தோற்கடிக்க வேண்டும் என டார்கெட் வைத்தார்.

மேலும், ’சட்டமன்றத் தேர்தலையொட்டி, அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற இணையதள பிரச்சாரத்தையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். “அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று தொடங்கி வைத்த 24 மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் “அதிமுகவை நிராகரித்ததாக” இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வந்தார். அப்போது, மக்களின் குறைகளை கேட்டறிந்து வந்தார். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொது மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்க்க தனி இலாகா அமைத்து தீர்வு காணப்படும் என கூறி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

ஏற்கனவே, இரண்டு முறை ஆட்சியை பறிகொடுத்த திமுக, இந்த முறை தோற்றால் மூன்றாவது முறையாக, அதாவது ஹாட்ரிக் தோல்வியாக கருதப்படும். மேலும், கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகள் அதிமுக, பாஜகவுக்கு ஜம்ப் ஆகும் வாய்ப்பும் அதிகம். கருணாநிதி போல், மு.க.ஸ்டாலினால் கட்சியை நடத்த முடியவில்லை என்ற ஆதங்கம் உள்ள நிலையில், நடிகர் உதயநிதியால், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா என கேள்வி கேட்கின்றனர். கருணாநிதி என்ற மாபெரும் ராஜதந்திரி இல்லாமல் திமுகதேர்தலை சந்திக்கிறது. இதனால், திமுக தனது ஆதரவாக, ஐபேக் என்ற அரசியல் கன்சல்டன்ஸியுடன் கை கோர்த்து களமிறங்கியுள்ளது.

ஆக, மொத்தம் இந்த முறை அதிமுக வென்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக கருதப்படும். அதே போல, தப்பித்தவறி திமுக தோற்றுவிட்டால், அது ஹாட்ரிக் தோல்வியாகவே கருதப்படும். எனவே, அரசியல் யுத்த களத்தில் திமுகவும், அதிமுகவும் சர்வ வல்லமையுடன் மோதி வருகிறது.

இந்த காட்சிகளை மத்தியில் உள்ள பாஜக தலைமை மிகவும் ரசித்து வருகிறதாம். காரணம், அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்களின் ஜாதகமும், குடுமியும், மத்திய ஏஜென்ஸியில் பலரது மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தங்களை மீறி எதுவும் நடக்காது என பாஜக மிக தெம்பாக உள்ளதாம். ஆக, தமிழக அரசியல் களம் யுத்த களமாகவே மாறிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: