காங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ?

சட்டசபை தேர்தலில் வலிமையான கூட்டணியாக இருந்து வரும் திமுக அணியில் தொகுதி பங்கீடு விவகாரம்தான் மிக பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி உறுதி என்கிற பெரியண்ணன் மனோபாவத்தில் திமுக இருக்கிறது. மக்கள் கிராமசபை கூட்டங்களை நடத்தி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், இப்போது முதல்வர் என்கிற தோரணையிலேயே பேசிவருகிறார்.

இந்த ஓவர் கான்பிடன்ஸ் அணுகுமுறையை அப்படியே கூட்டணி கட்சிகளிடம் திமுக காட்டி வருகிறது. திமுக ஆட்சியில் அமையும்; நமது கட்சியிலும் சில பல எம்.எல்.ஏக்கள் உருவாக வாய்ப்பு கிடைத்துவிட்டது என நினைத்து கொண்டிருந்த அத்தனை கூட்டணி கட்சிகளின் கனவிலும் லாரி லாரியாக மண்ணை அள்ளி போட்டு வருகிறது திமுக.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதலே தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒருவித கமுக்கத்துடன் இருந்து வருகிறது. இருந்தபோதும் குறைந்தபட்சம் 25 தொகுதிகளாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் திமுக தரப்பு மிக அதிகபட்சமாக 15 தொகுதிகள்தான் தர முடியும் என கூறிவிட்டது.

திமுகவின் இந்த போக்கை ஏற்றுக் கொள்வதா? இல்லையா என தெரியாமல் தமிழக காங்கிரஸ் முழித்துக் கொண்டிருக்கிறது. இத்தகவல் டெல்லிக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. வரும் 14-ந் தேதி தமிழகம் வருகை தரும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான ஆலோசனைக்குப் பின் காங்கிரஸ் கட்சி இறுதிகட்ட முடிவை எடுக்க வாய்ப்பிருக்கிறது.

இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் சிபிஎம், சிபிஐ இரண்டுமே தலா 15 சீட் கேட்டிருக்கின்றன. ஆனால் சிபிஎம் கட்சிக்கு 5; சிபிஐக்கு 4 என மொத்தம் 9 இடங்கள்தான் இம்முறை என திமுக சொல்லிவிட்டதாம். இவ்வளவு குறைவான தொகுதிகள எப்படி நாங்கள் ஏற்க முடியும்? என ஜெர்க் ஆகியிருக்கின்றனர் தோழர்கள். லோக்சபா தேர்தலில் நாங்கல் தாராளமாக சீட் கொடுத்ததையும் நினைத்து பாருங்கள் என ஹிண்ட் கொடுத்திருக்கிறதாம் திமுக.

மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா 2 சீட் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் அதிருப்தியில்தான் உள்ளனர். ஆனாலும் இதுவரை கூட்டணியை விட்டு வெளியேறுவதில்லை என்பதிலும் உறுதியாக உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில் 2 இடங்கள் என சொல்லப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுகவுக்கு அலை சாதகமாக இருக்கலாம் என்பதாலேயே இதுவரை இந்த கறார் தொகுதி ஒதுக்கீட்டை விமர்சிக்காமலேயே இருக்கின்றனவாம் கூட்டணி கட்சிகள்

%d bloggers like this: